ரீல் வில்லன், ரியல் ஹீரோ!’ எம்.என்.நம்பியார்!💐
🎯தமிழ் திரையுலகத்தில் வில்லன் எனும் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்டவர். திரையில் இவரை பார்க்கும் ரசிகர்கள் அவரை பொல்லாதவனாகவும் அநியாயம் அட்டூழியங்களை செய்யும் அரக்கனாகவும் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் திரையுலக வரலாற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்த பழம் பெரும் வில்லன் நடிகன் அவர். அதிலும் எம்.ஜி.ஆருடன் இவர் சண்டையிடுவதை பார்த்து இவரை அடிக்க பாய்ந்து , சினிமா தியேட்டர்களில் உள்ள திரையைக் கிழித்த ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு திரை உலகையே தன்வசப்படுத்தியிருந்த வில்லன் எம்.என்.நம்பியார். இவர் கடந்த 1919 ம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் இந்திய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெருவமூர் எனும் ஊரில் பிறந்தார்.
ippoothu கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே ஐயப்ப சீசன் எல்லா மாநிலங்களிலும் களைகட்டத்தொடங்கிவிடும். இன்றைக்கு சபரிமலைக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்களென்றால், அதற்கான ஆரம்ப விதையை அந்தக் காலத்தில் தூவியர்கள் ஒரு சிலர் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர்… ‘குருசாமி’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் முரட்டுத்தனமான வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார். கண்களை உருட்டி, கரகரவெனப் பேசி, கைகளைப் பிசைந்து நம்மையெல்லாம் கிடுகிடுக்க வைத்த நடிப்புச் சூரர்!
1950,60-களில் அசோகன், வீரப்பா, மனோகர் போன்ற பல வில்லன் நடிகர்கள் இருந்தாலும் கூட, வில்லன்களுக்கு எல்லாம் வில்லனாக திகந்தவர் நம்பியார். இதற்கு இவரது தனி பாணி தான் காரணம். புருவத்தை ஏற்றிக் கொண்டு, கைகளை பிசைந்தப்படி இவர் வசனம் பேசும் போது அஞ்சாத நபர்களே இல்லை.. தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததால் (திரையில்) மக்கள் நம்பியாரின் மீது நிஜமாகவே கோபம் கொண்டனர். அந்த காலத்தில் திரைப்படத்தோடு மிகவும் ஒன்றி போய் அனைத்தும் உண்மை என்று நம்பினர். எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. அவரை எதிர்த்து நடிப்பதால், நம்பியாருக்கு மக்கள் சாபம் எல்லாம் விட்டுள்ளனர்.
நம்பியாரைப் பயன்படுத்தாத நாயக நடிகர்களே இல்லை. நம்பியார் வேண்டாம் என்று எந்தத் தயாரிப்பு நிறுவனமும் சொல்லியதே இல்லை. அன்றைக்கு எவையெல்லாம் பிரபல கம்பெனியோ அந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் நம்பியாரை வாரியணைத்துக் கொண்டன. நடிகர்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டார்கள். இயக்குநர்கள் எல்லோருமே ‘இந்தக் கேரக்டரை நம்பியாரைத் தவிர வேறு யாருமே செய்யமுடியாது’ என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
athanaal எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடங்கி, ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், விஜய் வரை 7 தலைமுறை நடிகர்களுடன் நம்பியார் நடித்துள்ளார். திரையுலகில் இதுவொரு சாதனையாகவே கருதப்படுகிறது. இவர் 1935-ல் தொடங்கி 2006-ம் வரை நடித்தார்.
80-களில் இருந்து இவர் வில்லத்தனம் மட்டுமின்றி, நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
எம்.என்.நம்பியார் ஷூட்டிங்கில் இருக்கும் போது, எப்போதும் அவரது மனைவி ருக்மணி தான் சமைத்து ஷூட்டிங் ஸ்பாட்க்கு எடுத்து வருவாராம். முதல் வாய் சாதத்தை மனைவிக்கு ஊட்டி விட்ட பிறகே நம்பியார் சாப்பிடுவார். திருமணம் ஆன முதல் நாள் முதலே இது வழக்கமாகி இருக்கிறது. எத்தனை பேர் அருகில் இருந்தாலும் இந்தப் பழக்கத்தை அவர் விட்டதில்லை.
…
“என் சம்சாரத்துக்கு ஊட்டறேன். அதுக்கு ஏன் வெட்கப்படனும்?” என்பாராம் அன்யோன்யமான நம்பியார்.❤