முகம் மாறிய மனிதர்கள் – உமா மயில்சாமி

 முகம் மாறிய மனிதர்கள் – உமா மயில்சாமி

சென்னையில் மையப்பகுதியில் வசதியாக வசிக்கும் தனசேகர், இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி. இவருக்கு பல மாவட்டங்களில் கிளைகளும் உள்ளன. இவர் ஒன்றும் எடுத்தவுடன் இந்த நிலையை அடையவில்லை.

பல போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்த நிலையை அடைந்ததாக பல தடவை தங்கள் தொழிலாளர்களிடம் உரையாற்றும் பொழுது கூறியிருக்கிறார்.

நிறுவனத்தில் சுமார் 300 பேர்களுக்கும் மேலாக பணி செய்கிறார்கள். அனைத்து தொழிலாளர்களுமே, தன் குடும்பம் மறந்து 24 மணி நேர உழைப்பையும் கொடுத்து நிறுவனத்தின் லாபத்திற்கு துணை புரிகின்றனர் என அவருக்கு நன்கு தெரியும்.

ஒவ்வொரு வருடமும் மே 1 ஆம் தேதி அன்று முதலாளி மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், திருமண நாள் போன்ற நாட்களிலும் ஊழியர்களுடன் கலந்துரையாடி கொண்டாடுவார்.

அந்த கொண்டாட்டத்தில் ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒரு கேக் மற்றும் அதிகபட்சம் ஒரு பிரியாணி. ஆனாலும் ஊழியர்கள் அந்த நாட்களையே தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தாக எண்ணி கொண்டாடுவர்.

ஏனென்றால் முதலாளியே எங்களிடம் உரையாற்றினார் என பெருமிதம் கொள்வர். இப்படிப்பட்ட விசுவாசிகளால் தானே பல முதலாளிகள் பல கோடிகளை பல தலைமுறைக்கு சேர்த்து வைத்து சந்தோஷமாக வாழ முடிகிறது. தொழிலாளி கடைசிவரை கடனாளியாகவே சாகவேண்டி உள்ளது.

உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா என்ற பேரலையில் இந்நிறுவனமும் சிக்கிக்கொண்டது. அனைவரையும் போல. ஆனாலும் அரசு அறிக்கை படி குறைந்த பட்ச ஊழியர்களோடு செயல்படுகிறது.

அனைத்து குடும்ப தலைவர்களுமே (நாட்டைக் காக்க இராணுவ வீரர்கள் இராணுவ எல்லையில் போராடுவது போல) ஒவ்வொரு குடும்ப தலைவனும் வீட்டைக் காக்க தன் உயிரை பணயம் வைத்து பணிக்கு செல்கின்றனர்.

பல குடும்ப தலைவிகள் தங்கள் கணவர் பணிக்கு போய் திரும்பும் வரை அவர் உயிருடன் வருவாரா, கொரானாவுடன் வருவாரா என்ற அச்சத்தில் நாட்களை மரண பயத்துடனே கடக்கின்றனர்.

இப்படிப்பட்ட நேரத்தில் மே 1 அன்று அந்த முதலாளி தொழிலாளர்களை சந்திக்க வேண்டிய நாள். தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை. நமது நாட்டின் முக்கிய தலைவர்கள் கானொளி காட்சியில் உரையாடுவது போல, இவரும் முகநூலில் தொழிலாளர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு இல்லாமல், “என்னால் இந்த முறை உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை. மற்றொரு நாளில் சந்திக்க ஏற்பாடு செய்வோம்” என்ற தகவலையும் அறிவித்தார்.

இதையும் அந்த பாவப்பட்ட தொழிலாளர்கள் ஓகே, லைக், ஷேர் செய்தனர். ஏனென்றால் நம்ம வடிவேலு பாணியில் சொன்னால் முதலாளிக்கு வந்தால் இரத்தம், தொழிலாளிக்கு வந்தால் தக்காளி சட்னிதானே.

