பத்துமலை பந்தம் | 7 | காலச்சக்கரம் நரசிம்மா
7. ஒன்று இரண்டானதென்ன..?
பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது.
“எரிக்..! எனக்கு அந்த ஆளை பார்க்கறப்ப, மனசுல எதோ நெருடல் ஏற்படுது. அவனோட பார்வையும் நடவடிக்கையும் சந்தேகமா இருக்கு..! நாம பீஜிங் வந்த விமானம் ரெண்டு மூணு முறை அப்படியே குலுங்கி கீழே இறங்கின போது பயணிகள் எல்லோரும் அலறினாங்க..! ஏன்… நாங்களே பயந்துட்டோம்..! எதனால அந்த மாதிரி ஆச்சு..?”
“ஒண்ணுமே ஆகலை, மயூரி..! சில சமயம் காத்து இல்லாத இடத்துல, இப்படித்தான் ஏர் பாக்கெட்ஸ் உண்டாகும். அந்த ஏர் பாக்கெட்ஸ்-சை கடக்கும்போது, விமானம் அப்படியே தொப்புனு கீழே இறங்கும். திரும்பி காற்றுள்ள பகுதிக்கு வர்றப்ப சரியாகிடும். ரெண்டு மூணு தடவை ஏர் பாக்கெட்-சைக் கடந்ததால அந்த மாதிரி ஆச்சு..! பரவாயில்லை..! பஸ்ட் ஆபிஸர் குகன்மணி நல்லாவே நிலைமையைக் கையாண்டான்.” –கேப்டன் எரிக் கூற, அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.
“அவனது பார்வையில் ஒரு வித சூன்யம் இருக்கு, எரிக்..! வெறிச்சுப் பார்க்கறப்ப பயமா இருக்கு..! நம்மோட இதயத்தைப் பிளந்துக்கிட்டு பார்க்கிறா மாதிரி ஒரு பார்வை. எனக்கு இந்த டின்னருக்கு வரவே பிடிக்கலை. அவன் அகம்பாவத்தோட பேசறான். நானும் பிளைட் அட்டெண்டன்ட் தானே… அதைக்கூட பார்க்காம, காக்பிட் உள்ளே நுழைஞ்சதுக்கு எதுக்கு அப்படிச் சத்தம் போடணும்..? ஹோட்டல்ல டின்னர்னு நினைச்சுத்தான நான் கிளம்பி வந்தேன்..? அவன் வீட்டுக்குப் போகணும்னு முன்னாடியே சொல்லியிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்..!” –எரிக்கின் பார்வையைத் தவிர்த்தபடி வெளியே வெறிக்கத் தொடங்கினாள் மயூரி..!
“குகன்மணிகிட்டே எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை மயூரி..! ஜஸ்ட் அன் என்டர்பிரைசிங் கய்..! கனவுகள் நிறைய உள்ளவன்..! சாதிக்கணும்னு நினைக்கிறான். பூமியில இருக்கிறதை விட பறக்கிறதுல ஆர்வமா இருக்கான். அவன் கிட்டே உனக்கு ஏன் இவ்வளவு வன்மம்..?” –எரிக் கேட்டான்.
மயூரி பதில் கூறவில்லை. அவளது செவிகளில், விமானத்தில் பயணித்த சீனக் கிழவி போ கைஹங் நடுங்கும் குரலில் கூறிய சேதி ஒலித்தது.
“என்னோட பெண் பயணம் செய்த MH 370 விமானம் கூட ரெண்டு முறை இப்படிக் குலுங்கியதாக கடைசியா எனக்கு மொபைல் போன்ல கூப்பிட்ட என் பெண் சொன்னாள். அப்புறம் எனக்கு அவகிட்டருந்து போன் வரலை. விமானத்துக்கும் கண்ட்ரோல் ரூமோட தொடர்பு போச்சு..!”
போ கைஹங் அந்தப் பயணம் முழுவதும், காணாமல் போன எம்எச் 370 விமானத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.
