அந்தாதிக் கதை | நர்மதாவின் காதல்! – பாலகணேஷ்

 அந்தாதிக் கதை | நர்மதாவின் காதல்! – பாலகணேஷ்

கடிதம் சிரித்தது.

கடிதத்தைக் கையில் பிடித்திருந்த ராகவன் சிலையாய்ச் சமைந்து நின்றார். ‘நர்மதாவா..? என் பெண் நர்மதாவா..?’ கேள்விகளும் குழப்பங்களும் அவரைச் சுற்றி அலையடிக்க, நெடுமரமாய் நின்றார்.

“என்னாச்சுங்க..?” என்றபடி நெருங்கி வந்தாள் லட்சுமி.

“உன் பொண்ணு நம்ம தலைல கல்லப் போட்ருவா போலருக்கு லட்சுமி…” குழறி வந்தன வார்த்தைகள்.

“என்னது..? என்ன சொல்றீங்க..?”

“நர்மதா யாரையோ காதலிக்கறா போலருக்கு..”

“என்னது..? நம்ம நர்மதாவா..? சான்ஸே இல்லைங்க…”

“கைல லெட்டரை வெச்சுக்கிட்டு பொய்யாடி சொல்றேன்..? படிக்கறேன், கேளு. ‘என் உயிரே, உன் வீட்ல உனக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணத் தேதிகூட ஃபிக்ஸ் பண்ணியாச்சு. நாம சேர்ந்து வாழணும்னா யாருக்கும் தெரியாம ஓடிப்போயி, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதைத் தவிர வேற வழியேயில்ல. என்னோட வாழறதுக்காக எதையும் தியாகம் செய்யத் தயார்ன்னு அடிக்கடி சொல்லுவியே… அது உண்மைன்னா, கல்யாண நாள் நெருங்கறதுக்குள்ள முடிவெடு. வேலிதாண்டி வா. காத்திருக்கேன். இப்படிக்கு, உன்னவன். போதுமாடி..? எவனோ ஒரு அவன் உன் பொண்ணுக்கு எழுதிருக்கற லெட்டர்…”

 

லட்சுமி திக்பிரமையுடன் பார்த்தாள். ராகவன் பொருமினார்.

“நம்மகிட்ட கேக்காம எதையும் செய்ய மாட்டா, கண்ட கண்ட ப்ரெண்ட்ஸை வெச்சுகிட்டு ஊர்சுத்த மாட்டா, சாதுப்பசுன்னு ஒரு இமேஜை இவ்வளவு நாளா நமக்குக் காட்டிட்டு ரகசியமா என்ன மாதிரி காரியத்தப் பண்ணிட்ருக்கா பாரு… இதையே நம்ம பய சதீஷ் பண்ணிருக்கான்னு சொன்னாக்கூட நம்பிருப்பேன்.”

சட்டென்று சுயஉணர்வு பெற்றவளாய் சுற்றிலும் பார்த்தாள் லட்சுமி. “நல்லவேளையா ரெண்டு பேரும் வீட்ல இல்ல. கல்யாணத்துக்கு இன்னும் மூணே நாள்தான் இருக்கு. இப்ப என்னங்க பண்றது..?”

“இருடி… கொஞ்சம் யோசிக்க விடு…”

அவர் யோசித்து முடிப்பதற்குள் அவர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் நாம். ராகவன் சொந்தமாக ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டார் வைத்திருந்தார். நல்ல வருமானம். லட்சுமி இல்லத்தரசி. இவர்களின் மூத்த மகன் சதீஷ். ராகவனும் ஆசிரியர்களும் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தும் கிஞ்சித்தும் படிப்பு தலையில் ஏறாதவன். உபரியாய் ட்யூஷன் வாத்தியார்களும் த.நி.த. குடிக்க, தக்கிமுக்கி ப்ளஸ் டூ வரை பாஸ் செய்துவிட்டான். துளியும் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவான். மற்றபடி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாதவன். இரண்டாவதாகப் பிறந்தவள் நர்மதா. சதீஷுக்கு நேர்மாறாக படிப்பில் கில்லி. எதிலும் முதல். ‘அடக்க ஒடுக்கம்’ என்ற வார்த்தைக்கு நேர் உதாரணம். அப்பாவின் செல்லப் பெண்.

