அந்தாதிக் கதைகள் – 7 | பிரபு பாலா

 அந்தாதிக் கதைகள் – 7 | பிரபு பாலா

தோழிகள்

ங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.”

கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில் இரண்டுநாள் தளர்த்தி போக்குவரத்தை திறந்துவிட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை நிறைத்திருந்தார்கள். நிரந்தர வருமானமில்லாத அடித்தட்டு மக்களும் பேச்சுலர்களும்தான் அதிகம் இருந்தார்கள்.

அபிராமிக்கு ஆம்னி பஸ் கிடைக்கவில்லை. கூட்டத்தில் நுழைந்து சீட் பிடிக்கும் நுட்பம் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக அவள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கே வந்து நின்றது திருச்சி செல்லும் அந்த அரசு பஸ். அபிராமி பின்னால் ஓடிவந்த கூட்டம் தானாக அவளை பஸ்சுக்குள் தள்ளிவிட்டது. இருக்கையில் இடம் பிடித்தது மட்டுமே அவள் சாமர்த்தியம்.

பஸ் ஏறும்போது கழட்டி வைத்திருந்த ஃபேஸ் ஷீல்டை மறுபடியும் அணியும் போது செல்போன் அழைத்தது. சட்டை பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்தாள். கல்பனா அமெரிக்காவிலிருந்து வாட்சாப் காலில் அழைத்தாள். ப்ளூடூத் ஹெட் போனை ஆன் செய்தாள்.

“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.” கல்பனாவின் பேச்சில் கோபம் தெறித்தது. “படிச்சவதானே நீ. கொரோனா உச்சத்தில் இருக்கும்போது இப்படி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போறது எவ்வளவு முட்டாள்த்தனம்னு தெரியாது?”

“தெரியுது. என் நலனைவிட வினிதாவுக்கு நல்லபடியா பிரசவம் ஆகணும்னு நம்ம ஊர் மகாசக்தி மாரியம்மன் கிட்ட வேண்டிக்க போய்ட்டிருக்கேன். அந்த அம்மனைப் பத்தி உனக்கே நல்லா தெரியும். ரிமோட் பிரேயர் எல்லாம் அவகிட்ட வேலைக்காகாது. நேர்ல போய் வேண்டி நமக்குப் புடிச்சதை அவ கோவில் உண்டியல்ல போட்டாத்தான் வேண்டுதலை உடனே நிறைவேத்துவா.” என்றாள் அபிராமி சீரியஸாக.

கல்பனா எரிச்சலானாள். “எங்களுக்கெல்லாம் உன்னை நினைச்சு எவ்வளவு பயமா இருக்கு தெரியுமா… அட்லீஸ்ட் கார்லயாவது போக முடியாதா?”

“லாங் ட்ரைவ் பழக்கமில்லைடா. ஆக்டிங் ட்ரைவர் கிடைக்கலை. பெரம்பலூர்ல இறங்கி அங்கிருந்து கால் டாக்சி பிடிச்சிக்கறேன்.” பஸ்ஸில் இரைச்சலாக இருந்ததால் சத்தமாக பேசினாள் அபிராமி.

“நீ பேசுறது சரியா கேக்கலை. ஊருக்கு போயிட்டு கால் பண்ணு. டேக் கேர்.” என்றாள் கல்பனா.

பஸ் நகர ஆரம்பித்தது. அபிராமியின் நினைவுகள் பின் நோக்கி நகர ஆரம்பித்தன.

ல்பனாவும் அபிராமியும் எல்.கே.ஜி முதல் ஒன்றாக படித்தார்கள். வினிதா மூன்றாம் வகுப்பில் இவர்களுடன் இணைந்தாள். அபிராமியின் அருகில் அமர்ந்திருந்த வினிதா இரண்டு நாட்கள் யாரிடமும் எதுவும் பேசவில்லை.

மூன்றாவது நாள்… முதலில் பேசியது,

“நீ ஏன் மோதிரத்தை செயின்ல மாட்டியிருக்க..?”