“எரிக்..! நான் கேட்கிற கேள்விக்கு தயவுசெய்து மறைக்காம பதில் சொல்லுங்க..! இமேல்டா ஆர்தர் என்கிட்டே, MH 370 விமானத்தை ஓட்டிய பாரிக் ஹமீது பற்றிக் கதை கதையாச் சொல்லியிருக்கா..! அவனுக்கும் குகன்மணியை போலவே 27 வயசு. இமெல்டா சொன்னதைப் பார்த்தா, விமானத்தை ஓட்டறதுக்கு முன்னாடி பாரிக்-கும் ஒரு மாதிரி வெறிச்சுப் பார்த்துகிட்டு யார்கிட்டேயும் பேசாம மௌனமா இருந்தாராம். குகன்மணியும் அப்படிதான் நடந்துக்கறான். சம்திங் ராங் வித் ஹிம்..!” –மயூரி, எரிக்-கை உறுத்து நோக்கினாள்.
“என்கிட்டே நார்மலாதான் பேசறான், மயூரி..! இப்ப டின்னருக்கு வந்து அவனோட பழகிப் பாரு..! உன்னோட எண்ணத்தை மாத்திக்குவே. சில விமானிகள், பயணிகளோட உயிருக்கு தாங்களே பொறுப்புங்கிறதால், பறக்கறப்ப சீரியசா இருப்பாங்க. நிலத்துல இருக்கறப்ப அவங்க வேற மாதிரிப் பழகுவாங்க.” –எரிக் கூறினான்.
“அவன் என்கிட்டே முரட்டுத்தனமா பேசினது நியாயம்னு நினைக்கறீங்களா, எரிக்..?” –மயூரி கேட்க, தலையசைத்தான்.
“உனக்கு தெரியுமா மயூரி..! எப்பவுமே பிளைட் கமாண்டர், அதாவது காப்டன் காஃக்பிட்ல இடது பக்கம்தான் உட்கார்ந்துப்பாங்க. பஸ்ட் ஆபீசர் வலதுபக்கம் உட்கார்ந்துக்கணும். ஆனா அவன் நேராப் போயி இடது பக்கம் உட்கார்ந்தான். நான்தான் பிளைட் கேப்டன் னு சொன்னதும், அலட்சியமா வலது பக்கம் சீட்டுக்கு மாறினவன், சொன்னான். ‘யார் எங்கே உட்கார்ந்தா என்ன..! நம்ம பிளைட்டுக்கு நீங்களோ, நானோ கமாண்டர் இல்லை. வாயு பகவான்தான் கமாண்டர்’னு சொன்னான்..! நான் அதை ஜோக்-கா எடுத்துக்கிட்டேன். பிரச்சனை ஆக்க நினைச்சிருந்தேன்னா அவனோட மல்லுக்கு நின்னு இருக்கலாம். டேக் ஆஃப் முன்னாடி மூட் கெடவேணாம்னு அனுசரிச்சுப் போனேன்..! முன்னூறு பேரோட உயிர் நம்ம பொறுப்புல இருக்குன்னு நினைப்பு இருந்தா, இந்தச் சின்ன விஷயம் எல்லாம் அடிபட்டுப் போயிடும்..! நீயும் அந்த மனோபாவத்தை வளர்த்துக்க…” –எரிக், மயூரியைச் சமாதானம் செய்தான்.
அதற்குமேல் மயூரி அமைதி காத்தாள். ஆனால் தான் குகன்மணியை அன்று மாலை ஹோட்டல் காரிடாரில் பார்த்தோம் என்பதை உறுதியாக நம்பினாள். காரிடாரின் முனையில் நின்று, இவளைச் சற்றுநேரம் வெறித்து பார்த்துவிட்டு, பிறகே குகன்மணி நகர்ந்து சென்றான். அந்தச் சில வினாடிகளில், இவள் அவன் முகத்தை நன்றாகவே கவனித்திருந்தாள். ஆனால் எரிக் அவன் ஹோட்டலில் தங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறுகிறான். டின்னரின்போது அவனிடமே இதைப் பற்றி கேட்டு விடுவது என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தாள், மயூரி.