நர்மதாவுக்குத் திருமணம் நிச்சயமாகி, இன்னும் மூன்றே நாளில் திருமணம் என்கிற நிலையில்தான் இந்தக் கடிதம் குறுக்கிட்டிருக்கிறது. நர்மதாவின் அறைப் பக்கம் எதேச்சையாக ராகவன் வந்த நேரம், செல்லில் அவருக்கு ஒரு கால் வர, எதிர்முனை சொன்ன போன் நம்பரைக் குறிக்க அவர் பேப்பர் தேடப்போய் டீப்பாயிலிருந்த நோட்டை எடுக்க, அதிலிருந்து எட்டிப் பார்த்து அவரை திகைக்க வைத்திருக்கிறது இந்தக் கடிதம். அடடே, யோசித்து முடித்து ராகவன் பேச ஆரம்பித்து விட்டார், கவனியுங்கள்.

“இதபாரு லட்சுமி. இதைப்பத்தி எதுவும் தெரிஞ்சதாவே காட்டிக்காத. நாம ஏதாவது விசாரிக்கப் போய் அவ வீம்பு பிடிச்சு எதையாச்சும் செஞ்சுட்டா மானம் போய்டும். இன்னும் மூணு நாள்… அவ தப்பா எதும் பண்ணிடாம கண்கொத்திப் பாம்பா அவளைக் கண்காணிக்கணும். கல்யாணம் நல்லபடியா முடிஞ்சாகணும்.”

லட்சுமி கண்ணீருடன் தலையசைத்த அதே நேரம்…

“அப்பா, பூ மார்க்கெட்ல எனக்குத் தெரிஞ்ச அய்யப்பன்கிட்ட பேசி, அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துட்டேன். டாண்ணு மண்டபத்துக்கு வந்து அலங்காரத்தை முடிச்சுக் குடுத்துடுவாங்க. அப்பறம்… பந்தல்காரனுக்குச் சொல்லிட்டீங்களா இல்லியா…?” எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பேசியபடியே நெருங்கினான் சதீஷ்.

“இன்னும் இல்லடா. இனிதான் சொல்லணும்…”

“சரி, சரி, நானே போய் பாத்து ஏற்பாடு பண்ணிட்டு வரேன். பெத்த பொண்ணுக்குக் கல்யாணம்! இப்டியா பொறுப்பில்லாம இருப்பீங்க..” என்றபடி நகர்ந்தான் சதீஷ். அத்தனை துயரத்திலும் ராகவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. லட்சுமியும் சற்றே புன்னகைத்தாள்.

“பொறுப்பைப் பத்தி நீ பேசறியாடா..? எல்லாம் நேரம்!! ரெண்டு மாசம் முன்னாடி வரை கோயில் காளை மாதிரி திரிஞ்சுட்ருந்தவன், இப்ப என்னவோ திடீர்ன்னு கடைக்கு வந்து கடையப் பாத்துக்கற, தங்கச்சி கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யற. என்னடா ஆச்சு உனக்கு..?” புருவமுயர்த்திக் கேட்டார் ராகவன்.

“அததுக்கு நேரம் வரணும்ல்லீங்க..? அவன் ஊரைச் சுத்தினா பொறுப்பே இல்லையாடான்னு திட்ட வேண்டியது, பொறுப்பா நடந்துக்கிட்டான்னா என்னடா ஆச்சு உனக்குன்னு கேக்க வேண்டியது. ரொம்பத்தான் அழகு…” முகத்தை நொடித்தாள் லட்சுமி.

“உன் புள்ளைய விட்டுத்தர மாட்டியே..? டேய், நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை…”

“ஒண்ணும் ஆகலப்பா. தோணுச்சு செய்யறேன், விடுங்க..” புன்னகைத்துவிட்டு சரேலென வாசலை நோக்கி ஓடியவன், எதிரே வந்து கொண்டிருந்த நர்மதாவின் மீது மோதிக் கொண்டு நின்றான்.

“ஏய், நீ எங்க போய்ட்டு வர்ற..?”

“அது வந்துண்ணா… பக்கத்துத் தெருல என் ப்ரெண்டு ஷீலாவோட பார்லர் இருக்கில்ல… அவகிட்ட ஃபேஷியல் பண்ணிக்கப் போயிருந்தேன்.”

“இப்பவே ஆரமிச்சாத்தான் மூணு நாள்ல மேக்கப்ப முடிப்பே. அதுசெரி…” தலையாட்டியவாறு வெளியேறினான். அருகில் வந்த நர்மதாவைச் சற்றே கடுமையாகப் பார்த்தார் ராகவன்.

“இதபாரு… இன்னும் மூணு நாள்… உன் கழுத்துல தாலி ஏர்ற வரைக்கும் வீட்டை விட்டு எங்கயும் நீ வெளிய போகக் கூடாது. புரிஞ்சதா..?”

“நான் அனாவசியமா வெளிய போறவளாப்பா..? உங்களுக்குத் தெரியாதா என்னைப் பத்தி..?”

