இளையராஜா ஓவியர் ஆன கதை..

 இளையராஜா ஓவியர் ஆன கதை..

முன்பெல்லாம் இருப்பதை அப்படியே அச்சடித்ததுபோல வரைபவர்கள் தான் ஓவியர்கள். அப்படி ஒரு ஓவியராக வேண்டும் என்றுதான் ‘ரியலிஸ்ட்டிக் ஓவிய முறையில்’ வரையத் தொடங்கினேன். இப்பவும் ஓவியக் கலையின் அடிப்படை யைக்கூட அறிந்துகொண்டதாக நான் உணர வில்லை.

ரெம்ப்ரான்ட்டின் லைட்டும், வெர்மியரின் டீட்டெயிலும் நான் இன்னும் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என என் மூளைக்குள் அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது!” – தன் அனுபவங்களைக் குழைத்து, வார்த்தைத் தூரிகையால் தன் பயணத்தைப் பதிவு செய்கிறார் ஓவியர் இளையராஜா.

சமீப நாட்களாக விகடனின் கதை, கவிதைப் பக்கங்களை அலங்கரிக்கும் புதிய தலைமுறை ஓவியர். மாநில விருது, லலித் கலா அகாடமியின் தேசிய ஃபெல்லோஷிப், உலகப் பிரசித்தி பெற்ற கேலரிகளில் கண்காட்சி என சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழர்!

”நான் இளையராஜா ஆனது எப்படி?”

”கும்பகோணம் அருகில் செம்பியவரம்பல்… என் பூர்வீகம். விவரம் தெரிந்த நாளில் இருந்தே எதையாவது வரைஞ்சுட்டே இருப்பேன். அப்பாவுக்கு, தச்சுத் தொழில். மாட்டுவண்டிகளுக்கான சக்கர வேலைகள் வரும். சக்கர வடிவத்தை முதலில் ‘ஃப்ரீ ஹேண்ட்’ ஆகப் பென்சிலில் வரைந்து, அதன் பிறகு உளிகொண்டு மரத்தைச் செதுக்கி, சக்கர வடிவத்துக்குக் கொண்டுவருவார் அப்பா. அதைப் பார்த்துட்டே இருப்பேன். என் ஏழு வயதிலேயே அப்பாவுக்குப் போட்டியாக நானும் சக்கரம் செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது எல்லாம், தூர்தர்ஷனில் நிஜந்தன், சுந்தரராஜன் போன்றவர்கள் செய்தி கள் வாசித்து முடிப்பதற்குள் அவர்களை நான் படமாக வரைந்துவிடுவேன். சாமி படங்கள், சினிமா நடிகர்கள் என வரைந்து கொண்டே இருந்தேன். படிப்பில் ஆர்வம் இல்லை. கால்பந்து விளையாடுவேன். என்.சி.சி-யில் இருந்தேன்.

துப்பாக்கி சுடுதலில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். எதிர்காலத்தில் நான் ஒரு ராணுவ வீரனாக வருவேன் என்று என் குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். பத்தாவது முடித்த நேரத்தில், என் ஓவிய ஆசிரியர் துரை, அமுதா டீச்சர் இருவரும்தான், ‘நீ ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படி. ஓவியத் துறையில் நீ நன்றாக வருவாய்!’ என்று நான் பயணிக்க வேண்டிய பாதையைக் காட்டினார்கள்.

வீட்டில் என் விருப்பத்தைச் சொன்னதும், ‘நீ ரோட்ல சுண்ணாம்பு அடிக்கத்தான் போற!’ என்று அதட்டினார்கள். அவர்களுடன் கோபித்துக்கொண்டு என் ஓவிய ஆசிரியர் வீட்டில் தங்கினேன். தற்போது கும்பகோணம் ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் மனோகரன் சார், அப்போது அந்தக் கல்லூரியில் வாத்தியாராக இருந்தார். அவரிடம் என்னை ஒப்படைத்தார் என் ஆசிரியர்.

ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். சிறு வயதில் இருந்தே மனித உருவங்களை வரைந்து வந்தேன் என்றாலும், கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் அனாடமி பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். கண்களையே ஸ்கேல் ஆக வைத்துக்கொண்டு மனித உடலை அளந்து வரையக் கற்றுக்கொண்டேன்.