“இது எங்கம்மா மோதிரம். அவங்க சாமிகிட்ட போயிட்டாங்க. அவங்க நியாபகமா இது என் கூடவே இருக்கனும்னு எங்கப்பா போட்டுவிட்டார்.”

ஒவ்வொரு வருடமும் அடுத்த வகுப்பு செல்லும் போதும் ஒரே வகுப்பு கிடைத்தது இவர்கள் கொடுப்பினை.

மேல் வகுப்பு செல்லும் போதுதான் அவர்களின் குடும்ப பின்னணி தெரிந்தது. கல்பனாவின் அப்பா உரக்கடை வைத்திருந்தார். அபிராமியின் அப்பா கூட்டுறவு வங்கியில் வேலை செய்தார். வினிதாவின் அப்பா டால்மியா சிமெண்ட் பாக்டரியில்…

வீடு தெரிந்தது. குடும்பம் இவர்களுடன் பழகியது. தீபாவளி பொங்கலுக்கு திருச்சி சென்று புதுத் துணி வாங்குவார்கள். வெள்ளிக்கிழமை மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு மூவரும் மட்டும் செல்வார்கள்.

அபிராமி வளர வளர அம்மாவின் மோதிரம் அளவு சரியாக இருந்ததால் விரலில் போட்டுகொண்டாள்.

“எனக்கும் இதே மாதிரி மோதிரம் போட்டுக்கணும்னு ஆசையா இருக்குடி” என்றாள் வினிதா ஒரு முறை மூவரும் க்ரூப் ஸ்டடி செய்யும் போது.

ப்ளஸ் டூவில் மூவரும் சராசரியாக ஒரே அளவில் மதிப்பெண் எடுத்தார்கள். திருச்சியில் ஒரே எஞ்சினியரிங் காலேஜில் ஒரே குரூப் கிடைத்தது.

எஞ்சினியரிங் முடித்ததும் வேலை இவர்களை பிரித்தது. கல்பனாவுக்கும் அபிராமிக்கு கேம்பஸில் இருவேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. வினிதாவுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் எந்த நிறுவனமும் வேலை கொடுக்கவில்லை.

அந்த இரண்டு பெரிய நிறுவனங்களின் சென்னை கிளையிலேயே அபிராமிக்கு கல்பனாவுக்கும் வேலை கிடைத்தது.

“நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறேன். நானும் சென்னை வந்து ஏதாவது வேலை தேடிக்கறேன்.” என்றாள் வினிதா.

அந்த நேரம்தான் வினிதாவின் அப்பாவுக்கு எதிர்பாராதவிதமாக நெஞ்சுவலி வந்தது. பைபாஸ் சர்ஜரி செய்தார்கள்.

“எனக்கென்னமோ பயமா இருக்கு. நான் உயிரோடு இருக்கும் போதே உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்படறேன்ம்மா. உன் விருப்பத்துக்கு வேலைக்கு முயற்சி பண்ணு. என் விருப்பத்துக்கு உனக்கு மாப்பிள்ளையும் பார்க்றேன்ம்மா.” என்றார் வினிதாவின் அப்பா.

“சரி. ஆனா சென்னையில இருக்கற மாப்பிள்ளை மட்டும் பாருங்கப்பா.” என்றாள் வினிதா.

எதிர்பார்ப்புக்கேற்ற சென்னையில் வேலை செய்யும் பிரபாகர் கிடைத்தான்.

திருமணத்திற்கு வினிதா விரும்பிய, அபிராமியின் அம்மாவின் மோதிரம் டிசைனில் ஒரு மோதிரம் பரிசளித்தார்கள் அபிராமியும் கல்பனாவும்.

அதை ரிசப்ஷன் மேடையிலேயே அணிவித்து “அபிராமி மாதிரி நீயும் இந்த மோதிரத்தை எப்பவும் கழட்டக்கூடாது.” என்றாள் கல்பனா.

ஸ் உளுந்தூர்பேட்டையில் நின்றது. மீண்டும் கிளம்பும்போது இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.