முதலாளியால் சிகப்பு மண்டலத்தில் இருந்து ஒருநாள் சொந்த காரில் வர முடியாதாம். ஆனால் சிகப்பு மண்டலத்தில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் தினமும் பணிக்கு வரவேண்டும் இல்லை என்றால் சம்பளம் கட். நல்லா இருக்குல்ல இந்த லாஜிக். ஆனால் ஏழையின் சிரிப்பில் தானே இறைவனே வாழ்கிறார். அவர் தன் விளையாட்டை தொடங்கினார்.

மே 1 ஆம் தேதி தொழிலாளர்களை சந்திக்க வேண்டியவர் ஜுன் 1 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க படுகிறார். இந்த செய்தியும் குறுஞ்செய்தி மூலம் அனைத்து தொழிலாளர்களுக்கும் பகிரப்பட்டது.

அனைவரும் நிலை குலைந்து போய் விட்டனர். என்னடா இது நம் உயிரை பணயம் வைத்து வேலைக்கு வருவதே இவர் கொடுக்கும் சம்பளத்திற்காகத்தான். இதை நம்பித்தான் குடும்ப சக்கரமே சுழல்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் முதலாளிக்கு ஏதாவது நேர்ந்தால் நம் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலைதானே என்ற எண்ணத்தில் உடைந்த நெஞ்சோடு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று கூடி முடிவு செய்தனர்.

நீர், ஆகாரம் அருந்தாமல் 24 மணிநேரம் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இவர்கள் செய்த பிரார்த்தனையின் பயனாக முதலாளியின் உடலில் முன்னேற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மரண வாயில் வரை போய் மீண்டார்.

தொழிலாளர்களின் பிரார்த்தனை பற்றி அவர் மனைவி மூலமாக அறிந்து நெகிழ்ந்து போய் கண்ணீர் விடுகிறார். மனதில் திடீர் மாற்றம். நாம் இருப்போமா, இறப்போமோ தெரியாது. ஆனால் நம்மள நம்பித்தான் இத்தனை குடும்பங்கள் பசியாறுகிறது என்று எண்ணினார்.

சற்றும் தாமதிக்காமல் தன் மனைவியிடம் “மகனையும், மகளையும் வரச்சொல்” என்கிறார். அவர்கள் வந்தவுடன், “நான் ஒரு முக்கிய முடிவு எடுக்க போகிறேன். நீங்கள் அதை ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.” என்று தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினார்.

“அதாவது நம் நிறுவனம் லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நம் உழைப்போடு நம்ம தொழிலாளர்களின் கடுமையான உடல் உழைப்பாலும்தான். நாம் இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பது அவர்கள் சந்தோஷம் மறந்ததால்தான்.

எனவே அனைவருக்கும் 1 வீடு, 1 குழந்தையின் படிப்பு செலவு, பணிக்கு வர பேருந்து, இதோடு மட்டுமல்லாமல் இனிமேல் பணிநேரத்தையும் குறைத்து 8 மணிநேரம் மட்டுமே வேலை. வருடத்தில் 10 நாள் சம்பளத்துடன் விடுமுறை. பாவம் அவர்களும் குடும்பத்தோடு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும். என்ன சொல்கிறீர்கள்? சரிதானே?” என்று கேட்டார் தனசேகர்.

அவர்களும் “நீங்கள் அறியாததா அப்பா, உங்கள் முடிவு சரியாகத்தான் இருக்கும்.” என்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியும் அனைவருக்கும் பகிரப்பட்டது. அனைவரும் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கப் போகிறோமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு, இந்த இன்ப அதிர்ச்சியில் கண்கள் கலங்கி நன்றி கூறினார்கள்.

