காட்டின் கலைக் களஞ்சியம் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கௌடா

விருது பெறும் துளசி கௌடா

கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 – 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் (8 / 9-11-2021) நேற்றும் இன்றும் வழங்கப் பட்டன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை உரியவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். நேற்றைய தினம் வழங்கப்பட விருது விழாவில், அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தவர்தான் துளசி கௌடாதான். காரணம், வெறுங்காலுடன் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டதுதான். கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் ஒரு இயற்கை ஆர்வலர். பழங்குடிப் பெண். வயது 72. இவரைக் ‘காட்டின் கலைக்களஞ்சியம்’ என்று பெருமையுடன் அழைக்கிறார்கள் கர்நாடக மக்கள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாராட்டு பெறுதல்

மரக்கன்று நடுவது இவருக்குப் பிடித்தமான ஒன்று. தன்னுடைய 12வது வயதிலிருந்தே மரம் நடுவதை வழக்கமாக்கிக் கொண்டவர். நட்ட மரங்களை தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கன்றுகளை நடவு செய்திருக்கிறார். எத்தனை மரக்கன்றுகளை நட்டாலும், அவற்றின் சிறப்பு பற்றி துளசிக்கு நன்றாகத் தெரியுமாம்.

அதுமட்டுமல்ல, இந்த மரக்கன்றுகளை இளைய தலைமுறையும் நட வேண் டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். அதற்காகவே, இன்றைய இளைஞர்களுக்கு காடுகள், தாவரங்கள் குறித்த பாடங்களைக் கற்றுத் தருகிறார் துளசி கௌடா. அந்த வகையில்தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

மேடையேறி விருதை பெறும்போதுதான் அனைவரும் ஒன்றை கவனித்தனர். நாட்டின் உயரிய விருதை வாங்க வரும் துளிசி கௌடா, காலில் செருப்பு போடாமல் வந்திருக்கிறார். வரிய நிலையிலும் இயற்கையைப் பராமரிக்கும் துளசி கௌடாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. யார் இந்த துளசி கௌடா?

ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் துளசி கவுடா. படிப்பறிவற்ற, மிகச் சிறிய வயதிலேயே தற்காலிகத் தொழிலாளியாக வனத்துறையில் சேர்ந்தார். துளசி கௌடாவின் அர்ப்பணிப்புப் பணிகளையும், நாற்றுப் பண்ணைகளில் விதைகளை விதைக்கும்போது நேர்மையான சேவையையும் வனத்துறை அங்கீகரித்து இவருக்கு நிரந்தர வேலை வழங்கியது.

14 ஆண்டுகள் துறையில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்ற துளசியின் இயல்பு மற்றும் அதன் பாதுகாப்பு மீதான அன்பு குறையவில்லை. வறுமையில் வளர்ந்த இவர், வளமான நிலம் தரிசாக மாறுவதைத் தடுக்க தனது வாழ்நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்துள்ளார். ஓய்வுக்குப் பிறகும், வாழ்வாதாரத்திற்காக மிகக் குறைந்த ஓய்வூதியத்தை நம்பியிருக்கும்போதும், ​​தனது சுற்றுப்புறங்களில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கையை மேம்படுத்தினார்.

சுற்றுச்சூழல் அழிவு குறித்து சீற்றத்தை வெளிப்படுத்துகிறார் துளசி கவுடா. மேலும், எதிர்கால சந்ததியினருக்கு அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார். வனச்செல்வத்தை கொள்ளை கொள்வதை இவர் எச்சரிக்கிறார். அகாசியா போன்ற வருவாய் ஈட்டும் மரங்கள் இயற்கைக்குத் தீங்கு விளை விப்பதாக உணர்ந்த கூறுகிறார்.

தாவரங்களைப் பற்றிய பரந்த அறிவைக் கொண்டுள்ள துளசி, அரிய வகை மூலிகைகள் பற்றியும் அதிகம் அறிந்துள்ளார். ஆரம்பத்தில் தேக்குத்  தோட்டத்தில் ஆர்வம் கொண்ட இவர், அத்தி, பலா, நந்தி மற்றும் பிற பெரிய மர வகைகளைப் பற்றி மேலும் அறிய தனது சொந்த முயற்சிகளை மேற்கொண்டார். வனத்துறை வல்லுநர்கள் இவரது பலவிதமான தாவரங்களைப் பற்றிய மிகப் பெரிய அறிவைக் கண்டு வியப்படைகிறார்கள். தாவரங்கள், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் பயன்பாடு பற்றிய இவரது ஏராளமான அறிவு இவரைச் சந்தித்த பலரை ஆச்சரியமடையச் செய்கிறது.  

துளசி கௌடா இந்திரா பிரியதர்சினி வரிச்சா மித்ரா விருது, 1999இல் ராஜ்யோத்சவ விருது, கவிதா நினைவு விருது மற்றும் இந்தாவாலு எச் ஹொன்னய்ய சமாஜ் சேவா விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

துளசி கௌடாவின் சுற்றுச்சூழல் மீதான அன்பைப் பற்றி மேலும் அறிய மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் ஹொன்னல்லி மற்றும் அங்கோலாவுக்கு வருகிறார்கள். அவர் அவர்களை திறந்த கைகளுடன் வரவேற்று, புதிய தலைமுறையினருடன் தனது அறிவைப் பகிர்ந்து கொள்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...