செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள்? ஆய்வில் புதிய தகவல்!
ஈட்வஸ் லோரண்ட் பல்கலைக்கழகத்தில் (Budapest) ஆல்ஃபா ஜெனரேஷன் லேப் ஆஃப் டையக்னாஸ்டிக்ஸ் அண்ட் தெரபி எக்ஸலன்ஸ் புரோகிராம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தது.
தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குழந்தைகளிடையே அதிகரித்து வருகிறது. முழுநேரமும் செல்போன் மற்றும் டேப் லெட்டுகளை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அதிகளவு தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதால், அவர்களை ஆல்பா தலைமுறை என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இந்த தலைமுறையினர் உலகை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என ஹங்கேரியன் ஆய்வாளர்கள் முயற்சி செய்தனர்.
ஈட்வஸ் லோரண்ட் பல்கலைக்கழகத்தில் (Budapest) ஆல்ஃபா ஜெனரேஷன் லேப் ஆஃப் டையக்னாஸ்டிக்ஸ் அண்ட் தெரபி எக்ஸலன்ஸ் புரோகிராம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சி வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தது. அவர்கள் நடத்திய ஒரு ஆய்வு கம்ப்யூட்டர்ஸ் இன் ஹ்யூமன் பிஹேவியர் (Computers in Human Behavior) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் உலகை கிரகித்துக்கொள்ளும் முறையும், செல்போன் அல்லது தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் குழந்தைகள் உலகை புரிந்து கொள்ளும் முறையையும் கண்கூடாக ஆய்வாளர்கள் பார்த்துள்ளனர். அதாவது, இணையவழி பலூன் விளையாட்டில் பங்கேற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குழந்தைகள், சிறப்பான கவனத்தை செலுத்தி விளையாடியதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் அல்லாமல் நேரடியான விளையாட்டில் பங்கேற்கும்போது அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருந்ததை அறிய முடிந்ததாக கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அனலிட்டிக்கல் திங்கிங் எனப்படும் பகுப்பாய்வு சிந்தனை மிகுதியாக இருப்பதாக கூறியுள்ளனர். விவரங்களை திரட்டிக்கொள்வதில் திறமைசாலிகளாக இருக்கும் அவர்கள், படைப்பாற்றல், சமூக திறன்கள் இருக்காது என கூறியுள்ளனர். படைப்பாற்றல் இல்லாத குழந்தைகளின் சிந்தனை மெஷினரிபோல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வாளர் கிரிஸ்டினா லிஸ்காய்-பெரெஸ் (Krisztina Liszkai-Peres) இதுதொடர்பாக பேசும்போது, இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் நேரடியான அனுபவங்களை அனுபவிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மிகச்சிறிய வயதில் குழந்தைகளின் மனதில் பதியக்கூடிய அனுபவங்கள், அவர்களின் நீண்ட கால வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்த அவர், அனுபவங்கள் இல்லையென்றால் அவை அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க தொடங்கும் என கூறினார். தொலைபேசியில் கவனம் செலுத்தும் பாணி அவசியமில்லை எனக் கூறியுள்ள அவர், இதனை தவிர்க்க முடியாது என்றாலும் குழந்தைகளுக்கு நேரடி அனுபவங்கள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய தலைமுறை குழந்தைகளுக்கு கற்பித்தலில் மாறுபாடு கொண்டுவரவேண்டியது அவசியம் எனவும் பெரேஸ் கூறியுள்ளார். இந்த போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், புதிய தலைமுறையின் குழந்தைகளிடையே அதிக விஞ்ஞான சிந்தனையாளர்களும், குறைந்த கலை அல்லது சமூகவாதிகளும் இருப்பார்கள் என கூறியுள்ள ஆய்வாளர்கள், இதனை மாற்றுவது குறித்து உலகம் சிந்திக்க தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.