“பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்…!” – டெய்சி மாறன்

 “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்…!” – டெய்சி மாறன்

Sarath Kumar in Kanchana Movie

நேற்று மாலை நகரத்தின் மத்தியில் எழுதப்பட்ட அந்த வன்முறைச் சரித்திரத்தின் ரத்த அத்தியாயம், நாட்டையே உலுக்கியிருந்தது. நிகழ்வு நடந்தேறிய அந்த ஊரோ, பீதி கலந்த இறுக்கத்தில் மூழ்கியிருந்தது. எப்போதோ வெட்டிக் கொல்லப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுடைய மரணத்திற்கு வன்மம் தீர்க்கும் விதமாய் நிகழ்த்தப்பட்ட, அந்தப்பழிக்குப் பழி கொலையில் நேற்று மூன்று முஸ்லீம்கள் மரணத்தை தழுவியிருந்தனர்.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. 144 தடை உத்தரவு இல்லாமலே மக்கள் வெளியில் வர அஞ்சி வீட்டிற்குள்ளேயே கிடந்தனர். அவ்வப்போது போலீஸ் ஜீப்களும், ராணுவ வேன்களும் மட்டும் அபரிமிதமான சப்தத்தையும், புழுதியையும் கிளப்பிக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் ஓடின.

பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டிருக்க, வழக்கமாய் கூட்டம் நிரம்பி வழியும் பேருந்து நிறுத்தங்கள், கோயில்கள், காய்கறி மார்க்கெட் என எல்லாமே அமைதியில் ஆழ்ந்திருந்தன. பஜார் தெரு ஆள் நடமாட்டமில்லாமல் பரிதாபமாய் படுத்துக் கிடந்தது. உணவகங்கள் ஷட்டருக்குள் முடங்கிப் போயிருந்தன. அதன் புகை போக்கிகளுக்குள் பூனைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

கடைத்தெருவிலிருந்து அரை பர்லாங் தூரத்தில் இருந்தது “பத்மா மேன்ஷன்” வெளியூரிலிருந்து வேலை நிமித்தமாக இந்த ஊருக்கு வந்து செட்டிலாயிருக்கும் பேச்சிலர்களின் தற்காலிக பாசறை அது. கிட்டத்தட்ட இருபது அறைகள் கொண்ட அந்த மேன்ஷனில் மொத்தம் நாற்பத்தியெட்டு இளைஞர்கள் தங்கிருந்தனர் எல்லோருமே வெளியூர்வாசிகள் வயிற்றுப் பிழைப்பிற்காக சொந்த ஊரையும், சொந்த மக்களையும் பிரிந்து வந்து இங்கே தங்கியிருக்கும் அவர்கள் அனைவரின் வயிற்றுப்பசியைத் தீர்க்கும் அன்னலட்சுமியாய் அந்த பத்மா மேன்ஷனுக்கு எதிரேயிருந்தது “சொர்ணா மெஸ்”.

அந்த இளைஞர்களுக்கு அவரவர்கள் தாயின் கைப்பக்குவத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் சமைத்துக் கொடுத்து, அதன் காரணமாகவே வெற்றிக்கொடி நாட்டியிருந்தது அந்த சொர்ணா மெஸ் அத்தோடு அந்த இளைஞர்களுக்கு மன்த்லி பேஸிசில் பணம் கொடுத்தால் போதும் என்கிற ஒரு சலுகையையும் அளித்திருந்தது. அவர்களின் சம்பள தினத்தன்று சொர்ணா மெஸ்ஸின் கல்லா நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும்.

