சகிதாமுருகனின் மரப்பாச்சி – விமர்சனம் – லதா சரவணன்
ஒரு உயிரற்ற பொம்மையின் உயிர்ப்புள்ள வாழ்க்கைச் சித்திரம் இந்த மரப்பாச்சி. கதையின் தலைப்பு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சகிதா முருகனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்று நினைக்கிறேன்.
வெறும் வர்ணனைகளில் வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் அற்புதமான கதையோட்டத்தை தெளிந்த நீராய் கொடுத்திருக்கிறார் அதற்கு வாழ்த்துக்கள்.
பிருந்தா அன்பான மகள், அழகில்லா உடல் அமைப்பினால், திருமணம் என்ற சந்தையில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறாள். சகோதரிகளின் வெறுப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்து இரண்டாம் தாரமாக மணிமாறனை மணக்கிறாள்.
மணிமாறன் அவளைவிடவும் வயதில் பெரியவர், டீன்ஏஜ் பெண்ணிற்குத் தந்தை, திடுமென்று தந்தையின் திருமணத்தினால் வந்த ரெடிமேட் அம்மாவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம். தன் தாய்மையை அவள் புரிய வைக்கப் போராடும் கதையாக இருக்கும் என்றுதான் மேற்கொண்டு படிக்கத் துவங்கியதே !
ஆனால் ஒரு கட்டத்தில் பிருந்தாவின் அன்பை உணர்ந்து அவளை சித்தியாய் இல்லாமல் தாயாய் ஏற்றுக்கொள்ளும் மகள். பருவடைந்த அவளின் உடல் அந்த சின்னபெண்ணிற்கேத் தெரியாமல் களவாடப்பட்டு அதன் சாட்சியாய் அவளிற்குள் ஒரு சிசு.
தந்தை வெறுக்க தன் தவறு என்னவென்று கூட கருவை அழித்த பிறகும் அவளுக்குத் தெரியவில்லை, அதன் பின் யார் அந்த பிஞ்சை சிதைத்தது என்பதை நோக்கிப் போகிறது கதை.
யார் அந்த தவறைச் செய்தது ? என்ற கேள்வியின் நிழல் சமையல்காரர், டிரைவர் என்று எல்லார் மேலும் விழுகிறது ஆனால், அவர்களின் நேர்மையும் விசுவாசமும் மெய்சிலிர்க்கச் செய்கிறது. திக்கற்று நிற்கும் போது நட்பு கரம் நீட்டும் ராஜன், பிருந்தாவுடன் இணைந்து அந்த பிஞ்சை வேட்டை ஆடிய மிருகத்தை கண்டுபிடிப்பதும் அவனை அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அந்த பிருந்தாவிற்குள் ஒளிந்திருக்கும் தாய்மைக்கு ஒரு சபாஷ் போடலாம்.
ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தில் இப்படித்தான் அந்த பெண்ணின் தந்தைக்கு அவர் இரண்டாம் மனைவி அவரை ஏற்றுக்கொள்ளாத அந்தபெண் ஒரு மோசமான நிகழ்விற்குப் பிறகு, வீட்டிற்குள் துவண்டு போக அந்தப் பெண்ணிற்காக அந்த மிருகங்களை அழிக்கும் ஒரு காட்சியில் என் பொண்ணுகிட்டே அம்மாவை வரச்சொல்லுன்னு சொன்னியா வந்துட்டேன்டா என்று வேதனையும், கோபத்தோடும் சொல்லுவார், அந்த காட்சியமைப்பை அப்படியே கொண்டு வந்திருந்தது இறுதிக் காட்சிகள்.
தன் கணவரிடம் தான் செய்தவற்றை சொல்லும் போது பிருந்தாவின் மரப்பாச்சி உடலுக்குள் இருக்கும் தாய்மையின் தாக்கத்தை அழகாக வார்த்தைகளில் வெளிக்காட்டி இருக்கிறார் ஆசிரியர்.
மிகவும் ரசித்த இடங்கள் என்பதை சொல்லியாக வேண்டும்,
இரண்டாம் தரமாக வாழ வேண்டிய காரணத்தை மணிமாறனிடமும், தன் தாயிடமும் விவரிப்பதும், கணவனின் மகள் தன்னை தாயாக ஏற்பாளா என்று மருகுவதும், நான் உன்னை மனைவியாக ஏற்கிறேன் ஆனால் தாய்மையை உனக்குத் தர முடியாது என்று கணவன் பேசும் போது தான் ஏன் தாய்மையை அடைய நினைக்கிறேன் என்று சொல்லும் அந்த தருணம் கண்களை கசிய வைக்கச் செய்கிறது.
இரண்டாவது திருமண வாழ்க்கையில் சராசரிக்கும் கீழாகத்தான் பெண் வாழ்கிறாள் என்பதை அந்த நேரத்து வார்த்தைகளில் மணிமாறன் மூலம் தெரிவிக்கிறார் ஆசிரியர்.
மரப்பாச்சியின் மனம் குளிரும் அந்த இடம் அந்த வார்த்தைகள் வாழ்த்துக்கள் ஒரு குடும்ப நாவலில் வித்தியாசமான பயணம் குட்டி சஸ்பென்ஸ் கிரைம் என எல்லாம் கலந்த கலவை சகிதாமுருகனின் மரப்பாச்சிக்கு வாழ்த்துக்கள்
1 Comment
அருமையான நூல் விமர்சனம்.
வாழ்த்துக்கள்