“எல்லாம் தெரியும்..” சற்றே எரிச்சல் பூசி வெளிப்பட்டது குரல்.

“அவசியம் இருந்தாலும்கூட நீ வெளிய போக வேண்டாம் இனி. ஊர்ல நாலு பேர் நாலு விதமாப் பேசறதுல்லாம் அந்தக் காலம். நாலு பேர் நாப்பது விதமா மீடியால பப்ளிஷ் பண்றது இந்தக் காலம். கல்யாணம் நெருங்கிட்ருக்கற டயத்துல இதெல்லாம் தேவையா..?”

“அப்பா…” நர்மதாவின் முகம் சுருங்கிற்று.

“அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்றார்ம்மா. சரின்னுட்டு உள்ள போ..” தழைந்த குரலில் லட்சுமியும் பின்பாட்டுப் பாட, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவளாய் தன் அறைக்குள் நுழைந்து கதவைப் படாரென்று சார்த்தினாள்.

மூன்று தினங்கள்..!! ராகவனின் பி.பி.யை எகிற வைத்த அந்த மூன்று தினங்கள்..! இரவும் பகலுமாக ராகவனும் லட்சுமியும் நர்மதாவைக் கண்காணித்தபடியே கடத்திய மூன்று தினங்கள் – எந்த சம்பவமும் நிகழாமலே கழிந்தன. கல்யாணச் சத்திரத்துக்குப் போய்ச் சேர்ந்து திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்கூட எவனாவது வந்து கலாட்டா செய்துவிடுவானோ என்ற பயத்தில் ராகவ-லட்சுமி விழிகள் மண்டபம் முழுக்கச் சுழன்று கொண்டிருந்தன.

ஆயிற்று..! மாங்கல்ய தாரணமும் முடிந்தது. அனைவரும் மணமக்களை வாழ்த்த, ராகவனும், லட்சுமியும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டனர். உறவுக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைய, மண்டபத்திலேயே ஏசி அறை ஒன்றில் முதலிரவுக்கு ஏற்பாடாகியிருந்தது. மறுநாள் காலை மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு இவர்களும் கிளம்ப வேண்டியதுதான். அன்றிரவு நிம்மதியாக உறங்கினார்கள்.

காலை. கையில் காபியுடன் ராகவனை எழுப்ப வந்த லட்சுமி திக்கென்று விழித்தாள். படுக்கையில் எழுந்து அமர்ந்து மோட்டுவளையைக் கவலையாய் வெறித்தபடி அமர்ந்திருந்தார் ராகவன். ‘என்னாயிற்று இவருக்கு..?’ கேள்வியுடன் நெருங்கி தோளைத் தொட்டாள். திரும்பிய அவரின் கண்கள் சிவந்திருந்தன.

“என்னாச்சுங்க..?”

“பயமாருக்கு லட்சுமி..”

“பயமா..? அதான் நல்லபடியா கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சுல்ல..? அப்பறம் என்ன பயம்..?”

“கல்யாணம் நடக்கற வரைக்கும் அது ஒழுங்கா நடக்கணுமே, நம்ம மானம் போய்டக் கூடாதேங்கற ஒரே கவலைதான் இருந்துச்சு லட்சுமி. ஆனா அப்டி நெனச்சது தப்போன்னு அது முடிஞ்ச பிறகு யோசிக்கறப்பத்தான் தோணுது.”

“நீங்க என்ன பேசறீங்கன்னே புரியலீங்க…”

“யோசிச்சுப் பாரு லட்சுமி. கல்யாணம் பண்ணி வெச்சதோட நம்ம கடமை முடிஞ்சுது. ஆனா அவ புகுந்த வீட்டுக்குப் போனப்பறம் அவங்களோட ஒத்துப் போய் வாழணுமே…. தான் காதலிச்சவனைப் பத்தி அவங்கட்ட சொல்லிட்டாலோ, இல்ல அவன் இவளை கான்டாக்ட் பண்ணி அது அவங்களுக்குத் தெரிஞ்சுட்டாலோ, இவ வாழ்க்கை கேள்விக்குறியாய்டுமே. அதுக்கும் மேல அங்க போனப்பறம் இவ காதலிச்சவனோட ஓடிப்போய்ட்டான்னு வெய்யி..”

“கடவுளே..” காதைப் பொத்திக் கொண்டாள் லட்சுமி. “என்னங்க… என்னென்னவோ பேசறீங்க..?”