அபிராமியும் கல்பனாவும் ஒரே ஃபிளாட்டில் தங்கியிருந்தார்கள். வினிதா, பிரபாகர் வேறு அப்பார்ட்மென்டில் குடியிருந்தார்கள். தினமும் கான்பரன்ஸ் கால், வீடியோ கால், வார இறுதியில் அவுட்டிங் என்று சில மாதங்கள் இனிமையாக நகர்ந்தன.

வினிதா கர்ப்பமானாள். உறுதியானவுடன் கல்பனாவும் அபிராமியும் தினமும் வினிதா வீட்டிற்கு வந்து பார்த்துக்கொண்டார்கள்.

அப்போதுதான் கல்பனாவை ஒரு வருடம் டெபுடேஷனில் அமெரிக்கா அனுப்ப அவள் வேலை செய்யும் நிறுவனம் விரும்பியது.

கல்பனா மறுத்தாள். “எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. ஒரு வருஷம்தானே. சீக்கிரம் போய்டும். போயிட்டு வாடி.” வினிதாவும் அபியும் கட்டாயப்படுத்தி அனுப்பினார்கள்.

வினிதாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல்தான் சென்றது ஏழாவது மாத செக்கப் செல்லும் வரை.

பஸ் பெரம்பலூரில் நின்றது. அபி கூட்டத்தில் நசுங்கி வெளியேறும்போது என்95 மாஸ்க் கழன்று விழுந்தது. ஃபேஸ் ஷீல்டு எங்கே போனதென்று தெரியவில்லை. பையில் வைத்திருந்த இன்னொரு மாஸ்க்கை அணிந்துகொண்டாள்.

அதிசயமாக பெரம்பலூரில் கால் டாக்சி சுலபமாக கிடைத்தது.

பரமசிவபுரம் நோக்கி டாக்சி விரைந்து கொண்டிருந்தது. பிரபாகரனுக்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள் அபி. வேண்டாம். கோவிலுக்குப் போய் வேண்டுதல் முடித்து செய்து கொள்ளலாம்.

எட்டாவது மாத செக்கப் முடிந்து டாக்டர், “ப்ளட் பிரஷர் 180 – 150 இருக்கு. கர்ப்பகாலத்தில் இப்படியாகறதை ப்ரீக்லாம்ப்சியான்னு சொல்வாங்க. உடனே டெலிவரி பண்ணிடறது நல்லது. டெலிவரி லேட் பண்ணினா மதர் கிட்னியை மோசமா பாதிக்கும். குழந்தைக்கும் ஆபத்து. டெலிவரி வரை க்ளோஸ் மானிட்டர்ல இருக்கணும்.”

உடனே ஐசியுவில் சேர்க்கப்பட்டாள் வினிதா.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் இருந்தது தமிழ்நாடு.

ஹாஸ்பிடல் ரிசப்ஷனில் மாஸ்க் அணிந்து அமர்ந்திருந்த அபிராமி மஹாசக்தி மாரியம்மனிடம் வினிதாவுக்கு பிரசவம் நல்லபடி நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த போது ரிசப்ஷன் டிவியில் செய்தி சேனலில் “அடுத்த இரண்டு நாளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வரும். இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துகள் செயல்படும்” என்று செய்திவாசிப்பாளர் சொன்னது காதில் விழுந்தது.

அபிராமி தன்னுடைய பயணத்தை சொல்லவும் எல்லோரும் நேரிலும் போனிலும் திட்டினார்கள். அபிராமி பரமசிவபுரம் செல்வதில் உறுதியாக இருந்தாள்.

“எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” என்றாள் வினிதா.

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அதுக்குதான் கோவிலுக்கு போறேன். அந்த மஹா சக்தி மாரியம்மன் நம்மையெல்லாம் காப்பாத்துவா.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அபிராமி.

டாக்சி பரமசிவபுரத்தில் நின்ற போது காலை ஆறுமணி. அழகான இளஞ்சிவப்பு விடியல். இந்த அழகான விடியல் போல் எங்கள் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

கோவில் எளிமையாக இருந்தது.

