நகைச்சுவை சிறுகதைப் போட்டி – 2ம் பரிசுக் கதை!

 நகைச்சுவை சிறுகதைப் போட்டி – 2ம் பரிசுக் கதை!

‘சீனி’வாசன்

பரிவை சே.குமார்

பொருட்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

வாசலில் நின்ற ஐஸ் வண்டியைப் பார்த்ததும் ‘அம்மா ஐஸ்’ என்றான் சந்தோஷ்.

“என்னவாம்..?” திரும்பி நின்று கேட்டார் சீனிவாசன்.

“அ…ய்…ஸ்சு” மெல்ல இழுத்தான்.

“நொய்சு… போட்டேனா… இன்னும் உள்ளகூடப் போகல அதுக்குள்ள திங்கிறதுக்கு வாங்கிறணும்… வாடா பேசாம…” கத்திவிட்டு வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார்.

“லூசு… இதோட வந்தா எதையும் வாங்கித் திங்க விடாது…” வாய்க்குள் முணங்கினான்.

“சும்மா வாடா… காதுல கேட்டா ரகுவரன் கத்த ஆரம்பிச்சிரும்” என்றான் மூத்தவன் தினேஷ்.

“கத்தட்டும்… எதுவும் வாங்கித் தரமா சும்மா சுத்திப் பாத்துட்டுப் போகத்தான் கூட்டியாந்தாரா…?” ஐஸ் கிடைக்காத கோபத்தில் பேசினான்.

“செல்லம்… அம்மா வரும்போது வாங்கித் தாரேன்டா… இப்ப வா… உனக்குத்தான் நம்பியாரைப் பத்தித் தெரியுமில்ல…”

“ஆமா இப்பச் சொல்வீங்க… அப்புறம் அவரு மொறக்கிற மொறையில வாங்கிக் கொடுக்காம கூட்டிப் போவீங்க… இவருதான் எதுவும் செய்ய விடமாட்டாருல்ல… அப்புறம் எதுக்கு இவரோட வரணும்….” தம்பியோடு தன்னையும் இணைத்துக் கொண்டு கேட்டாள் கனிமொழி.

“அடச் சும்மா இருடி நீ வேற… அவன் மறந்தாலும் நீ விடமாட்டே… சைடு கேப்புல ஏறிப்பே…”

“இவரு கூட வாரதுக்கு சும்மா இருக்கலாம்…”

“ஆமா… ரகுவரன் சிரிக்கவும் மாட்டாரு… சிரிக்க விடவும் மாட்டாரு…” தினேஷ் சொன்னான்.

“ஹிட்லரு என்னைக்குடா சிரிச்சிருக்காரு…” மெல்லக் கேட்டாள் அப்பத்தா ஆண்டாள்.

பொண்டாட்டிக்கு ஹிட்லர்… மருமகளுக்கு நம்பியார்… பேரன் பேத்திகளுக்கு ரகுவரன் என வில்லனாகவே தெரியும் சீனிவாசன்…. டெரர் பீஸெல்லாம் இல்லை என்றாலும் எங்கு வெளியில் போனாலும் எல்லாருடைய லகானும் தன் கையில் இருக்க வேண்டும் என நினைப்பார்… தான் சொல்வதைத்தான் கேக்கணும் என்பதில் பிடிவாதமாய் இருப்பார்… யாரிடமும் சிரித்துப் பேசமாட்டார்…. தான் ஒரு ஸ்ட்ரிக்டான ஹெட்மாஸ்டர் என்பதாய் தன்னை வடிவமைத்துக் கொண்டவருக்கு அதுவே பழகிவிட்டது… சிரிப்பு எப்படி இருக்கும் என்பதை அவரது உதடு மறந்து வருடங்கள் பலவாகிவிட்டது. இப்போது அவருடன் பேசுவதென்றால் எல்லாருக்குமே பயம்தான்…

“இந்த ஹிட்லரு கூட எப்படித்தான் இத்தன வருசமா இருக்கியளோ…?”

“என்ன பண்ணட்டும்… எங்கப்பனுக்கு இந்த மாப்பிள்ளைதான் பிடிச்சிச்சு….”

“என்னடா எல்லாரும் கூடிப் பேசுறிய… என்னத் திட்டுறியளா…?” திரும்பிக் கேட்டார் சீனிவாசன்.