ஷூன் ஹீ பகுதி..! பிரதான சாலையிலிருந்து டிராகன் உருவம் வடிக்கப்பட்டிருந்த நுழைவு வளைவுக்குள் கார் திரும்பியது. அந்தத் தனியார் சாலையில் ஊர்ந்தது. இருபுறமும் அடர்த்தியான மரங்களும், ஆங்காங்கே சிறு குளங்களும் இருந்தன. தோரண வாயிலில், டிராகன் பொம்மைக்கு கீழே ‘பத்து டமான்’ என்று மலாயா மொழியில் எழுதியிருந்தது.
“பார்த்தியா.! ரொம்ப பிஸியான பீஜிங் நகரத்துல, இந்த எஸ்டேட் தீவு மாதிரி இருக்கு..! இவ்வளவு பெரிய நந்தவனத்தோட மாளிகை வச்சிருக்கிற குகன்மணி எதுக்காக நம்ம ஹோட்டல்ல தங்கப் போறான்..? அவன் மாளிகையை பார்த்தா நீ மயக்கம் போட்டு விழுந்துடுவே..!” –எரிக் கூறினான்.
மயூரி பதில் கூறவில்லை.
“குகன்மணியின் இந்த எஸ்டேட்டுக்குப் பெயர் ‘பத்து டமான்..!’ பத்து என்றால் பாறை..! டமான் என்றால் தோட்டம்..! இந்த எஸ்டேட் பெயரை ராக் கார்டன் அதாவது பாறைத் தோட்டம்னு வச்சிருக்கான். அதற்கான காரணத்தை நீ உள்ளே போனதும் தெரிஞ்சுப்பே..!”
அவர்களது கார் நின்ற போர்டிகோவின் விஸ்தாரத்தைக் காணாது அயர்ந்து போனாள் மயூரி..! சீன, மலாயா மற்றும் தமிழ்க் கலாச்சாரங்களின் கலவையாகக் காணப்பட்டது, அந்த மாளிகை. காரிலிருந்து இறங்கியவள், போர்டிகோவில் நேர் எதிராக, பன்னீர்ச் சாரலாக நீரைத் தூவிக்கொண்டிருந்த அந்த நீரூற்றைப் பார்த்தாள். அந்த நீரூற்றின் மையத்தில் ஒரு மேடையில், ஆளுயர தங்க நிறத்தில் பத்து மலை முருகனின் சிலை நின்றிருந்தது. அதைக் கண்டதும் மயூரிக்கு தேகத்தில் ஒருவிதச் சிலிர்ப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரில் ஏர் ஹோஸ்டஸ் வேலை கிடைத்ததும், மலேசியா வந்திருந்தாளே தவிர, இன்னமும் பத்து மலை முருகனைத் தரிசிக்கவில்லை. மனதினுள் அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்திருக்க, நீரூற்றின் வண்ண விளக்குகளின் நடுவே, பத்து மலை முருகன் புன்னகையுடன் கையில் வேல் ஏந்தி நின்றிருந்தது, அவளைக் கிறங்க வைத்தது. அன்று விரதம் வேறு இருந்ததால், அந்தத் காட்சி அவளைச் சொக்கிப் போகச் செய்து விட்டது.
“குகன்மணியும் உன்னைப் போலத் தான். ஆழமான நம்பிக்கையாளன்..! பத்து மலை முருகன் பக்தன். எனவேதான் தன்னோட எஸ்டேட்டுக்கு ‘பத்து தோட்டம்’னு பெயர் வச்சிருக்கான்.” –எரிக் கூற, மயூரி அந்தச் சிலையையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். சிலையின் மீது மணம் வீசியபடி சந்தன மாலை ஒன்று காணப்பட்டது.
