வரலாற்றில் இன்று – 26.08.2021 திரு.வி.கல்யாணசுந்தரம்
கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகத்திறன் கொண்டவரும்,’தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்’ என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். இவருக்கு அரசியல் குருவாக திலகர் இருந்தார்.
சென்னையில் 1918ஆம் ஆண்டு முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920ஆம் ஆண்டு நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.
இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார்.
இவரே தன்னுடைய பெயரை ‘திரு.வி.க.’ என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 1953ஆம் ஆண்டு மறைந்தார்.
அன்னை தெரசா
அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபிலில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் ‘ரோஜா அரும்பு’ என்று பொருள்)
இவர் 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செம்டம்பர் 5ஆம் தேதி மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.
முக்கிய நிகழ்வுகள்
1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19வது திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தது.
1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் Sigmund Jahn சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.