தாய்மை – சிறுகதை – காஞ்சி. மீனாசுந்தர்

 தாய்மை – சிறுகதை – காஞ்சி. மீனாசுந்தர்

அஞ்சலை வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டாள்.

“வேண்டாம் அஞ்சலை…இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி செஞ்சிக்கலாமா? யார் வீட்லதான் இதுமாதிரி பிரச்சனை இல்லை. தோ… நேத்து ராத்திரிகூட என்னெ போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு, காத்தால காட்டியும் நாயர் கடைல எனக்கு நாலு இட்லியும் டீயும் வாங்கிக் குடுத்துட்டு வேலைக்குப் போயிருச்சி. குடிச்சிட்டு வந்து அடிச்சிட்டா புருஷன ஒதுக்கிட முடியுமா. இல்லே வேணாம்னு தள்ளிட முடியுமா? என்ன செய்றது. நாமதான் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போவணும்.” என்றாள் எதிர் வீட்டு வள்ளி.

அஞ்சலை அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. நேற்று ரேஷனில் வாங்கிவந்த மண்ணெண்ணையும் தீப்பெட்டியையும் கையில் வைத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்தாள்.

“புள்ள எஞ்சத்தியமா ஒஞ்சத்தியமா நம்ம முனீஸ்வரன் சத்தியமா இனிம ஒன்ன அடிக்க மாட்டன் புள்ள.” வீட்டுக்கு வெளியே சன்னல் வழியே அஞ்சலையைப் பார்த்து குரல் எழுப்பினான், அவளுடைய புருஷன் மாரி.

“இந்தா இப்பகூட அடிக்க மாட்டேன்னுதான் சொல்ற. குடிக்க மாட்டேன்னு சொல்றியா? குடிச்சா ஒரு பேச்சி குடிக்காட்டி ஒரு பேச்சி. போய்யா இனிம ஓங்கிட்ட அடிவாங்க என் ஒடம்புல தெம்பு இல்ல….” அழுதாள் அஞ்சலை.

“அஞ்சல என்னெ உட்டுட்டுப் போயிடாத புள்ள. நா அநாத ஆயிடுவேன். ஒன்ன விட்டா எனக்கு யாரிருக்கா..” மாரி உண்மையிலேயே கதறினான். அவன் நிலைமையைப் பார்க்க எல்லோருக்குமே பாவமாகத்தான் இருந்தது.

அந்தத் தெருஜனம் முழுதும் அவ்வீட்டு முன்தான் கூடியிருந்தது. அப்போது தர்காவுக்குச் சென்று கொண்டிருந்த காதர்பாய், அக்கூட்டத்தைப் பார்த்து விசாரிக்க அவருக்கு விபரம் பதட்டமாய் சொன்னார்கள்…

பாய் படித்தவர். பெரியவர். நாலும் தெரிந்த நல்ல மனிதர் என்ற வகையில் ஊரில் அவருக்கு நல்ல மதிப்பிருந்தது.

“காதர் ஐயா நீங்க நாலு நல்ல வார்த்த சொல்லுங்கய்யா. பாவிமவ அநியாயமா உசுர விடப் போறேன்னு வீட்டுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டா. நீங்க கொஞ்சம் புத்திமதி சொல்லி வெளிய கூப்புடுங்கய்யா.” தெரு ஜனம் அவரிடம் முறையிட்டது. அவர் சன்னல் வழியே பார்த்தார்.

உள்ளே…

அஞ்சலை அழுது அழுது முகம் வீங்கி தலைவிரிக்கோலமாய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் வெள்ளை நிற கேனில் நீலநிற மண்ணெண்ணை இருந்தது. எந்த நேரத்திலும் தன்னை மாய்த்துக் கொள்ள சட்டென முடிவெடுத்து விடுவாள் போல்தான் இருந்தது.

இத்தனை ஜனமும் அவள் புருஷனும் கதறியும் கேளாமல் இப்படி மூர்க்கமாக செயல்படும் இவளிடம் எவ்வளவு சொன்னாலும் எடுபடப் போவதில்லை என்பதை உணர்ந்த பாய், “ஆமாம்… அஞ்சலையோட குழந்தை எங்கே ? ” என்று மெல்ல கேட்டார்.

“அதோ…எதிர் வீட்டுத் திண்ணையில ஏனைல தூங்கிக் கிட்டிருக்குங்கய்யா..” என்றார்கள்.

“சரி இங்க யாரும் கூட்டம் போடாதீங்க. அமைதியா கலைஞ்சு போங்க. அஞ்சலை தானா வீட்டைவிட்டு வெளிய வருவா பாருங்க.” என்று பாய் சொன்னதும் எல்லாரும் கலைந்து சென்றனர்.

பாய் என்ன சொல்கிறார் என்ன செயய போகிறார் என்று புரியாமல் மாரி, அவர் பின்னால் சென்றான்.

பாய் நேரே எதிர் வீட்டுக்குச் சென்றார். அங்கே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தொடையில் நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு உடனே அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விட்டார்.

குழந்தை வீல் என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது…

நல்லா தூங்கிக்கிட்டிருந்த குழந்தையை…
ஏன் இவர் கிள்ளி அழவிட்டாரென காரணம் புரியாமல் மாரி விழிக்க…

குழந்தையின் அழுகுரல் கேட்ட மாத்திரத்தில் வீட்டுக்குள்ளிருந்த அஞ்சலை, கதவைத் திறந்துகொண்டு எதிர்வீடு சென்று குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து,

“எஞ்செல்லம் அழாதேடா… உன்ன உட்டுட்டுப் போவேணா… எங் கண்ணுல்ல… என் ராசா இல்ல…” எனகொஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த காதர் பாய் மெல்ல புன்னகைத்தவாறு மேலே கையுயர்த்தி
“இன்ஷா… அல்லாஹ்…” என்றார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...