அனைத்து ஊழியர்களின் கண்ணீரால் அந்த முதலாளியின் உடல் நிலை சரியானது. சில தினங்களில் வீடு திரும்புவார் என்ற செய்தியும் வந்தது. இதை கேட்டவுடன் தொழிலாளர்கள் அனைவரும்

“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே இவ்வளவு காலம் நேர்மையாக உழைத்தோம். நாங்கள் இதை எங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறோம். நீங்கள் கொரோனா குடுத்த பரிசாக தருகிறீர்கள். தோள் கொடுக்க தோழன் என்பது போல இப்படிப்பட்ட முதலாளிகள் வந்தால் இந்த கொரோனா மட்டுமல்ல எத்தனை கொரானா வந்தாலும் தாங்குவோம். ஏனென்றால் இப்போதைய தேவையே உடல் வலிமையை விட மன வலிமைதான் தேவை. அதை நீங்கள் தந்துவிட்டீர்கள்.” என மனமுவந்து பாராட்டினர்.

இந்த செய்தியும் காட்டுத்தீ போல பரவியது. பல ஊடகங்கள் சிறப்பு செய்தி ஒளிபரப்பு செய்தது. இதைப்பார்த்த சில நிறுவனம் வாயடைத்து நின்றனர். பல நிறுவனங்கள் இவரைப் போன்று நாங்களும் பின்பற்றப் போகிறாம் என முன் வந்தனர். அனைத்து தொழிலாளர்களின் முகமும் மலர்ந்தது.

இப்போது கொரோனா என்ற கடவுள் பேசினார், “நானும் எவ்வளவோ கஷ்டங்களை அதாவது வெள்ளம், புயல், சுனாமி போன்று பேரிடர்களை தந்தேன். ஆனால் அப்போதும் அப்பாவி மக்களே பலியானார்கள். மேல்தட்டு மனிதர்களின் மனம் மட்டும் மாறவேயில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவியவர்கள் எல்லாம் சொந்த பந்தங்கள், நண்பர்கள், தன்னார்வளர்கள் இப்படித்தான் இருந்தது. எந்த நிறுவனங்களோ, முதலாளிகளோ அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவவில்லை.

வணிகர்கள் உதவ வேண்டிய நேரத்தில் கூட கொள்ளை லாபம் பார்த்து ஏழையின் வயிற்றில் அடித்தனர். உங்ககிட்ட சுயநலம் மட்டும் தான் இருந்தது. எனவேதான் கொரோனா என்ற புது அவதாரம் எடுத்து அனைத்து தரப்பினரையும் முடக்கி வைத்தேன்.

முதலாளி மட்டும் அல்ல ஊழல் பேர்வழிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் முகமூடியை கிழிக்கத்தான் அனைவரையும் முககவசம் அணிய வைத்தேன். இன்னும் சில பேர் நாங்கள் பொருளாதாரத்தை நிலைநாட்ட போகிறோம் என்று எனக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் விரைவில் மனம் மாறுவர். பொதுவாக உழைப்பாளியின் வியர்வை காயும் முன் கூலியை கொடுக்க வேண்டும், வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது என்று சொல்வார்கள். இவற்றையெல்லாம் மறந்து விட்டு முககவசத்தில் கூட தங்கள் புகைப்படத்தை போட்டு வழங்கி வருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது ச்சே எனக்கே (கொரோனா) முககவசத்தை தூக்கி எறிய சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.”

சில மாதங்கள் கடந்தது.

மீண்டும் கொரோனா பேசியது “இப்போது இந்த முதலாளி மட்டும் அல்ல பல தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஊழல் செய்தவர்கள் லஞ்சம் பெற்றவர்கள் அனைவருமே முகம் மாறியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் வந்த வேலை நிறைவடையப் போகிறது. என்னால் கஷ்டப்பட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன். இனி வரப்போகும் காலங்கள் உங்களுக்கு பொற்காலமாக அமையும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.”

மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்கி வழி அனுப்பி தங்கள் முககவசத்தை கிழித்து முகம் மாறினர்.

முற்றும்….

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...