சொர்ணா மெஸ்ல சாப்பிட்டா வயித்துப் பிரச்சனையே வராதுப்பா வீட்டுல சாப்பிடற மாதிரி இருக்கும் நண்பர்களுக்கு தைரியமாய் சிபாரிசு செய்வார்கள் பத்மா மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞர்கள். கலவரம் காரணமாய் அந்த சொர்ணா மெஸ்ஸும் இன்று மூடப்பட்டிருந்தது. அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த இளைஞர்கள் காலை உணவை இழந்து, மதிய உணவை மறந்து, மனம் நொந்து போய் அமர்ந்திருந்தனர். “டேய் குரு. சொர்ணா மெஸ் அண்ணாச்சிக்கு மறுபடியும் ஒரு போன் அடிச்சுக் கேளுடா. என்னால வயித்துப்பசி தாங்க முடியலைடா!” சீர்காழியிலிருந்து வந்து தங்கியிருக்கும் சரவணன் சொல்ல,

“ஏற்கனவே கேட்டுட்டேன். “கடை திறக்க வாய்ப்பே இல்லை”ங்கறார்!” குரு சோகமாய்ச் சொன்னான்.

“இங்க நாற்பத்து மூணுப்பேர் கொலைப்பட்டினில் கிடக்கறோம்!”னு சொல்லுடா” குரலை உயர்த்திச் சொன்னான் சரவணன்

“அவருக்குத் தெரியாதா?… அவரும் நமக்கு சமைச்சுப் போட ரெடியாய்த்தான் இருக்கார். புகை போக்கி புகை வெளிய போனாலே பிரச்சினையாயிடும்னு பயப்படறார்… இதுக்கு முன்னாடி ஒரு தடவை இந்த மாதிரி நடந்தப்ப தெரியாத்தனமா அடுப்பு பற்ற வெச்சாரம் ஒரு கலவர கும்பல் வந்து கடையையே அடிச்சி துவம்சம் பண்ணிட்டானுகளாம். கிட்டத்தட்ட ஒண்ணேகால் லட்சம் நஷ்டமாம்…”

“சரி.. இப்ப என்னதான் பண்றது?” வயிற்றைத் தடவிக் கொண்டே கேட்டான் சரவணன்.

“இன்னிக்கு நமக்கு வாய்த்த உணவு தண்ணீர்தான். அதைக் குடிச்சு வயிற்றை நிரப்பிக்கிட்டு… தூங்குவோம்!… அநேகமா நாளைக்கு சரியாயிடும்னு நினைக்கறேன்” நம்பிக்கையோடு சொன்னான் குரு

அவன் நம்பிக்கையை வீணடிக்கும் விதமாய் மறுநாளும் அதே நிலைமை நீடித்தது. “இதென்னடா கொடுமையாயிருக்கு ?… டி. வி.யையும் கட் பண்ணிட்டாங்க மொபைல் போனுக்கும் டவர் கிடைக்காமப் பண்ணிட்டாங்க!… ஒரு கடை கண்ணியும் இல்லை. சோத்துக்கும் வழியில்லை என்னதான் பண்றது?” ஆவேசமாய்க் கத்தினான் நெல்லை மாவட்டத்துக்காரன். அவனுக்கு பதில் சொல்லும் தெம்பில் அங்கு யாரும் இல்லை. எல்லோருமே துவண்டு போய்க் கிடந்தனர்.

இரண்டாம் நாள் பட்டினியைத் தாங்க முடியாமல் இரண்டு இளைஞர்கள் மயங்கிப் போயினர். சக நண்பர்கள் அவர்களைத் தெளிவித்து, ரொட்டி பன் போன்றவற்றைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி வைத்தனர்.

அன்று மாலை, அதிசயத்திலும் அதிசயமாய் மொபைல் போன் வேலை செய்தது. சொர்ணா மெஸ்ஸிலிருந்து அண்ணாச்சி அவரே கால் செய்தார். “டேய் அண்ணாச்சிதான் கால் பண்றார். அநேகமா நமக்கெல்லாம் சமையல் ரெடி பண்ணியிருப்பார்ன்னு நெனைக்கறேன்!” சந்தோஷமாய்ச் சொல்லிக் கொண்டே காலை அட்டெண்ட் செய்தான் சரவணன்.

