10,000 மைல் பயணம் – 3 | வெ. இறையன்பு IAS

 10,000 மைல் பயணம் – 3 | வெ. இறையன்பு IAS

3. விளையாட்டுக்குத் தலையாட்டுவோம்!

ஒரு பகுதியில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தவை, மற்ற இடங்களுக்குப் பயணத்தினால் பரிமாறப்பட்டன. வியாபாரத்திற்காகவும், யாத்திரைக்காவும் வந்தவர்கள் அன்னியப் பிரதேசத்தில் புதிய விளையாட்டுகளைக் கண்டு வியந்து, அவற்றைத் தங்களுடைய பகுதிக்கு எடுத்துச் சென்று அறிமுகப்படுத்தினர். அவை நாளடைவில் மருவி, புதிய புதிய விளையாட்டுகளாகப் பரிமளித்தன.

இந்தியாவிற்கு வந்த யுவான்சுவாங், பாஹியான் இருவருமே அப்போது நாளந்தாவில் விளையாடப்பட்டு வந்த வாள் சண்டை, நீச்சல், மற்போர், பந்து விளையாட்டுக்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் குறிப்புகள் எழுதினர். மூச்சைக் கட்டுப்படுத்துவது பிராணாயாமத்தின் ஒரு பகுதி. டைக்வான்டோ, கராத்தே, ஜூடோ ஆகியவற்றில் இந்த யுக்திதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனத்தையும், உடலையும் ஒரே புள்ளியில் இணைக்கும்போது அளவு கடந்த ஆற்றல் உண்டாகிறது. இதை அடித்தளமாகக் கொண்டு காஞ்சிபுரத்திலிருந்து சீனத்திற்குச் சென்ற போதிதர்மர் அங்கிருந்த ஷாலின் கோயிலில் ஒரு புதிய வழிமுறையை உண்டாக்கினார். அது அனைத்து சண்டைப் பயிற்சிகளுக்கும் ஆதாரமாக ஆனது.

போலோ விளையாட்டு பாரசீகத்தில் தோன்றியது. சீனர்களும் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். மத்திய ஆசிய நாடோடிகளிடம் தோன்றிய விளையாட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற இடங்களிலும் பரவியது. அலெக்சாண்டர் மாசிடோனியாவின் அரசராகப் பதவியேற்றபோது, பாரசீக மன்னர் மூன்றாம் டேரியஸ் அவருக்கு ஒரு போலோ பந்தையும், மட்டையையும் பரிசாக அனுப்பினார். நீ போலோவுடன் நிறுத்திக்கொள். போரில் ஈடுபடாதே” என்பது சமிக்ஞையாகச் சொல்லப்பட்டது. அலெக்சாண்டர் அதற்குப் பதில் சொல்லும் விதத்தில், பந்து உலகத்தைக் குறிப்பதாகவும், மட்டை தன்னைக் குறிப்பதாகவும், தான் உலகத்தை வெல்லக்கூடிய செய்தியைக் குறிப்பிடுவதாகவும் சபையினரிடம் அந்தப் பரிசைப் பற்றிக் கேலியாகக் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து, உலகத்தில் சக்திவாந்த பேரரசாக உருவெடுத்தபோது, அதன் காலனிக்குட்பட்ட இடங்களில் எல்லாம் கிரிக்கெட் பரவியது. அதற்கான மூலம் ஸ்காட்லாந்தில் விளையாடப்பட்டு வந்த ‘கேட் அன்ட் டாக்’ என்கிற விளையாட்டுத்தான் என்று குறிப்பிடுவார்கள். ஹாக்கி இங்கிலாந்தில் பிரபலமானபோது, ‘நிறைய பேர் அதை விளையாடத் தொடங்கினால், வில்வித்தைப் பயிற்சிக்குச் செல்ல மாட்டார்கள்; எனவே, போரில் வெல்வது கடினம்’ என்று சில காலம் தடை செய்யப்பட்டது.

பேட்மின்டன் உருவான வரலாறு சுவாரசியமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவிற்கு வந்த சில சிப்பாகள் ஷாம்பெயின் பாட்டில் மூடியிலுள்ள கார்க்கை எடுத்து, அதில் சில இறகுகளைச் சொருகி, பாட்டில்களையே மட்டைகளாகப் பயன்படுத்தி பூனா என்கிற விளையாட்டை வேடிக்கையாக விளையாடினார்கள். அது உடனடியாகப் பிரபலமானது. இங்கிலாந்து ராணுவ அதிகாரிகள், அதைத் தங்கள் தாயகத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அதை, ட்யூக் ஒருவர் மிகவும் நேசித்தார். அவரது கிராமத்தின் பெயர் பேட்மிண்டன். அந்தப் பெயராலேயே அது உலகமெங்கும் அறிமுகமானது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனத்தில் குஜூ என்கிற விளையாட்டு பிரசித்தியாக இருந்தது. கிட்டத்தட்ட அது கால்பந்து போல. பின்னர் அது, கிரேக்கர்களிடமும், ரோமானியர்களிடமும் சிப்பாகளின் விழிப்புணர்வை மேம்படுத்தும் விதத்தில் விளையாடப்பட்டு வந்தது. ஆனால், இன்றுள்ள வடிவத்தில் அது உருப்பெற்றது இங்கிலாந்தில்தான்.

