குறளின் குரல் – திருக்குறள்
அகம்பாவம் கூடாது…
ஒருநாள் பீமன் காட்டு வழியே செல்லும்போது ஒரு நீண்ட வால் சாலையின் குறுக்கே இருப்பதைக் கண்டான். ஒரு வயது முதிர்ந்த குரங்கு அருகில் இருந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தது. இந்த வால் அந்த குரங்கினுடையது தான்.
“ஏ குரங்கே! வழியில் உள்ள உன் வாலை மடக்கி எனக்கு வழி விடு.”, என்று பீமன் கூறினான்.
அதற்கு அந்த வயதான குரங்கு “எனக்கு வயதாகிவிட்டதால் நான் மிகவும் பலகீனமாக உள்ளேன். எனவே நீயே என் மீது இரக்கம் கொண்டு என் வாலை வழியிலிருந்து விலக்கிவிட்டு செல் ” என்று கூறியது.
உடனே கோபம் கொண்ட பீமன் “உன்னுடைய அழுக்கான வாலை நான் ஏன் தொட வேண்டும்? நீயே சீக்கிரம் உன் வாலை சுருட்டிக் கொண்டு ஓரமாக சென்று உட்கார்ந்துகொள்!” என்று மிரட்டினான்.
“சரி! அப்படியென்றால் உன் கதையைக் கொண்டு வாலை அப்புறப்படுத்து” என்று குரங்கு கூற, கதையினால் வால் துண்டிக்கப்பட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டான் பீமன். உடனே குரங்கு லேசாக சிரித்தபடியே “உனது கதை உடைந்து விட்டால்…?” என்று கேட்டது.
அந்த குரங்கு தன்னை கிண்டல் செய்வதை உணர்ந்த பீமன் தனது கதையினால் அதன் வாலை அகற்ற முயன்றான். ஆனால் அவனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதனால் கோபமுற்ற பீமன் கதையினால் அதன் வாலை ஓங்கி அடித்தான். இருந்தும் வால் அசையவில்லை. பீமன் தனது கதையை வாலின் அடியில் கொடுத்து தூக்க முயன்றான். தனது முழு பலத்தை உபயோகித்தும் அந்த வாலை அவனால் அசைக்கக் கூட முடியவில்லை. அவனுக்கு வியர்த்து கொட்டி மூச்சு வாங்கியது. இறுதியில் தனது கதையை எடுத்துக் கொள்ளலாம் என்று முயன்றபோது அதுவும் முடியவில்லை.
பீமன் தனது தவறை உணர்ந்தவுடன் அந்த குரங்கு தான் ஹனுமான் என்ற தன் நிஜ ரூபத்தை பீமன் காணும்படி செய்தது. பீமன் தனது தவறை உணர்ந்து இது சாமான்ய குரங்கல்ல என்பதை புரிந்து கொண்டான். பின் மிகுந்த அடக்கத்துடன் “மஹராஜ்! தாங்கள் யார்?” என்று கேட்க, “நான் தான் ராம பக்த ஹனுமான் !” என்று கூறியது.
ஹனுமான் தனது நிஜ ரூபத்தை பீமன் காணும்படி செய்தார். உடனே பீமன், “எனது பலத்தின் மீது நான் கொண்டிருந்த அகந்தை அகன்றது. என்னை மன்னித்து விடுங்கள்!” என வேண்டினான்.
ஹனுமாரும் பீமனை மன்னித்து ஆசிர்வதித்தார்.
“நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் மட்டும் இருக்கக் கூடாது”
குறள் :
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)
பொருள் :
உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.
நாம் எவ்வளவு படித்திருந்தாலும் நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் மட்டும் இருக்கக் கூடாது. அதுவே நம்மை வாழ்வில் கீழே தள்ளி விடும். இதைத்தான் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.