“தம்பிகளா.. என்னப்பா பண்ணிட்டிருக்கீங்க?” விசாரித்தார் அண்ணாச்சி

“அண்ணாச்சி.. மொதல்ல சாப்பாடு குடுங்க. அப்புறம் எது வேணா கேளுங்க” சரவணன் கதறினான்.

“தம்பி. சத்தியமாய்ச் சொல்றேன்ப்பா…. அங்க நீங்கெல்லாம் பசியோட கிடப்பீங்களேன்னு நெனச்சு நெனச்சு என்னால இங்க நிம்மதியா இருக்க முடியலைப்பா! ஏதாச்சும் வழி பண்ணலாம்தான் பார்த்தேன்…ஆனா கலவரக்காரனுக ரொம்பவே ஆக்ரோஷமாய் இருக்கானுக சிக்கினோமன்னா பீஸ்பீஸாக்கிடுவானுக” அண்ணாச்சியின் குரலில் முந்தைய சம்பவத்தின் தாக்கம் தெரிந்தது.

“அவனுக கிட்டேயே சொல்லுங்க அண்ணாச்சி.. “இந்த மாதிரி வெளியூர்ப் பசங்க நாற்பது பேருக்கும் மேல் என்னை நம்பித்தான் இருக்கானுக.. அவனுகளுக்கு நான் சோறு போட்டாகணும்”னு சொல்லுங்க அண்ணாச்சி” சரவணனின் வயிற்றுப் பசி அவனைப் பேச வைத்தது.

“அந்த அளவுக்கெல்லாம் அவனுக காது குடுத்துக் கேட்க மாட்டானுக தம்பி… ம்ம்ம்.. கொஞ்சம் டைம் குடுங்க வேற ஏதாச்சும் வழியிருக்கான்னு யோசிச்சிட்டுக் கூப்பிடறேன்! அதுக்கு முன்னாடி யாரும் தெருவுல இறங்கிடாதீங்கப்பா!..ஒருபக்கம் கலவரக்காரங்க திரியறாங்க இன்னொரு பக்கம் போலீஸும்… ராணுவமும் அவனுகளைச் சுடுவதற்காகத்திரியுது இடையில் யார் வந்தாலும் என்ன ஏதுன்னு கேட்காம குருவி சுடற மாதிரி சுட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பாங்க ஜாக்கிரதை”

“சரிங்க அண்ணாச்சி” நடுங்கும் கையால் மொபைலை பாக்கெட்டிற்குள் வைத்தான் சரவணன் “ஹும்… சொந்த ஊரை விட்டுப் பிழைப்பு தேடி வந்து… இப்படி சோத்துக்குக் கூட வழியில்லாமல் கிடக்கிறோமே?ன்னு நெனச்சா. நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்குடா!… எங்கம்மா எனக்கு “வேண்டாம். வேண்டாம்”ன்னு சொன்னாலும் கேட்காம சோற்றைக் கொட்டுவா!..ஹும்…இப்ப அதை நெனைச்சா அழுகையே வருது. பேசாம அவனவன் ஊர்ல ஆயிரமோ ரெண்டாயிரமோ சம்பாதிச்சிட்டு அங்கியே நிம்மதியா பொழைப்புத்தனம் பண்ணிட்டு இருந்திருக்கலாம்!” தனக்குத் தானே புலம்பினான் சரவணன்.

அப்போது மறுபடியும் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான். அண்ணாச்சி. “ம். சொல்லுங்க அண்ணாச்சி…?”