“அதுக பாட்டுக்குப் பேசிக்கிட்டு வருதுக… நீங்க முன்னால பாத்துப் போங்க… யாரு மேலயும் மோதி அவுக சண்டக்கி வந்துறாம…” வேகமாகச் சொன்னாள் ஆண்டாள்.

“அப்பத்தா… யாராச்சும் இடிச்சா என்னடா சிலையில இடிச்சிட்டமோன்னு நினைப்பாங்க… இவருதான் உர்ருன்னு இருப்பாரே…”

“சும்மா இருடா… வாயை வச்சிக்கிட்டு…”

“வாயின்னு இருந்தா எதாவது பேசணும்… சும்மா வச்சிக்கிட்டு இருந்தா ஐயா மாதிரியே பொறந்திருக்கான்னு சொல்லிருவாங்க… இல்லையாடா…” என்றாள் கனிமொழி.

“ஆமா… இவருக்கு யாரு சீனிவாசன்னு பேர் வச்சது…”

“அவுக அப்பா வச்சிருப்பாரு…”

“சீனி வாசன்னு வச்சதுக்குப் பதிலா பாவக்காய் வாசன்னோ வேப்பெண்ணை வாசன்னோ வச்சிருக்கலாம்….”

“கொழுப்பு… சும்மா வாடா… காதுல கேட்டா அம்புட்டுத்தான்…”

“அம்மா… அந்த ராட்டினத்துல…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… மேல ஏறி பயத்துல கத்துவே… அழுவே… வாந்தி வரும்…” மனோ பதில் சொல்லும் முன்னர் சீனிவாசன் சொன்னார்.

“அப்ப எதுக்கு இங்க வந்தோம்…” கோபமாய் கேட்டான் சந்தோஷ்.

“பொருட்காட்சி பார்க்க… இல்லையாம்மா…” பார்க்கவை அழுத்திச் சொன்னாள் கனிமொழி.

“அக்கா சொல்றா பாரு… அதான்… பாக்கத்தான் வந்திருக்கோம்…” மனோவும் பாக்கவை அழுத்தமாய்ச் சொன்னாள்.

“இந்த அப்பா எங்கயுமோ கூட்டிப் போறதில்லை… எப்பப் பாரு ஐயாவோட போங்கன்னு… கேட்டா வேலை…. வேலைன்னு”

“அப்பாவுக்கு வேலைடா…”

“ஆமா சுந்தரத்தோட அப்பால்லாம் வேலைக்குப் போகலயா… எல்லாத்துக்கு அவருதான் கூட்டிப் போறாரு… எம்புட்டுச் சந்தோஷமாச் சொன்னான் தெரியுமா… இந்தப் பொருட்காட்சியைப் பாத்து நான் என்னத்தச் சொல்றது… சுத்தி வந்தோமுன்னா…”

“என்னடா கத்திக்கிட்டே வாறிய… என்ன வேணும்ம்ம்…” குரலைக் கடுமையாக்கி வார்த்தையை இழுத்தார்.

“எல்லாத்துலயும் ஏறணும்…” கத்தினான் சந்தோஷ்.

“அதெல்லாம் முடியாது… சுத்தி வாங்க… போதும்… வேணுமின்னா அந்த ரெயிலுல ஏறுங்க…”

“எதுல அந்த ரெயிலுல… அது இப்புடி சுத்தி வரும்… அம்புட்டுப் பேரும் ராட்டினத்துல ஏறி ஊரையே பாத்தோம்ன்னு பீத்துறானுங்க… இவரு இந்தா இதுக்குள்யே ஓடுவோமா வேணாமான்னு சுத்துற ரெயிலுல ஏறணுமாம்…”

“டேய் அதாண்டா டிக்கெட் கம்மி…”

“ஓ… அதுக்குத்தான் அதைத் சொன்னாராக்கும்…. காசு அப்பாதானே கொடுத்திருப்பாரு… இவரு செலவு பண்ணுனா என்ன…”

“உங்கப்பா அதுக்குத்தானே இவரை அனுப்புறாரு…” மெல்லச் சொன்னாள் மனோ.

