பேரழகியின் பெயரென்ன ? | விமர்சனம் – லதா சரவணன்

 பேரழகியின் பெயரென்ன ? | விமர்சனம் – லதா சரவணன்

96 பக்கங்களை கொண்ட காஷ்மீர் ஜோசப் அவர்களின் பேரழகியின் பெயரென்ன ? கேள்விக்குறியோடு தலைப்பைச் சுமந்திருக்கும் இந்த கவிதைத்தொகுப்பு காதல் ஒவ்வொரு பரிமாணத்தையும் விவரிப்பதாய். வலியும், சுகமும், ஏக்கமும், தவிப்பும், பூரண திருப்தியும், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு அழகான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர்.

காதல் அதை சுவாசிக்காத மனிதர்கள் இல்லை, எல்லா உறவுகளுக்கு உள்ளும் வெவ்வேறு பரிமாணங்களில் காதல் வாழ்ந்து வருகிறது. நமக்கு வேண்டிய பெயர்களை நாம் அதற்கு இட்டுக் கொள்கிறோம் என்பதே உண்மை. சுழன்று வரும் உலகத்தின் நாடியாய் இந்த உணர்வு உள்ளது என்பது மறுக்க இயலாததே.

தொகுப்புகள் முழுவதும் வார்த்தைகளோடு படங்களும் இணைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கிறது புத்தக வடிவமைப்பு, காதல் மட்டும்மல்ல எல்லா உறவுகளுக்குமே நம்பிக்கை என்று ஒன்று உள்ளது. நிறைய வரிகளில் ரசிப்புத்தன்மையோடு கூடிய உவமைகள் இருந்தது.

துணையாக நீ
கிடைத்தால் துவண்டு
போன வாழ்க்கையும்
தளிர்விடத் தொடங்குமடி

வாழ்க்கையின் எல்லா அத்தியாயங்களையும் சுவையாய் படித்திட இனிமையான ஒரு துணை வேண்டும் என்று உணர்த்தும் கவிதை வரிகள் இவை.
காதலையும் கண்ணீரையும் பிரித்து பார்க்க வேண்டியதில்லை, அது இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளைப் போல என்பதை பின்வரும் வரிகளில் விளக்குகிறார்.

கடவுளே நீ படைத்த காதல்
எனும் கொடிய நோய்க்கு
கண்ணீர்தான் வலி தீர்க்கும் மருந்தோ !

தடைகளைத் தாண்டிய வெற்றிக்கு செய்ய வேண்டியது முயற்சிகள் ஆனால் காதலில் மட்டும் அந்த முயற்சிகள் தீர்ந்து போன பேட்டரி ஆகிவிடுகிறது. திரையுலகில் சொல்ல மறந்த சொல்ல மறுத்த நேரங்கள் கடந்த நிலையில் காதலைப் பற்றிய சொல்லாடல்களை எத்தனையோ இயக்குநர்கள் சிற்பங்களாக வடிவமைத்து விளக்கியுள்ளார்கள்.

காதலை சொல்லும்போது மட்டும் நாக்கு ஒட்டிக்கொண்டது அவள் கண்களைப் பார்த்த போது பேச முடியவிலலை என்று அநேக வசனங்களை காதலின் ஏக்க உச்சரிப்புகளோடு நம் காதுகாள் ஏற்றிருக்கிறது ஜோசப்பின் வரிகள்

சொல்ல மறுப்பதை விட
சொல்லாமல் மறைப்பதே
காதல் தோல்விக்கு காரணம்

காதலின் குறும்பாய் அவள் என்னிடம் சொல்லும் பொய்கள் கூட புதுமையாய் உள்ளது என்ற கவிதைவரிக்குள் கொப்பளிக்கும் வாலிப குறும்புகள் ரசிக்க வைக்கிறது.
அனைத்து கவிதைகளில் மிகவும் ஆத்மார்த்தமாய் உணரக் கூடியதாய் இருந்தது அந்த சில வரிகள்.

காதலிக்கும் போது ஊன் உலகம் என்று அனைத்தையும் நீதான் என்று வாக்குறுதிகளை அரசியல் சாசனத்தைப் போல வீசுவார்கள். இறுதியில் காதல் கனிந்து கல்யாணம் என்ற கட்டத்தில் சிக்கும் போது வாக்குறுதிகள் அனைத்தும் காற்றுவாக்கில் காத்தாடியாய் பறக்கும். இக்கவிதையில் வாழ்க்கை முடியும் வரையில் வாக்குறுதிகள் வார்த்தையாக இல்லாமல் வாழ்வாதாரமாக இருக்கட்டும் என்ற எழுத்து எல்லாக் காதலிலும் உண்மையாகட்டும்

வாக்குறுதிகளை கொடுத்து
காதலியுங்கள்
வாழ்க்கை முடியும் வரை
வாழ்ந்து காட்டுங்கள்…
நீங்கள் தரும் வாக்குறுதிகள்
வார்த்தையாக இல்லாமல்
காதலின் வாழ்வாதாரமாகட்டும் !

காதல் என்ற கட்டத்தையும் தாண்டி இன்னும் சமூக சார்ந்த விடயங்களைக் குறித்தும் கவிஞரின் பேனா பேசட்டும். இன்னும் வார்த்தைகளில் வீரியம் ஊற்றி….வாழ்த்துக்கள்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...