“தம்பி…நான் உன் கூட போன் பேசிட்டு வெச்ச மறு நிமிஷம் ஒருத்தர் போன் பண்ணினாங்க..”உங்க மெஸ்ஸுல சாப்பிடற பசங்களெல்லாம்… சாப்பாட்டுக்கு என்ன பண்றாங்க?”ன்னு விசாரிச்சாங்க. “ரெண்டு நாளா கொலைப்பட்டினில் கிடக்கறானுக ன்னு சொன்னேன். உடனே கிளம்பி என்னோட இடத்துக்கு வரச் சொல்லுங்க சுடச் சுட சாப்பாடு தயாராயிருக்கு!”ன்னு சொன்னாங்க!”

“ஆஹா.. யாரு அண்ணாச்சி அந்த தெய்வம்?… அவங்க மட்டும் எப்படி அண்ணாச்சி கடை திறந்தாங்க?” சரவணன் கேட்க, “அய்யய்ய. அது கடையல்ல. வீடு….” என்றார்.

“வீடா?… அவங்க எப்படி எங்களுக்கு … சாப்பாடு?” நம்ப முடியாமல் கேட்டான் சரவணன்.

“ஒரு… மனித நேயம்தான்”

“அது செரி… நாங்க இப்ப வெளிய போகலாமா?” பரபரத்தான்.

“ம்ஹூம். தெருவுல இறங்கிப் போயிடாதீங்க எல்லோரும் மொதல்ல மொட்டை மாடிக்குப் போங்க அங்கிருந்து ஜாக்கிரதையா அடுத்த பில்டிங் மொட்டை மாடிக்குத் தாவுங்க அப்படியே வரிசையா மூன்று பில்டிங் தாண்டியதும் நான்காவது பில்டிங்ல கீழே இறங்குங்க அண்ணாச்சி சொல்ல, இடையில் புகுந்து, “அங்கதான் சோறு போடறாங்களா?” பறந்தான் சரவணன்.

“இருப்பா அந்த நான்காவது பில்டிங் பின்பக்கமா ஒரு படிப்போகும் அதில் கீழே இறங்கினா அடுத்த தெரு வரும் வீட்டோட மெயின் கேட்டை லைட்டா திறந்து ஒவ்வொருத்தரா எதிர் சாரியிலிருக்கும் கோயிலுக்குப் போங்க”

“அது என்ன கோயில் அண்ணாச்சி?”

“அர்த்த நாரீஸ்வரர் கோயிலப்பா!… அதுக்கு பின்னாடி சின்ன மண்டபம் இருக்கு!… அங்க உங்களுக்கு சாப்பாடு தயாராயிருக்கு எல்லோரும் போய் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டுட்டு வாங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்கப்பா! ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது ரெண்டு பக்கமும் பார்த்திட்டு கிராஸ் பண்ணுங்க என்ன?”

“ரொம்ப நன்றி அண்ணாச்சி இணைப்பைக் கட் செய்தவுடன் அந்த தகவலை சரவணன் எல்லா அறைக்கும் பரப்பி விட, பத்தாவது நிமிடம் நாற்பத்தி மூணு பேரும் மொட்டை மாடியில் இருந்தனர்.

அகோரப்பசியின் உந்துதல் அவர்களை அதீதமாய் உசுப்பி விட்டிருக்க, எட்டாவது பில்டிங்கின் மொட்டை மாடியை வெகு சீக்கிரத்திலேயே எட்டி விட்டிருந்தனர். “ம….மள வென்று தரைத் தளத்திற்கு வந்து சாலையின் இரு புறமும் பார்த்து விட்டு ஒருவர் பின் ஒருவராய் எதிர் சாரியிலிருந்த அர்த்தநாரீஸ்வரர் கோயிலை அடைந்தனர். கோவில் மண்டபத்தை அவர்கள் நெருங்க நெருங்க காற்றில் மிதந்து வந்த முருங்கை சாம்பார் மணமும், மிளகு ரசத்தின் வாசமும், ஏற்கனவே கொள்ளைப் பசியில் இருந்தவர்களை மேலும் பசியாக்கிட மண்டபத்தினுள் ஓடிச் சென்று இடம் பிடித்தனர்.