சேவல் சண்டை, ஆட்டுச்சண்டை போன்றவை ஆசிய நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியவை. இதை மதத்தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும், இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் மிகவும் விரும்பப்பட்ட கேளிக்கையாக இருந்தது. பிறகு அது, மேட்டுக்குடியினரின் விளையாட்டாக உருவானது. சூதாட்டமாக மாறிய இது சிலருடைய எதிர்ப்பின் காரணமாக இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது.

காளைச்சண்டை என்பது ரோம் நாட்டோடு தொடர்புப்படுத்திப் பார்க்கப்படுகிறது. கலோசியத்தில் விளையாடப்படும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஸ்பெயின் நாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, பிரான்ஸ் நாட்டில் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற விளையாட்டாக மாறியது. இந்தியாவின் ஜல்லிக்கட்டு, அறுவடைக்குப் பிறகு ரத்தத்தைக் காவுகொடுக்கும் விளையாட்டாகப் பூடகமாக வடிவம் பெற்றது.

படகு செலுத்துதல் விளையாட்டாக ஹாலந்தில் உருவானது. அதை, இங்கிலாந்து ஸ்வீகரித்துக் கொண்டது. ‘செஸ்’ இந்தியாவில்தான் உதயமானது. அதற்குச் சதுரங்கம் என்று பெயர். சதுர் என்றால் நான்கு. யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகியவற்றை அது குறிக்கும். அது தோன்றிய விதத்தைக் குறித்துச் சுவையான கதையொன்று உண்டு. சிஸா என்கின்ற நபர் புத்திக்கூர்மைக்குப் பெயர்போனவர். அவரை பல்ஹைத் என்கிற அரசர் அழைத்து புத்திக்கூர்மையுடன் விளையாடுகிற ஒரு விளையாட்டை உருவாக்கும்படி கேட்டார். சிஸா சதுரங்கத்தை வடிவமைத்தார். வஸ்து புருஷமண்டலா என்கிற பலகையில் அது விளையாடப்பட வேண்டும். மொத்தம் 64 கட்டங்கள். அஷ்டப்பதா என்றும் அதை அழைத்தனர்.

சதுரங்கத்தைக் கண்டுபிடித்ததற்கு என்ன பரிசு வேண்டும் என்று அரசர் கேட்டபோது, முதற்கட்டத்தில் ஒரு தானியமும், இரண்டில் இரண்டும், மூன்றில் நான்கும், ஐந்தில் எட்டுமாக அதிகரித்துக் கொண்டே செல்ல 64வது கட்டம்வரை வருகிற தானியங்களைக் கொடுத்தால் போதும்” என்று சிஸா சொன்னார். ஆரம்பத்தில் அரசர், ‘இவ்வளவு சின்ன பரிசைக் கேட்கிறாரே!’ என்று சிரித்தார். ஆனால் 64வது கட்டத்திற்கான தானியங்களைக் கணக்கிட்டபோது, அந்த எண் 18,445,744,073,709,551,515. இது இன்று உலகம் முழுவதும் விளையும் தானியங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது. எனவே, அரசர் தானியங்களுக்குப் பதிலாகத் தங்க நாணயங்களைக் கொடுத்தனுப்பினார்.

சதுரங்க விளையாட்டு, அரசர்களுக்குப் போர்க்கலையைக் கற்றுத்தரும் விளையாட்டாகத் திகழ்ந்ததால் வேகமாகப் பரவியது. பாரசீகத்திற்கு கோஸ்ரோஸ் என்கிற மன்னன் ஆண்டபோது அறிமுகமானது. இதுகுறித்து பாரசீகக் கவிஞர் பிர்தெளிசி விரிவாக எழுதியிருக்கிறார். முகமதுபின் துக்ளக் அதிகநேரத்தைச் சதுரங்கத்தில் கழித்ததாக அவர் குறித்த நாடகத்தில் கிரீஷ் கர்னாட் எழுதியிருக்கிறார். அவர் ஒவ்வொரு போருக்கு முன்பும் சதுரங்கம் விளையாடுவார்.

புத்தத் துறவிகள் தியானத்தை மற்ற நாடுகளுக்குப் பரப்புவதற்காகக் காடுகளின் வழியாகப் பயணம் செல்ல நேர்ந்தது. அதற்குத் தற்காப்புக் கலை அவசியமாக இருந்தது. களரிப்பயிற்சி என்கிற விளையாட்டை வன்முறையில்லாமல் சுய பாதுகாப்பிற்கு மாத்திரம் மாற்றியமைத்து, அவர்கள் உருவாக்கிய சண்டை முறைதான் கராத்தே. புத்தமதம் பரவிய இடங்களுக்கெல்லாம் கராத்தேவும் பரவியது.

இன்றிருக்கும் பல நவீன விளையாட்டுகள் சரித்திர காலத்தில் வேறொருவிதத்தில் விளையாடப்பட்டவை. நாடுவிட்டு நாடு பயணப்படும்போது தேவையான மாற்றங்களை அந்தப் பகுதிக்கேற்றவாறு அடைந்து, இன்றுள்ள விளையாட்டு வடிவத்தை அவை அடைந்தன.

(தொடரும்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | 

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...