“வாங்கடா அப்பத்தாக்கிட்ட காசிருக்கு… நான் ராட்டினத்துல ஏத்திவிடுறேன்…”

“ஆமா… நீங்க டிக்கட் வாங்கப் போகும்போது என்னன்னு ஒரு பார்வை பார்த்தாருன்னா ரகுவரனுக்குப் பயந்து பேசாம வந்திருவீங்க…”

“இன்னக்கி நீங்க பாருங்க… நான் உங்களை ராட்டினத்துல ஏத்துறேன்…”

“அப்பத்தா இவரு சிரிக்கவே மாட்டாரா…?”

“கல்யாணத்துக்கு முன்னால சிரிச்சிருப்பாரோ என்னவோ… கல்யாணம் முடிஞ்சிட்டு அவரு சிரிச்சிப் பார்த்ததில்லை….”

“உங்க கழுத்துல தாலி ஏறினதுமே வாய்க்குப் பூட்டுப் போட்டுட்டிய போல….” மனோ கேட்க, “ஆமா நாந்தான் போடுறேன்… ஏன்டி நீ வேற…. இவருல்லாம் பொறந்ததுல இருந்தே சிரிப்புன்னா என்னண்ணே தெரிஞ்சிருக்காது…”

“எப்பவுமே இவரு ஜெம்தான்…”

“ஜெம்மா… அதென்னா எனக்குத் தெரியாமா…?”

“அதான் அப்பத்தா சிஞ்சர் ஈட்டிங் மங்கி…”

“அப்படின்னா…?”

“அதுவா இஞ்சி தின்ன குரங்கு…”

“டேய் வாயைப் பாரு… சும்மா இருடா…” மனோ அதட்டினாள்.

“விடு அவரு அப்புடித்தானே பண்றாரு… அப்புறம் புள்ளைங்க பேரு வைக்காதுகளா…”

“அதுக்காக… பெரியவுகளுக்கு மரியாதை இல்லாம…”

“டேய் எனக்கு என்னடா பேரு….”

“பூம்பூம் மாடு…”

“அது சரி…. உங்கப்பனுக்கு…?”

“ம்…. செக்கு மாடு….”

“அடேய் ஆளைப்பாரு…”

“எங்கம்மாவுக்கும் ஒரு பேர் இருக்கு….”

“அதையும் சொல்லிருங்கடா….”

“அத்தை நீங்க சும்மா இருங்க…”

“அட சொல்லட்டுமே… சொல்லுடா….”

“கிச்சன் கிங்”

“அப்படின்னா…”

“அடுப்படி ராஜா…”

“அத்தை சமையக்காரியை ராஜா கூஜான்னு சொல்றானுங்க…”

“டேய் டிரைன்ல யாரு ஏறுறா…?” சீனிவாசன் கேட்டார்.

“எங்களுக்கு ராட்டினம்தான் வேணும்…”

“ராட்டினம்… போட்டேன்னா…”

“ஏங்க புள்ளங்க ஆசைப்படுதுகள்ல… பாவம் ஏறட்டுமே…”

“வச்சிருந்தா ஏற விடுங்க… அப்புறம் ஏதாவது ஒண்ணுன்னா தூக்கிச் சுமங்க”

“நண்டு சிண்டெல்லாம் ஏறுதுக… என்ன நடக்கப் போகுது…”

“காசு வச்சிருக்கேல்ல… ஏத்திவிடு… அவனுக மேல இருந்து கத்துவானுங்க… அங்கிட்டுப் போயிட்டு வாரேன்…”

“போங்க… கத்தட்டும்… அதுகளும் சந்தோஷமா இருக்க வேணாமா…?”

“ம்… எதுலயோ ஏறுங்க..”

பிள்ளைகள் ராட்டினத்தில் ஏறிக் கத்தி இறங்கும் வரை சீனிவாசன் வரவில்லை….

“எங்கடா போனாரு நம்ம ஹிட்லரு…”

“வருவாரு அப்பத்தா… நாம எஞ்சாய் பண்ணுவோம்… வாத்தியார் வரலைன்னா வகுப்புல எஞ்சாய் பண்ற மாதிரி… அம்மா தனியாக் காசு வச்சிருப்பாங்க… எல்லா விளையாட்டும் விளையாடலாம்…”

“எங்கிட்ட எல்லாம் எதுவுமில்லை… நானும் அக்காவும் தலைக்கி வைக்கிறது பாத்துட்டு வாரோம்…”

“காசு இல்லைன்னு சொல்லுவீங்க உங்களுக்கு வாங்க மட்டும் இருக்கும் … அப்புடியே அப்பளும் பானி பூரியும் வாங்கிட்டு வாங்க…. அப்பத்தா போகும்போது நீங்க குல்பி வாங்கித்தாங்க….” தினேஷும் சந்தோஷும் கேட்டார்கள். வார்டன் இல்லாத ஹாஸ்டல் பிள்ளைங்க போல மகிழ்வாய் இருந்தார்கள்.