அவர்கள் சிலையை பார்த்தபடி நிற்க, அவர்கள் பின்பாக ஓசைப்படாமல் வந்து நின்றான், குகன் மணி.
“வெல்கம்..!” இதழ் ஓரங்களில் குறுநகை மிளிர, எரிக்கின் கரத்தைப் பற்றிக் குலுக்கியவன், மயூரியை நோக்கி இரு கைகளையும் கூப்பினான்.
மயூரி அவனை நோக்கிக் கரங்களை குவித்தவள், உறைந்து போனாள். அகன்று மாலை ஹோட்டலில் அவள் அவனைப் பார்த்த போது அணிந்திருந்த அதே வெள்ளை ஜீன்சும், சாக்லேட் நிற சட்டையும் அணிந்திருந்தான். இந்த அடையாளம் ஒன்று போதாதா, ஹோட்டலில் அவள் பார்த்தது, குகன்மணியைத்தான் என்பதற்கு…
உடனே எரிக்-கிடம் சொல்ல வேண்டும் என்று துடித்து எழுந்த நாக்கை அடக்கிக் கொண்டு, அவனை பின்தொடர்ந்தாள்.
“தாங்க்யூ மிஸ் மயூரி..! எனக்கு அலர்ஜி என்பதால் ஜாய் பெர்ப்ஃயூம் பூசிக்காமல் வந்ததற்கு..!” –என்று முதன்முறையாகப் பற்கள் தெரியச் சிரித்தான், குகன்மணி.
அவன் அவளிடம் ஜாய் பெர்ப்ஃயூம் தடவிக் கொள்ளாமல் வந்ததற்கு நன்றி கூறிக் கொண்டிருந்த அதே சமயம், அவளது புலன்கள் அவனிடம் வீசிக்கொண்டிருந்த நறுமணத் தைலத்தின் வாசத்தில் சிக்கிக்கொண்டன. மாலையில் காரிடாரில் நின்றிருந்தபோது, இவளைக் கடந்து சென்ற அதே நறுமணம். அவனை இவள் மாலை ஹோட்டல் காரிடாரில் கண்டது உண்மைதான் என்று ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். எரிக் நன்றாக ஏமாற போகிறான்..!
மாளிகையினுள் நுழைந்ததும் ப்ரமித்துத்தான் போனாள். பளிங்குக் கற்களால் தனது மாளிகையை இழைத்திருந்தான் குகன்மணி. பிரம்மாண்டம், விஸ்தீரணம், என்பதெல்லாம் குறைவான சொற்கள். மயன்புரி என்று கூறலாம்தான். கலை அம்சத்துடன் தனது மாளிகையை நிர்மாணித்திருந்தான். படாடோபம், ஆடம்பரம் என்கிற எண்ணம் எழாதபடி, கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. அவனுடைய மாளிகை பிரம்மாண்டமாக இருந்தது.
மயூரிக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. எங்கு பார்த்தாலும், கடவுளர்கள், தமிழ்நாட்டுக் கோவில்கள், அவ்வையார், வள்ளுவர் என்று தமிழ்நாட்டுக்குத் தொடர்பான ஓவியங்களும் படங்களும் அதிகமாகக் காணப்பட்டன. படங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தவள், ஒரு படத்தைப் பார்த்ததும், அதிர்ந்து போய் நின்றிருந்தாள். அந்த ஓவியத்தில் ஒரு மலை உச்சி காணப்பட்டது.
அதனை ப்ரமித்துப் பார்த்தபடி நின்றாள்.
எரிக் அங்கிருந்த சோபாவில் சரிய, குகன்மணி ஓவியத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மயூரியின் பக்கமாக வந்து நின்றான், குகன்மணி.
