வரலாற்றில் இன்று – 12.03.2021 ஏர்ல் நைட்டிங்கேல்

 வரலாற்றில் இன்று – 12.03.2021 ஏர்ல் நைட்டிங்கேல்

புகழ்பெற்ற ஆளுமை வளர்ச்சி ஆசான் ஏர்ல் நைட்டிங்கேல் (Earl Nightingale) 1921ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார்.

பேர்ல் ஹார்பர் (Pearl Harbor) போர் முடிந்த பிறகு வானொலியில் வேலை பார்க்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு நெப்போலியன் ஹில் எழுதிய திங்க் அன்ட் க்ரோ ரிச் புத்தகத்தைப் படிக்க நேர்ந்து, அதனால் கவரப்பட்டார். 1956ஆம் ஆண்டு தி ஸ்ட்ரேஞ்ஜஸ்ட் சீக்ரட் என்ற ஒரு ஒலித்தட்டை உருவாக்கினார்.

‘திங்க் அன்ட் க்ரோ ரிச்: தி எசன்ஸ் ஆஃப் இம்மார்ட்டல் புக் பை நெப்போலியன் ஹில், நேரேட்டட் பை ஏர்ல் நைட்டிங்கேல்’ என்ற தலைப்பில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இது முதன்முதலாக கோல்ட் ரெகார்ட் தரத்தை அடைந்தது.

1960ஆம் ஆண்டு லியோட் கனன்ட் என்பவருடன் இணைந்து நைட்டிங்கேல் கனன்ட் (Nightingale-Conant) கார்ப்பரேஷனை நிறுவினார். 1976ஆம் ஆண்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு இவருக்கு கோல்டன் கேவல் விருது வழங்கியது.

1980ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏர்ல் நைட்டிங்கேல்ஸ் கிரேட்டஸ்ட் டிஸ்கவரி என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார். இதற்கு இவருக்கு இலக்கிய சேவைக்கான நெப்போலியன் ஹில் கோல்டு மெடல் வழங்கப்பட்டது.

ஏராளமான மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனையாளரான இவர், 1989ஆம் ஆண்டு மறைந்தார்.

குஸ்டவ் கிர்க்காஃப்

மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை வெளியிட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1824ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் பிறந்தார்.

கல்லூரியில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ்பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21வது வயதில் வெளியிட்டார்.

ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து 1854ஆம் ஆண்டு சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தார். மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இவர் 1859ஆம் ஆண்டு வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். மேலும் 1862ஆம் ஆண்டு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.

ராபர்ட் புன்செனுடன் இணைந்து சூரிய நிறமாலைகள் குறித்த ஆய்வுகளுக்காக ‘ரூம்ஃபோர்டு’ பதக்கம் பெற்றார். பல்வேறு துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளுக்காக டேவி பதக்கம், ஜன்சென் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றார்.

தன் வாழ்நாள் இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்ட குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் 1887ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1913ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இந்திய அரசின் முன்னாள் துணை பிரதமரான யஷ்வந்தராவ் பல்வந்தராவ் சவாண் (Yashwantrao Balwantrao Chavan) மும்பையில் பிறந்தார்.

1954ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...