“முடிஞ்சிருச்சா…” என்றபடி வந்தார் சீனிவாசன்.

“வந்துட்டாரு வாத்தியாரு… இனி அம்புட்டுத்தான்…”

“என்ன ராட்டினத்துல ஏறியாச்சா…?”

“ம்… சூப்பரா இருந்துச்சு… ” என்றபடி அவர் சட்டையில் சிவப்பாய் பட்டிருந்த கறையைப் பார்த்த சந்தோஷ் அண்ணனைநோண்டினான்.

“என்னடா…”

“ரகுவரன் சட்டையில பாரு… ஏதோ சிவப்பா…”

“டேய் ஐஸ் கறை மாதிரி இருக்குடா…”

“நம்மள அதைத் திங்காதே இதைத் திங்காதேன்னு சொல்லிட்டு ரகுவரன் சத்தமில்லாம அமுக்கிட்டு வந்துட்டாரு பாரேன்…”

“எங்கடா அம்மாவும் தங்கச்சியும்…”

“கடைக்குப் போயிருக்காங்க….”

“ஒரு கடையை விடமாட்டாக…. போயி கூட்டிக்கிட்டு வாடா…”

“எனக்கு அப்பளம் வேணும்…”

“நொப்பளமாம் நொப்பளம்… தின்னா வயிறு வலிக்கும்…”

“அப்ப பானிபூரி… பேல்பூரி…”

“அதெல்லாம் வடநாட்டான் சாப்பாடு… நமக்கு ஒத்துக்காது…”

“அப்ப இங்க சாப்புடுறவங்கள்லாம் வடநாடாங்க….” கேட்டது ஆண்டாள்.

ஒண்ணும் பதில் சொல்லாமல் முறைத்தார்.

“அப்ப குல்பி வாங்கித்தாங்க…”

“அதெல்லாம் சாப்பிடக் கூடாது ஜலதோசம் பிடிக்கும்…”

“நீங்க மட்டும் சாப்பிடலாமா…?”

“நா எங்கடா சாப்பிட்டேன்…”

“இந்தா…” சட்டையை இழுத்து ஐஸ் கறையைக் காட்டினான் சந்தோஷ்.

“கூட்டத்துல எதோ ஒட்டியிருக்கு… குலுபி கிலுபின்னு வாடா… வாங்க போவோம்…”

மனோவும் கனிமொழியும் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.

“எதுக்கு இங்க வந்தோம்… ஒண்ணத்துல கூட ஏறக்கூடாது… எதுவும் திங்கக் கூடாது… அப்புறம் எதுக்கு உள்ள வந்தோம்…” கடுப்பாய் கேட்டான் தினேஷ்.

“அதான் சொன்னேனுல்ல பொருட்காட்சி பார்க்க வந்தோம்… போதுமா… பாத்துட்டோம்… போவோமா…” கடுப்பாய்ச் சொன்னாள் கனிமொழி

“மாமா… பிள்ளங்க ஆசைப்…..” முடிக்கும் முன் “உனக்கு வேணுமாக்கும்” என வாயை அடைத்தார்.

“குல்பி மட்டும் சாப்பிட்டீங்களா… எங்களைச் சாப்பிடக் கூடாதுன்னு சொன்ன எல்லாத்தையும் சாப்பிட்டீங்களா…” சந்தோஷ் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“யாருடா சாப்பிட்டா…” என்றபடி சட்டையில் இருந்த கறையைத் துடைத்தார்.

“இவரை ராட்டினத்துல ஏத்திச் சுத்தி விடணும்டா… இனிமே நம்ம கூட வரவே மாட்டேன்னு சொன்னாத்தான் இறக்கணும்…”

“வீட்ல தூங்கும் போது தலையில நங்கு நங்குன்னு கொட்டணும்…”

“கூட்டத்துல நடக்கும் போது காலை வாரி விட்டுட்டா விழுந்து கை, கால் அடிபட்டா கொஞ்ச நாளைக்கு அப்பா எல்லா இடத்துக்கும் கூட்டுவாருல்ல…”

“சீனிவாசனுக்கு சீனி வெடியை வச்சி விடணும்…”

மூவரும் ரகுவரனைக் கவிழ்க்க பிரகாஷ்ராஜ் வேலை பார்க்கலாம் எனத் திட்டம் போட்டார்கள்.