“வாங்கப்பா. வாங்க!”

ஆண் குரலும் இல்லாமல், பெண் குரலும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒரு குரல் அவர்களை வரவேற்க, எல்லோரும் ஒரு சேரத் திரும்பிப் பார்த்தனர். மறு நிமிடம் பேரதிர்ச்சி வாங்கி சிலையாய் நின்றனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற பெண், அந்த ஏரியாவில் திரிந்து கொண்டிருக்கும் ஒரு திருநங்கை. ஆனந்தனாய் இருந்து இன்று ஆனந்தியாக மாறியிருப்பவள். இப்படியொரு பிறவியை அந்த ஆண்டவன் தனக்குக் கொடுத்தது ஒரு தண்டனை என்று எண்ணாமல், அர்த்தநாரீஸ்வரர் தன்னுடைய அவதாரமாய் தன்னை இந்த பூமியில் ஜனிக்க வைத்திருக்கின்றார், ஆகவே இந்தப் பிறவி ஒரு கொடுப்பினை! என்று எண்ணி வாழ்பவள் அந்த திருநங்கை. அதனாலேயே, பிச்சை எடுக்காமல், எந்த வித தவறான” வேலைகளில் ஈடுபடாமல் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு, அதில் நிபுணத்துவம் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். அவளைப் பார்த்ததும் பேசவே நா எழாமல், சாப்பாட்டு இலையில் உட்காரத் தயங்கி அப்படியே கூனிக்குறுகி நின்றனர் அந்த இளைஞர்கள்.

“என்னப்பா.. ஏன் நின்னுட்டீங்க?.. உட்காருங்க. உட்கார்ந்து வயிறார சாப்பிடுங்க ஆனந்தி சொல்ல, அதே தயக்கத்தோடு நின்றது அந்த பசிக் கும்பல் அவர்கள் அனைவர் மனத்திரையிலும் சில நாட்களுக்கு முன்பு அந்த “சொர்ணா மெஸ்ஸில் நடந்த அந்த நிகழ்ச்சி திரைப்படமாய் ஓடியது.


“அவ என்ன.. என்ன… தேடிவந்த அஞ்சல அவ நெறத்த பார்த்து செவக்கும், செவக்கும். வெத்தலை..” பாடிக் கொண்டே சொர்ணா மெஸ்ஸிற்குள் நுழைந்த சரவணனும் அவன் சகாக்களும், அங்கு தங்களுக்கு முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த திருநங்கையைப் பார்த்ததும் அருவருப்பாய் முகத்தைச் சுளித்தனர். “அய்யய்ய. இதென்ன இந்தச் சனியனெல்லாம் இங்க வந்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கு?” சரவணன் கோபமானான்.

“கூப்பிடுய்யா அண்ணாச்சியை!” சரவணனுடன் வந்திருந்த குரு, அந்த திருநங்கைக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த சிறுவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்துச் சொன்னான். மறு விநாடியே தெறித்தோடிய சிறுவன், சமையல்கட்டிற்கு அடுத்திருந்த ஸ்டோர் ரூமிலிருந்து சொர்ணா மெஸ் ஓனர் அண்ணாச்சியைக் கையோடு அழைத்து வந்தான்.

“என்ன தம்பி என்ன பிரச்சினை?” கேட்டவாறே வந்து நின்றார் அண்ணாச்சி.

அந்த திருநங்கையைக் கை காட்டி, “இதென்ன?” கேட்டான் சரவணன்.

“விடுப்பா… எப்பவும் சாப்பிட வராது… இப்ப ரெண்டு நாளா உடம்பு முடியலையாம். அதான் வந்திருக்கு”

அண்ணாச்சி அந்த திருநங்கைக்கு ஆதரவாய்ப் பேச

பாருங்க அண்ணாச்சி. நாங்கெல்லாம் டீஸண்டான கம்பெனிகள்ல…டீஸண்டான உத்தியோகத்துல இருக்கற ஆளுங்க… நாங்க உங்க கடைக்கு சாப்பிட வர்றது உங்க கடைக்குப் பெருமை! அந்தப் பெருமையை இழந்திடாதீங்க” என்றான் சரவணன்.