“நாலையும் யோசிச்சிருக்கணும் லட்சுமி. தப்பு பண்ணிட்டோம். நேத்துலருந்து இந்தக் கேள்வி என்னை குடைஞ்சிட்ருக்கு. ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்க. அவங்களோட அனுப்பி வெக்கணுமேன்னு நெனைக்கறப்பவே திகிலாருக்கு…”

லட்சுமியின் கண்ணிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. “இப்ப என்னங்க பண்றது..?” என்று அவள் சடைந்துகொண்ட அதே நேரம், அறையினுள்ளே நுழைந்தாள் நர்மதா.

சட்டென உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, “வாம்மா..” என்று சிரிக்க முயன்றனர் பெற்றவர்கள்.

“அப்பா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

“சொல்லும்மா..” மனதுக்குள் நாலாதிக்கிலும் பயம் உதைக்க, சகஜமாகக் காட்டிக் கொண்டார் ராகவன்.

“அண்ணன் விஷயமாப்பா… அவனுக்கு நீங்க சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணி வெக்கணும்..”

‘உனக்குக் கல்யாணத்தப் பண்ணி, படற அவஸ்தை போதாதா?’ மனசுக்குள் சொல்லிக் கொண்டு மேலுக்குச் சிரித்தார். “தடிக்கழுதை, அவனுக்கென்ன இப்போ அவசரமாம்..?”

“அவசரம்தான்ப்பா. அண்ணன் யாரையோ லவ் பண்ணுது. அந்தப் பொண்ணோட வீட்ல போய் பேசினப்போ வேலைவெட்டி இல்லாதவனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு இன்சல்ட் பண்ணிட்டாங்களாம். போனமாசம் ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப் போய்டலாம்னு அந்தப் பொண்ணுக்கு லெட்டர் எழுதிட்ருந்துச்சு. நான் பாத்து பிடுங்கி வெச்சுக்கிட்டேன். பொறுப்பா நம்ம கடையப் பாத்துகிட்டு, என் கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வெய்யி, உனக்காக நான் அப்பாகிட்டயும், அந்த பொண்ணு வீட்லயும் பேசறேன்னு ப்ராமிஸ் பண்ணினேன்ப்பா. அதான், அண்ணன் மாறிடுச்சு. நீங்க கோவிச்சுக்காம கல்யாணத்தை நடத்தி வெக்கணும்ப்பா.. ப்ளீஸ்…”

ராகவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஆஹா…. அந்த லெட்டருக்குச் சொந்தக்காரி தன் பெண்ணில்லையா..? இவள் தங்கமேதானா..? குஷியில் துள்ளிக் குதித்தது இதயம். “அடேய் சதீஷ்… வாடா இங்க..” உரக்கக் கூவினார்.

“அப்பா, வேண்டாம்ப்பா. அண்ணனைத் திட்டாதீங்கப்பா..” நர்மதா கெஞ்சினாள். சதீஷ் வந்து நிற்க, “படவா ராஸ்கல்… மொதல்லயே என்ட்ட சொல்றதுக்கென்னடா..? என் கடையும் அதுல வர்ற லட்சங்களுக்கும் நீதானடா வாரிசு..? நான் பேசி நடத்தி வெக்கறேன்டா உன் கல்யாணத்தை…” சந்தோஷத்தில் ராகவன் உரக்கக் கத்த, நிம்மதிப் பெருமூச்சை விடுவித்தாள் நர்மதா.

ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிக்கு உடனேயே விடுதலை கிடைத்து வெளிவிடப்பட்டடால் எப்படியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சியில் இப்போது தத்தளித்தனர் ராகவனும் லட்சுமியும்.

நீண்ட நாளைக்குப் பிறகு மனம்விட்டுச் சிரித்தார் ராகவன்.

கமலகண்ணன்

11 Comments

  • ​செம்ம கலாட்டாவா நகர்கிறது க​தை அற்புதம்
    பாலா

    • மனம் நிறைந்த நன்றி.

    • அருமை

  • மிக அற்புதமான திருப்புமுனையுடைய கதை…உண்மையில் கதைக்குள் சென்று ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்த உணர்வு…. வாழ்த்துக்கள் ஐயா.

    • ஒன்றிப் படித்த உங்களுக்கு அகம் நிறை நன்றி பிரதாப்.

  • அருமை..எதிர்பாராத திருப்புமுனை.
    நர்மதாவின் மூலம்..வாழ்த்துகள்.

    • திருப்பத்தை ரசித்த உங்களுக்கு திருப்தியுடன் என் நன்றி அனுராஜ்.

  • அருமை

  • அருமை
    நல்ல ட்விஸ்ட்

    • ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

  • ஊகிக்க முடிந்த க்ளைமேக்ஸ்! ஆனாலும் இறுதி வரை சுவாரஸ்யம் குறையா படைப்பு! அருமை! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...