ஆனந்தம் 20 ஆம் ஆண்டு | பிருந்தா சாரதி
இயக்குநராக இருபது ஆண்டுகளை நிறைவு செய்யும் என். லிங்குசாமிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
ஆனந்தம் 20 ஆம் ஆண்டு
2001 மே 25 ஒரு மறக்க முடியாத நாள். ஒரு இயக்குநராக நண்பர் லிங்குசாமியின் திரைப் பயணம் தொடங்கிய நாள். அதில் என் பங்கு வசனமும் இணை இயக்கமும். ஒரே அறைத் தோழர்களாக இருந்து நான்காண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி வளர்த்த கதை. லிங்குசாமி தன் குடும்பத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து வந்த கதையைத் திருச்சேறைக் காவிரிக்கரையில் வைத்துச் சொன்ன நாள் நினைவில் இன்னும் நிலைத்திருக்கிறது.
ஆற்றில் வெள்ளம் வடிந்து தண்ணீர் சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது. அவர் சொன்ன காட்சிகளில் காவிரி நீரின் ஈரம் சலசலத்து ஓடிக்கொண்டிருந்ததை என்னால் உள்ளுக்குள் உணரமுடிந்தது.
அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் சில வருடங்கள் அந்தப் படித்துறையில், லிங்குசாமி வீட்டில், சென்னை பேச்சிலர் அறையில், மாறி மாறிக் கிடைத்த தயாரிப்பு நிறுவனங்களின் அறைகளில் எனக் கதை வளர்த்தோம். கும்பகோணம், மதுரை, திருப்பதி, ஏற்காடு எனப் பல ஊர்களுக்கு அந்தக் கதையோடு பயணம் செய்தோம்.
நிறைய நண்பர்கள் வருவார்கள். அனைவருக்கும் சளைக்காமல் அக்கதையைச் சொல்லிக்கொண்டே இருப்பார் லிங்குசாமி. அந்த உணர்வில் நெகிழாமல் இருப்பது கடினம். எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் சில கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கும்.
எங்கள் இருவரின் குடும்பப் பின்னணியும் வியாபாரம் சம்பந்தப்பட்டவை என்பதால் எளிதாக லிங்குசாமியின் உணர்வோடு கலந்து காட்சிகளை உருவாக்கவும் வசனங்களை எழுதவும் முடிந்தது.
சில காட்சிகள் எங்கள் வீட்டில் நடந்தவையும் உண்டு. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்தின் நினைவு வரும். கதையின் யதார்த்தத் தன்மைதான் அதற்குக் காரணம்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் எங்கள் அப்பா கடை வைத்திருந்தார். திருச்சேறைக் கோவில் அருகில் லிங்குசாமியின் அண்ணன் கடை வைத்திருந்தார். ஆகவே இயல்பாகவே ஒரு கோவில் பின்புலம் திரைக்கதையில் அமைந்தது.
அண்மையில் ஆனந்தத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது எந்த எதிர்பார்புமின்றி திரைக்கதை எழுதிய நினைவுகள் வந்து போயின.
காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. லிங்குசாமி கதை சொன்ன படித்துறையும் சில வெள்ளங்களையும்
சில வறட்சிகளையும் பார்த்துவிட்டது. ஆனால் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது.
மம்முட்டி, ஸ்ரீவித்யா, முரளி, டெல்லி கணேஷ், தேவயாணி, ரம்பா , சிநேகா, அப்பாஸ், விஜயகுமார் எனறு மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு ஒரு இளம் புதுமுக இயக்குநர் காலம் கடந்து வாழும் ஒரு உணர்வுப் பொக்கிஷத்தை, பண்பாட்டு ஆவணத்தை உருவாக்கியபோது அவருடன் உடனிருந்து அதன் உருவாக்கத்தில் பங்குபெற்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததில் எப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. தமிழ்த்திரையில் எனக்கு ஏதாவது ஒரு அடையாளம் இருக்கிறது என்றால் அது ஆனந்தத்தால் வந்ததுதான்.
நண்பனாகவே இருந்தாலும் லிங்குசாமிக்குள் இருக்கிற படைப்பாளி மீது எனக்கு ஒரு வியப்பு உண்டு. அதனால்தான் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் பல ஏற்ற இறக்கங்கள் தாண்டியும் நட்பு நீடிக்கிறது.
ஆனந்தம் மலர்ந்து இருபது ஆண்டுகள் நிறைவடையும் இந்த இனிய நாளில் நண்பர் லிங்குசாமிக்கு என் வாழ்த்துக்கள். நண்பா இன்னும் பல சாதனைகள் புரிக.
உடன் இந்தப் படத்தை நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களுக்கு எப்போதும் போல் இன்றும் என் வணக்கம்.
பிருந்தா சாரதி,
திரை எழுத்தாளர்