இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)

 இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)

இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் மிக மோசமான ஒரு அரக்கன், அவன் இளையராஜா என்ற பெயரில் இசையமைக்கும் அரக்கன்..

இளையராஜா எழுபதுகளில் இருந்து இசையில் கோலோச்சிக் கொண்டு இருந்தாலும் நான் பிறந்தது என்னவோ எண்பத்து ஒன்றில்தான். அதற்கு பிறகு நான் என்னுடைய முழு ஆத்மாவையும் ஒன்றினைத்து எனக்கு பிடித்த இசையை கேட்பதற்கு தயாரானது தொன்னூறுகளில்தான். தொன்னூற்று மூன்றில்தான் என் வீட்டிற்கு மின்சாரமே வந்தது அது வரை மண்ணென்ணெய் விளக்குதான்..

வீட்டில் மின்சாரம் இல்லாத காலத்திலும் ஒரு சிறிய மர்பி டிரான்சிஸ்டர் இருந்தது.. வயிற்று சோறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த ரேடியோவிற்கு கட்டை (பேட்டரி) போடாமல் இருப்பது கிடையாது, முக்கியமாக அந்த ரேடியோவின் பணி என்னவென்றால் பீடி சுற்றும் தாய் மார்கள் ஒரு சிறிய வட்டமாக அமர்ந்து கதைகள் பேசியபடியே வேலை செய்வார்கள், அவர்கள் வேலையின் பளு தெரியாமல் இருப்பதற்கு எப்போதும் கூட்டாக அமர்ந்து பீடி சுற்றுவார்கள் அவர்களை வேளைக்கு வேளை நல்ல இசையால் நாடகத்தால் மகிழ செய்வதும் அவர்களின் களைப்பை நீக்குவதுமே அந்த மர்பி ரேடியோவின் பணி. அப்படியான அந்த ரேடியோவில்தான் நான் சிறுவயதில் பாடல்களை கேட்டேன், அதில் அந்த நேரத்தில் மொத்த தமிழ் ரேடியோவையும் ஆக்கிரப்பு செய்திருந்தது இரண்டு பேர்கள்தான் ஒன்று எம் எஸ் வி மற்றொன்று இளையராஜா.

இது என்னுடைய வீட்டில் நான் பாடல்கள் கேட்பது, ஆனால் இதை விட நான் அதிகமாக பாடல் கேட்டது எனது வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும் “மைதீன் பாய் டீ கடையின்” ரேடியோவில்தான் . ஒரு பிலிப்ஸ் ஸ்பீக்கர் வெளியே இருக்கும் அதில்தான் சத்தமாக நிகழ்சிகள் நடக்கும், (இன்னும் அதே ரேடியோ அதே இடத்தில்தான் இருக்கிறது) ஒரு டீக் கடையின் ரேடியோ மூலம் என்னுடைய சிந்தை முழுவதும் தன்னை காதலிக்கச் செய்தவர் இந்த இளையராஜா.

இப்படியாக நான் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை ரசிக்க தொடங்கும் போதே என்னையும் அறியாமல் நான் ராஜாவின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். வானொலியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பத்து பாடல்கள் ஒலிபரப்ப படுகிறது என்றால் அதில் எப்படியும் ஆறு பாடல்கள் இளையராஜாவின் இசையில்தான் இருக்கும்.. அப்புறம் படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து அனைத்து பாடல்களுமே இளையராவோடதுதான் அப்படி என்று ஆகிவிட்டது..

