சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர் தினக் கவியரங்கம் ‘
கலைஞரின் சிந்தனைகளில் பாலினச்சமத்துவம் என்ற நூல் வெளியீடு, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ கவிதைகள் வாசிப்பும் நடைபெற்றது.
விழாவின் தலைமை கவிதைஉறவு ஆசிரியர் அய்யா ‘ஏர்வாடி இராதாகிருட்டிணன் ‘அவர்கள். புத்தகத்தின் முதல் பிரதியை வழக்கறிஞர்’ தமிழன் பிரசன்னா’. அவர்கள் வெளியிட்டார். கவிஞர் தமிழ் இயலன் பெற்றுக்கொண்டார்.
‘ இயற்கையான காற்றும், திருக்குறள் செல்வர். நல்ல அறிவழகனின் பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா தமிழ் பாடலோடும் ஆரம்பித்த விழாவில்…கவிதமிழ் இயலன் சங்க இலக்கியம் தொடங்கி என் நூல்வரை ஒடுக்கப்பட்டவர்களின் எழுத்தே வரலாறு என்று பேசியது முத்திரையாக இருந்தது.
பெண்கள் தினக் கவிதையோடு
எழு த்தாளர் லதா சரவணன் அவர்களின் சிற்றுரை இடம் பெற்றது
அரங்கமல்லிகா அம்மாவுடன் இருந்த நட்பை பற்றி பேசினார் . .
மருத்துவர் ஜான்சிராணி…சித்தமருத்துவத்தில் மகளிர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் . கூடவே உளவியல் நிபுணரும் கூட, அஞ்சுகம் அம்மாவின் நினைவேந்தலோடு தன் தாய் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முதியவர்களுடன் தற்போது நேரம் செலவிட முடியவில்லை, தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் சமூகத்திலிருந்து இல்லை, தங்கள் குடும்பத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறார்கள். ஐந்து நிமிடம் அமர்ந்து பேசும் அளவிற்கு கூட யாருக்கும் நேரம் இல்லை என்றார் மேலும் அவரை சந்தித்த முதியவர்களின் வாதமாகவும் ஆதங்கமாகவும் இருக்கிறது. இப்படித் தனிமைச் சூழலில் அவர்களை துன்புறுத்துவதைக் காட்டிலும், இல்லங்களில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் வயதினையொத்த மனிதர்களுடன் வாழ்வார்கள். மனதில் உள்ளவற்றை பரிமாறிக்கொள்வார்கள். நம் முதியவர்களின் இறுதிக்காலம் அவர்கள் எந்த சுமையும் இன்றி இலகுவாக தன் மனம் வாழ வைக்க முயற்சிகள் செய்வதே நம் கடமை என்று அருமையாகப் பேசினார்.
உளவியல் நிபுணர் ரேணுமீரா அவர்களின் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற தலைப்பில்…பெண்களின் பெருமையும், நிகழ்கால பெண்கள் தங்கள் வாழ்வில் என்னென்ன சாதனைகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு தன்னை எப்படி தயார் படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் நிதானமாக தெளிவுற அழகாக விளக்கினார்கள்.
திரைப்பட பாடலாசிரியர் உமாசுப்ரமணியம், தன்னுடைய சிற்றுரையில் அட்டகாசமான பெண்கள்தான் ஹீரோ என்ற தலைப்பில் ஒரு கவிதையை வாசித்தார். அன்றாடம் நம் கண்முன்னால் வாழும் பெண்களின் நெஞ்சுரம் அக்கவிதையில் பொதிந்திருந்தது.
எழு த்தாளர் லதா சரவணன் அவர்கள் வாசித்த கவிதை யை வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.
—-=——=
“பெண்ணே
அன்பிற்கினிய அங்கமாகிப் போனாலும்
அநேக நேரத்தில் அங்ககீனமென
சிதைக்கப்படுகிறாயே.
பேசும் தெய்வமாய் கல் மண்டபங்களில்
தொழவும்…பேசா மடந்தையாய்
குரல் நெறி படவும் சிக்கித் தவிக்கும்
பச்சிளம் பாலகியாகவும் வதைபடுகிறாயே
பார்வையே கத்தி வீச்சென
சொற்களே தீயின் பிழம்பென
உடலெங்கும் எதிர்வரும் தீமையை
பொசுக்கும் கணைகளாய்….
அங்கமதை தயார் செய்துகொள்.
மெல்லினம் மெலிந்து போகட்டும்
வல்லினம் செழுமை பெறட்டும்
பாரதியின் வீரமிகு சொற்களை
மனதில் உருபோட்டுக் கொள்.
எங்கெங்கு காணினும் சக்தியடா
எதிர்கொள்ளும் தீமைக்கு அவளே
காளியடா என்று சூளுரைத்துக் கொள்.”
கவிஞர் வே. எழிலரசு,சமூக ஆர்வலர் அருள், குடியாத்தம் குமணன், ஐயா அமுதபாரதி, கவிஞர் சொர்ணபாரதி இவர்களின் உரை.
ஜீவனின் நன்றியுரையோடு விழா இனிதே முடிந்தது.
ஆன்றோர்கள் கலந்து கொண்ட விழா.




