வரலாற்றில் இன்று – 13.03.2021 ஜேன் டெலானோ
நவீன செவிலியர் பணியின் முன்னோடியும், அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்தார்.
இவர் 1886ஆம் ஆண்டு நர்ஸிங் பயிற்சியில் பட்டம் பெற்ற பிறகு, புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். மேலும், இவர் செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார்.
இவர் 1898ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்பெயின் போரின்போது, நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.
தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 1909ஆம் ஆண்டுவரை அங்கு பணிபுரிந்தார். பின்பு செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார்.
அமெரிக்க தேசிய செஞ்சிலுவை செவிலியர் சேவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி ஒருவராகப் பாடுபட்டு, அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார். முதல் உலகப் போரின்போது, இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள், காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ள10யன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ 1919ஆம் ஆண்டு மறைந்தார்.
கா.நமச்சிவாயம் – இன்று நினைவு தினம்..!!
சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.
இவர் சிறுவயதிலேயே நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களை கற்றுத் தேர்ந்தார். பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர், வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்த மாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து, பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம்.
1905ஆம் ஆண்டு வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையை போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார்.
பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களையும் எழுதினார். ஆத்திச்சூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதிய கா.நமச்சிவாயம் 1936ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1781ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல் என்பவர் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார்.