கும்பகோணக் கல்லூரியில் படிப்பு முடிந்ததும் சென்னை ஓவியக் கல்லூரியில் முதுகலை படிக்க இடம் கிடைத்தது. அதே சமயம், ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. நான் முதுகலைப் பட்டப் படிப்பைத் தேர்வு செய்தேன். எங்கள் கல்லூரியில் லொகேஷன் பார்க்க கலை இயக்குநர் ஜே.கே. சாருடன் இயக்குநர் பார்த்திபன் வந்திருந்தார்.

அப்போது பத்து நிமிடங்களில் பார்த்திபனை ‘போர்ட்ரைட்’ வரைந்து கொடுத்தேன். பாராட்டியவர், சில நாட்கள் கழித்து என்னை அழைத்தார். ‘இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். ‘எதிர்கால இயக்குநர்கள்’ என்று டைட்டிலில் என் பெயர் வந்தபோது, அதுவரை நான் உணராத உற்சாகம்!

‘தலைவாசல்’ விஜய்யைக் கருணைக் கொலை செய்து அழும் சின்ன வயது பார்த்திபனாகவும் அந்தப் படத்தில் நடித்தேன். அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தபோது, என் அம்மாவுக்கு ‘ஸ்ட்ரோக்’ என்று ஊரில் இருந்து செய்தி. பார்த்திபன் சாரிடம் சொல்லவும், 50,000 ரூபாய் கொடுத்து, ஊருக்கு அனுப்பிவைத்தார். அம்மாவை அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன். அவர் உடல்நலம் தேறியதும், பார்த்திபன் சாரிடம் சென்று, ‘ஓவியத் துறையிலேயே இருக்க விரும்புகிறேன்!’ என்று நன்றி சொல்லி விடை பெற்றேன்.

இந்தக் களேபரங்களில், என் ஆறு மாதப் படிப்பு போய்விட்டது. நிறைய அரியர்கள். அவற்றை எல்லாம் மீண்டும் படித்துத் தேர்வுகள் எழுதி, முதுகலைப் படிப்பை முடித்தேன். ஒவ்வொரு ஓவியரும் தனக்கென்று ஒரு பிரத்யேக பாணியுடன் இருந்தார்கள். ஓவியத்தை வைத்து அவர் யாரென்று அடையாளம் காட்டிவிட முடியும். அப்படி, எனக்கான பாணி எது என்ற தேடலில் இருந்த காலம் அது. அப்போது, ஆனந்த விகடனில் பணியாற்றிய, இப்போதைய இயக்குநர் சிம்புதேவன் எனக்கு அண்ணன்போல இருந்து, என் மேல் கவனம் விழ பல உதவிகளைச் செய்தார்.

தொடர்ந்த தேடலில் எனக்கான பாணியை நான் கண்டடைந்தேன். இருப்பதை இருப்பது மாதிரியே வரைய வேண்டும். அந்த ரியலிஸத்தைக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்தேன். என் படங் களின் ‘சப்ஜெக்ட்’ எல்லாமே பெண்கள்தான்.

ஐந்து அக்கா, ஐந்து அண்ணன்களோடு பிறந்தவன் நான். அக்காக்கள் திருமணம் முடிந்து செல்ல, அண்ணன்கள் திருமணத்துக்குப் பிறகு அண்ணிகள் வருகை புரிந்தார்கள். துபாய், சவூதி என அண்ணன்கள் பறந்துவிட, தனிமையில் உருகிக்கொண்டும், சோகங்களை மனசுக்குள் புதைத்துக்கொண்டும் வளைய வந்த நான், என் அண்ணிகளைப் பார்த்தே வளர்ந்ததால் என் ஓவியங்களில் அவர்கள் இடம் பிடித்தார்கள்.

‘காத்திருப்பு…’ என் ஓவியங்களில் எப்போதும் நிறைந்திருக்கும் பின்னணி இதுதான்!

தன் வாழ்க்கை அனுபவம் ஒன்றை என் ஓவியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பரிமாற்றத்தை என் ரசிகர்களிடம் ஏற்படுத்த விரும்புகிறேன். இன்னும் பல நிலப்பரப்புகளின் அனுபவங்களை என் ஓவியங்களில் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பயண இலக்குதான் என் ஆத்ம திருப்தி!” புன்னகையுடன் ஃபைனல் டச் கொடுக்கிறார் இளையராஜா!

நன்றி :விகடன்

ஓவியர் இளையராஜா மறைந்தாலும் அவருடைய ஓவியங்கள் இன்னும் உயிரோடு…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...