அப்புறம் சிறிது காலம் கழித்து என்னுடைய வீட்டில் ஒரு பானாசோனிக் டூ இன் ஒன் வந்தது அப்புறம் என்ன எல்லாம் நம்முடைய ராஜ்ஜியம்தான், கொஞ்சம் கொஞ்சமாக காசு சேமித்து கேசட் வாங்குவது ஒன்றேதான் எனது வேலையாய் வைத்திருந்தேன்.. காசு சேர்ப்பது (இல்லை எப்படியாவது காசு புரட்டுவது) அதை வைத்துக் கொண்டு கேசட் வாங்குவது இல்லையேல் பாடல் தேர்ந்தெடுத்து ஆடியோ கடைகளில் கொடுத்து பதிவது. இப்படி செய்து செய்து என்னிடம் ஏகப்பட்ட பாடல்களின் தொகுப்பை உருவாக்கினேன்.. இந்த தொகுப்புகளில் தொன்னூறுற்று ஐந்து சதவீதம் இளையராஜாதான்.. நான் பாடல் கேட்க ஆரம்பித்த சமயத்தில்தான் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருந்தது ஆனாலும் எல்லார் வீடுகளிலும் ஹிந்தி பாடல்கள் ஒலிக்காமல் இல்லை அதனால் என்னுடைய தொகுப்பிலும் கொஞ்சம் நல்ல ஹிந்தி பாடல்களும் இடம் பெற்றிருந்தது..

ஆயினும் நான் காலையில் எழுந்ததும் என்னுடைய சுப்ரபாதமாக ஒலிப்பது இளையராஜா அவர்களின் பாடலாகத்தான் இருக்கும் என்னுடைய தூக்கத்திற்கு தாலாட்டாகவும் இருப்பது இளையராஜாவின் பாடலாகத்தான் இருக்கும்..

நான் எப்போதும் படத்தையும் அதன் பாடல்களையும் நடிகர்களை பார்த்து வாங்குவதோ பதிவதோ கிடையாது, இளையராஜா என்று காசட்டின் மீது போட்டிருந்தால் வாங்கிவிடுவேன் அவ்வளவுதான். அந்த கேசட்டில் இருக்கும் மொட்டை தலையையே நான் பார்த்துக் கொண்டிருப்பேன் என் காதுகளில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும், எனக்கு தோன்றுவதெல்லாம் இது என்ன பாட்டு.?! இதை எப்படி செய்திருப்பார்.?! எப்படி நமக்கு இவ்ளோ போதை தருகிறது இந்த பாடல் ?! இது எப்படி சாத்தியம்?! என ஆயிரம் கேள்விகள் என்னுள் துளைத்துக்கொண்டிருக்கும், காதுகளின் துணையுடன் என் மனம் மட்டும் அந்த அரக்கனின் பாடலில் சிக்கி இருக்கும்.

அதிலும் இளையராஜாவே பாடலை பாடியிருந்தால் கேட்கவே வேண்டாம் அதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருப்பேன், (ஒரு கரகரப்பான கட்டை குரலுக்கு இவ்வளவு ஈர்ப்பு சக்தியா என தோன்றும்) எனக்கு ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விஷயத்தை சொல்லுவார் இளையராஜா. (அதே குரலில் நானும் பாட ஆசைப்பட்டு முயற்சித்தேன் என்பது தனி கதை)

இளையராஜா குடியிருக்கும் என் வீட்டில் கதவை திறந்து அண்ணன் ரஹ்மானும் வந்திருந்தார் ஆயினும் ராஜாவின் இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.. வீட்டிலேயே சமைத்து களைத்த மனைவி கணவனிடம் “வாங்க மச்சான் இன்னைக்கு ஹோட்டல்ல போய் சாப்பிடுவோமே” என்று ஆசைப்பட்டு வெளியே சாப்பிடும் அளவுதான் ஏஆர் ன் இசையை வைத்திருந்தேன் ஆனாலும் அந்த சாப்பாடு மிகவும் ருசியானது, தனித்தன்மை வாய்ந்தது என்பது நிதர்சன உண்மை.

எனக்கு இசையை கேட்க செய்தவர் இளையராஜா, எனக்கு இசையை கற்கலாம் என்று நினைக்கச் செய்தவர் இளையராஜா, அன்றிலிருந்து இன்றுவரை இளையராஜா இல்லாமல் இசையில்லை. இசையில்லாமல் நான் இல்லை.

இவ்வாறு என்னை கட்டிப்போட்டவரை அரக்கன் என்று தாராளமாய் சொல்லலாம் அல்லவா.? ஆம் அவர் இசையில் அரக்கன்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா இளையராஜா அவர்களுக்கு

–  நெல்லை இசையன்பன்

admin

2 Comments

  • மிக அருமையான பதிவு….மகிழ்ச்சி.

    • மிக்க நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...