“நான் கோலாலம்பூரைச் சேர்ந்தவன்தான். என்னுடைய மூதாதையர்கள் வசித்த பகுதி இந்த மலைப்பகுதி. பத்து மலை ஏறினால், அமைதியாக ஒரு பாறையில் அமர்ந்து, மேற்கே இந்த மலையுச்சியைத்தான் மனக்கண்ணில் பார்த்துக்கொண்டிருப்பேன். இது எந்த இடம் தெரிகிறதா..?” –குகன்மணி கேட்டான்.
“இது எங்கள் போகர் பாசறை, கொடைக்கானல். இப்போது ‘குணா குகை’ என்று கூறுகிறார்கள்..! குணா என்று கமல்ஹாசன் நடித்த படம் இங்கே படமாக்கப்பட்டது..!” –மயூரி சொன்னாள்.
“பொருத்தம்தான். அந்த இடத்தில்தான் என்னோட மூதாதையர் வாழ்ந்தார். அவரோட பெயர் குணபரர்..! உனக்குத் தெரியுமா..?”
‘உனக்கு’ என்று அவன் ஒருமையில் அழைத்தது, அவளுள் ஒருவித உணர்வைத் தோற்றுவித்தது. எரிச்சலா அல்லது நெருக்கமா என்று இனம் காணமுடியாத ஒரு உணர்வு..!
“எனது தாத்தாவுக்குத் தெரிந்திருக்கலாம்..!” –மயூரி ஒப்புக்குக் கூறினாள்..!
“நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும். காரணம், எனது மூதாதையர் மிகவும் புகழ் பெற்றவர்..!” –தூய தமிழில் ஆங்கிலம் கலவாமல் பேசிய குகன்மணி, சோபாவை நோக்கிக் கைகாட்டினான்.
“உட்காரு மயூரி..!”
“ஒரு நிமிஷம்..! நீங்க இன்னைக்கு சாயந்தரம் நாங்க தங்கியிருந்த மில்லினியம் கிராண்ட் ஹோட்டலுக்கு வந்தீங்க இல்லியா..! காரிடார்ல நான் நின்னுக்கிட்டிருந்த போது உங்களைப் பார்த்தேன். நீங்களும், காரிடார் முனைக்கு போனதும், நின்னு என்னை பார்த்தீங்க..! கரெக்ட்டா..?” –மயூரி கேட்க, அவன் முகத்தில் வியப்பு.
“நோ சான்ஸ்..! நாளைக்கு மறுநாள் நான் முதல் தடவையா பிளைட் கமாண்டரா இருக்கப் போறதால, இன்னைக்கு முழுவதும், நான் என்னோட எஸ்டேட்-டை விட்டுப் போகவேயில்லை..! நீங்க வேறு யாரையோ பார்த்திருப்பீங்க.” –அலட்சியமாகக் கூறினான், குகன்மணி..!
“இல்லை..! இதே வெள்ளை ஜீன்ஸ். சாக்லேட் சட்டை..! இதே பெர்ப்ஃயூம் வாசம், நீங்க என்னை கடந்து போகறப்ப வீசியது..! அது நீங்கதான்..!”
“உன் கிட்டே நான் எதுக்கு பொய் சொல்லணும்..? நான் உங்க ஹோட்டலுக்கு வரவேயில்லை..!” –என்றபடி குகன் நகர்ந்து செல்ல, மயூரி திகைத்து போய் நின்றாள்.
ஒருவனால் எப்படி இரண்டு இடங்களில் இருக்க முடியும்..? ஒன்று இரண்டான மர்மம் என்ன..?
குகன்மணியின் அகன்று விரிந்திருந்த முதுகைத் தனது பார்வையால் துளைத்தபடி நின்றிருந்தாள், மயூரி.
4 Comments
அற்புதம்.முருகன் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டான் போலும்!
Interesting one sir
குகன் மணியிடம் புதைந்திருக்கும் மர்மம்தான் என்ன? அறிந்து கொள்ள தொடர்ந்து வாசிக்கிறேன்! அருமை!
Excellent writing…looking forward to the next episode