“தம்பி. என்ன தம்பி… பாவம் சாப்பிட்டுப் போகட்டும்”

“தாராளமா சாப்பிட்டுட்டுப் போகட்டும்.. ஆனா இனிமேல் நாங்க யாரும் இந்த மெஸ்ஸுக்கு சாப்பிட வரமாட்டோம் என்ற சரவணன், குருவின் பக்கம் திரும்பி, “டேய் குரு மேன்ஷனுக்குப் போய் நம்ம ஃபிரெண்ட்ஸ் எல்லோரையும் கையோட கூட்டிட்டு வந்து இந்த அநியாயத்தைக் காட்டுடா” ஆணையிட்டான்.

ஓடிச் சென்ற குரு நான்காவது நிமிடம் தன் நண்பர்கள் இருபது பேரோடு வந்து நின்றான். வந்தவர்கள் அனைவருமே திருநங்கை அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை ஏதோ செத்த எலியைப் பார்ப்பது போல் பார்த்து

விட்டு, “அண்ணாச்சி… என்ன நடக்குது இங்கே?” கேட்டனர். அண்ணாச்சி பதிலேதும் பேச முடியாமல் நிற்க,

பாருங்க அண்ணாச்சி… இப்ப… இந்த நிமிஷமே… அந்த ஈனப்பிறவி எந்திரிச்சு ஓடணும்!… இனிமேல் அது இந்த மெஸ் பக்கமே வரக்கூடாது!.. அப்படி மட்டும் நடக்கலேன்னா..நாங்க எங்க மேன்ஷன்ல இருக்கற நாற்பத்தியெட்டு பேரும் இங்க சாப்பிட வரமாட்டோம்! எங்க கணக்கை இன்னியோட முடிச்சுக்கங்க”

பாவம் தம்பி. அதுக்கு உடம்பு முடியலையாம்…”

சரவணன் விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு முறைக்க, “பாதில் எழுப்பச் சொல்றியே தம்பி” மறுபடியும் அண்ணாச்சி அந்த திருநங்கைக்கு சாதகமாகவே பேச வேக வேகமாய் நடந்து சென்று அந்த திருநங்கை சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை அப்படியே பிடித்து இழுத்து தரையில் கொட்டினான் சரவணன். பீறிக் கொண்டு வந்த கோபத்தை அப்படியே விழுங்கிக் கொண்டு, புன்னகை பூத்தாள் ஆனந்தி என்னும் அந்த திருநங்கை

“போ வெளிய” வாசலைக் கை காட்டினான். தான் சாப்பிட்டதற்கான பணத்தை அண்ணாச்சியின் கையில் திணித்துவிட்டு வெளியேறினாள் அவள்.


“என்னப்பா..என்னாச்சு உங்களுக்கு?… சாப்பிட்டு ரெண்டு நாளாயிருக்குமே?… பசி வயிற்றைக்கிள்ளுமே?… சாப்பிடுங்கப்பா” திருநங்கை கெஞ்சினாள்.

“அது வந்து எங்களை..மன்னிச்சுக்கங்க” திக்கித் திணறினான் குரு

“எதுக்கு?” திருப்பிக் கேட்டாள் ஆனந்தி

“நாங்க அன்னிக்கு சொர்ணா மெஸ்ஸுல நீங்க சாப்பிட்டுக்கிட்டிருந்தப்ப… இலையைப் பிடிச்சு இழுத்து…” சொல்லவே தயங்கினான் சரவணன்.