மனோவும் ஆண்டாளும் சத்தம் காட்டாமல் போய் அப்பளமும் , பானிபூரியும் வாங்கி வந்து கொடுத்தாள்.

“பிள்ளைகளைக் கெடுங்க மாமியாரும் மருமகளும்… எல்லாம் நீ கொடுக்கிற இடம்தான்… இதெல்லாம் சுத்தமில்லாதது… சாப்பிட்டு இழுத்துக்கிட்டா என்னையில உன் மகன் திட்டுவான்…”

“அட ஒரு நாள்த்தானே விடுங்க… சும்மா எப்பவும் முகத்தை உர்ருன்னு வச்சிக்காம… இந்தா அங்கிட்டுப் பாருங்க… அந்த மனுசனுக எல்லாம் பிள்ளையளோட எப்புடி விளையாடுறாங்க… “

“ம்…. போகலாம்…”

“குல்பி வேணும்…”

“இங்கேரு திரும்பத் திரும்ப சொன்னே இங்கயே அறைஞ்சிருவேன் பாத்துக்க…”

“நீங்க மட்டும் தின்னுருக்கீங்க… நாங்க கேட்டா முடியாதா…?”

“எப்படா நான் தின்னேன்… நீ பாத்தியா…” முகத்தை கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு கேட்டார்.

“அதான் சட்டையே சொல்லுதே…” என்றாள் கனிமொழி.

“என்ன சொல்லுது… நீங்க எடுத்துக் கொடுக்கிறியளோ… நானெல்லாம் சாப்பிடலை… போங்க…”

குல்பி வண்டியைத் தாண்டும் போது “எனக்கு குல்பி வேணும்…” மீண்டும் ஆரம்பித்தான் சந்தோஷ்.

“போடான்னா…” அவன் பிடறியில் கை வைத்துத் தள்ளினார்.

“என்ன பெரியவரே… நீங்க மட்டும் ரெண்டு வாங்கித் தின்னீங்க… புள்ளங்களுக்கும் வாங்கிக் கொடுக்கலாமுல்ல….” என்றான் குல்பி விற்பவன்.

சீனிவாசனின் முகத்தில் ஈயாடவில்லை…

“ரெண்டா… எங்களுக்கும் வேணும்” என்றபடி ஐஸ் வண்டியைச் சுற்றி நிற்க, சீனிவாசன் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பார்ப்பது போல் நின்றார்.

“சுகர் இருக்கு… ரெண்டு கேக்குதோ ரெண்டு…”

“பேர்ல கூட சீனிதானே இருக்கு… ஆனா சிரிக்க மாட்டாரு… சுகர் இருக்குன்னு தெரிஞ்சி நமக்குத் தெரியாம ரெண்டு ஐஸ் சாப்பிட்டிருக்காரு….” தினேஷ் பொருமினான்.

“வாங்க வீட்டுக்கு… வச்சிக்கிறேன்… சின்னப் புள்ளயள எதுவும் செய்ய விடாம கமுக்கமா வந்து ரெண்டு தின்னிருக்கிய… அப்புறம் சுகர் கூடிருச்சு காலு வலிக்கிது கை வலிக்கிதுன்னு என்னைய வதையுங் கொலையும் வாங்க வேண்டியது.”

பதில் சொல்லாமல் நின்றார்.

‘டேய் இந்தத் தாத்தாதானே அந்த சின்ன ராட்டினத்துல ஏறிப் பயந்து கத்தினது…’ என்றபடி இரண்டு பள்ளிச் சிறுமிகள் கடந்து போக, ‘டேய்… எத்தனை ஐ வேணுமோ வாங்கிக்கங்க…’ என்றபடி ஆண்டாளின் பார்வையில் இருந்து தப்பிக்கும் விதமாக ஐஸ் வண்டிப் பக்கம் நகர்ந்தார்… ‘சீனி’ வாசன்.

ganesh

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...