வரலாற்றில் இன்று – 09.06.2021 கிரண் பேடி
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார்.
இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும் மக்கள் மேம்பாடுகளுக்காக விஷண் பவுண்டேசன், நவ்ஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.
1979ஆம் ஆண்டு காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது (Asia Region Award), பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
இவர் பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவையாற்றினார். 2016ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
ஜார்ஜ் ஸ்டீபன்சன்
ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.
இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.
மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829ஆம் ஆண்டு ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு வென்றது.
இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கல்வி கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1848ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.
1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.