“தம்பி… அது வேற இது வேற!.. நீங்கெல்லாம் மனிதர்கள். அதனால் அப்படித்தான் இருப்பீர்கள்…. நான் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம்… நான் இப்படித்தான் இருப்பேன்… நீங்கள் பிறந்த இந்த உலகத்தில் தான் நாங்களும் பிறந்தோம். நாம் இருவரும் பிறந்ததும் பத்துமாதங்கள் தான். நீங்க உருவான கருவறையில் தான் நாங்களும் உருவானோம். உங்களைப்போல நாங்களும் தாய் மடியில் தான் தவழ்ந்து வளர்ந்தோம். ஆனால் எங்களை மட்டும் இந்த சமுதாயம் வேறுபிரித்து பார்க்கிறதே ஏன்? தவம் கிடந்து பெற்ற தாய்க்கூட எங்களை தவறென்று ஒதிக்கி தள்ளுகிறார்களே அது ஏன்? திருநங்கைகள் என்றால் கைத்தட்டி பாலியல் தொழில் செய்பவர்கள் மட்டுமே என்றிருக்கிற சமுதாய அவல நிலையை, மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி நாங்களும் சட்டத்துக்கு முன் சமம் என்ற நிலையை இளைஞர்களாகிய நீங்கள் முன் வந்து எங்களுக்கெல்லாம் சமநிலையை உருவாக்கி தரவேண்டும் என்று வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். என்று கையெடுத்து வணங்கிவிட்டு, எதையும் மனசுல வெச்சுக்காம நல்லா சாப்பிடுங்க”

என்றாள் ஆனந்தி. அவள் பேச்சில் இருந்த உண்மையும், அன்பும், ஆதரவும், கனிவும், கருணையும் அந்த இளைஞர்களை நெகிழ்த்தி விட, அவர்களுக்கு மனசோடு சேர்ந்து கண்களும் கசிந்தன,

“எங்களை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தையாவது சொல்லுங்க ப்ளீஸ்” சரவணன் கெஞ்ச

“ம்ம்ம்…நான் அப்படிச் சொன்னால்தான் சாப்பிடுவீங்கன்னா…நான் தாராளமா சொல்றேன்…. மன்னிச்சிட்டேன்!.. போதுமா?… சாப்பிடுங்க” என்றாள் ஆனந்தி.

அவர்கள் மனநிறைவோடு இலை முன் அமர, ஆனந்தி தானே அவர்களுக்குப் பரிமாறினாள். சரவணன் இலைக்கு சாம்பார் விடும் போது, “தம்பி.. யாரை எங்கே நிறுத்தறதுன்னு யோசிக்கறதை விட, நாம் எங்க நிற்கணும்கறதை முடிவு செஞ்சிட்டு வாழ்றவன்தான் தம்பி ஜெயிப்பான்!” என்றாள்.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின், ஆனந்தியிடம் நன்றி சொல்ல வந்து நிற்க, “தயவு செய்து நன்றியெல்லாம் சொல்லி என்னை வேறுபடுத்திடாதீங்கப்பா என்று சிரிப்போடு சொன்னவள், ஒரு காகிதத்தை அவர்கள் அனைவரின் கைகளிலும் திணித்து அனுப்பினாள். வெளியே சென்று அதை விரித்துப் படித்தான் சரவணன்.

“மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில மந்திரங்கள் – சாந்தமாகப் பேசுங்கள் – பொறுமையாக இருங்கள் – உண்மையாக இருங்கள் – யதார்த்தத்தை உணருங்கள் – சரியாக திட்டமிடுங்கள் – நேர்மையாக சம்பாதியுங்கள் – நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் – எதிர்பார்ப்பின்றி பழகுங்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” பிறப்பினால் அனைவரும் ஒருவரே! பிறப்பினால் வேறுபாடு இல்லை என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ஆதலால் எல்லோரிடத்தும் அன்பு காட்டுங்கள்.” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

(முற்றும்)

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...