ஏற்கனவே சொல்லி வைத்ததால் பூசாரி அங்கே வந்துவிட்டார். “கோவில் திறக்கக்கூடாதுங்கறது சொன்னதால் அரசு விதி. உன் நிலைமையை சொன்னதால் அதிகாரிகிட்ட சொல்லி திறக்கிறேன். பூஜை பண்ணமுடியாது. தப்பா நினைக்காதேம்மா” என்றார் பூசாரி.

பூட்டப்பட்ட கிரில் கேட்டுக்குள் இருந்த மஹாசக்தி மாரியம்மனை மனமுருக வேண்டினாள் அபிராமி. சட்டென்று இதுநாள் வரை அவள் உடலை தீண்டிக்கொண்டே இருந்த அவள் அம்மாவின் மோதிரத்தை கழட்டி உண்டியலில் போட்டாள். பூசாரிக்கு நன்றி சொல்லிவிட்டு கோவிலிலிருந்து கிளம்பினாள்.

அப்பா அம்மாவிடம் பேசினாள். ‘பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ததால் வீட்டுக்கு வரவில்லை. நேரே சென்னை செல்கிறேன். இன்னொருமுறை வருகிறேன்.’ என்றாள்.

பிரபாகரிடம் பேசினாள். சிசேரியனுக்கு தயாராவதாக சொன்னான். வாட்ஸப் காலில் கல்பனாவிடம் பேசினாள்.

அந்த டாக்சி ட்ரைவர் சென்னை வந்து ட்ராப் செய்ய சம்மதிக்க, அந்த டாக்சியிலேயே சென்னை வந்தாள் அபிராமி. நேரே ஹாஸ்பிடல் வந்து இறங்கியபோது மதியம் இரண்டு மணி.

ரிசப்ஷனில் பிரபாகர் சந்தோசமாக வரவேற்றான்.

“ப்ளஸ்ட் கேர்ள் பேபி. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. உனக்கு தகவல் சொல்ல நிறைய தடவை கூப்பிட்டேன் அபி. நெட்ஒர்க் ரீச் ஆகலை. ட்ராவலிங்கில் இருந்ததால் நினைக்கிறேன்.”

அபிராமி சந்தோசத்தில் துள்ளி குதித்து பிரபாகரின் கை குலுக்கி வாழ்த்தினாள்.

டுத்த பதினைந்தாவது நாள்… அபிராமி இருமினாள். பேசும்போது மூச்சு திணறியது. உடல் நெருப்பில் இருப்பது போல் இருந்தது. பெரம்பலூரில் இறங்கும் போது தவறிய மாஸ்க்குக்கு பதில் அவள் அணிந்த இன்னொரு மாஸ்க் இன்னும் டஸ்ட்பின்னில் இருந்தது.

கொரோனா கிருமிகள் அவள் நுரையீரலை ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.

மறுநாள் அபிராமி ஹாஸ்பிடல் ஐ.சி.யு வென்டிலேஷனில் இருந்த போது, வினிதா வீட்டில் பிரபாகர் லேப்டாப்பில் பரமசிவபுரத்திற்கு ஈ-ரிஜிஸ்ட்ரேஷன் அப்பளை செய்து கொண்டிருந்தான்.

“டெலிவரியாகி பதினைஞ்சி நாள்தான் ஆச்சு. பச்ச உடம்பு. இப்போ பரமசிவபுரம் கண்டிப்பா போகணுமா, வினிதா?” என்று கேட்டான் பிரபாகர்.

“ஆமாம். அபிராமி குணமாகணும்னு ஒரு வேண்டுதல்” என்றாள் வினிதா. கல்பனா, அபிராமியால் அவள் திருமணத்திற்கு பரிசளிக்கப்பட்ட அபிராமி அணிந்திருந்த டிசைன் மோதிரத்தை வருடிக்கொண்டே.

ganesh

2 Comments

  • Super

  • நட்பின் சிற்ப்பை அருமையாக அழகாக விவரிக்கும் கதை. பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...