மகளிர் தின வரலாறு..!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை ஒழிந்திட வேண்டும் என்று பாரதியார் தமிழகத்தில் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உலகளவிலும் பெண்களின் நிலை அடக்கி ஒடுக்கப்பட்டே இருந்தது.

ஒரு நூற்றாண்டு காலத்தில் இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறனர். இந்த மாற்றம் படிப்படியாக பல்வேறு போராட்டங்களின் காரணமாகவே நடந்தேறியது. ஆனால் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்றே கூர வேண்டியுள்ளது.

இன்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் இது குறித்த வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.

1910ஆம் ஆண்டில், டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் ‘ உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு மார்க்சியவாதியான க்ளாரா ஜெட்கின் தலைமை தாங்கினார். அவர் உள்ளிட்ட தோழர்களின் முன்மொழிவின்படி அப்போது தான் ‘மகளிர் தினம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள், ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை முழுவதுடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து, விவாதிக்க வேண்டும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் பல்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சியைத் தொடங்கினார்கள். மற்ற உழைக்கும் மக்களும் இணைந்தார்கள். லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவாகக் களம் இறங்கின. எட்டு நாட்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

நவம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எல்லாருக்கும் எல்லாம், ஆண்-பெண் சமத்துவம் என்ற நிலை பெருமளவில் நிலைநாட்டப்பட்டது.

1921ஆம் ஆண்டில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியை நினைவு கூறும் வகையில், இனிமேல் மகளிர் தினத்தை நிரந்தரமாக மார்ச் 8 அன்று நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது. அது முதல் மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக மகளிர் தினத்தை மார்ச் 8ஆம் தேதி அனுசரிக்க வேண்டும் என்று அறிவித்தது.

1996ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

2024ம் ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருள் “நிகழ் காலத்தில் சமத்துவம்: டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குதல்” என்று வழங்கப்பட்டுள்ளது.

ஏன் மகளிர் தினம் கொண்டாட வேண்டும்?

  • பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தை கொண்டாடுவது.
  • பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்த்து போராடுவது.
  • பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவது.

இன்றளவும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைகள் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண் என்றால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொடும் சித்தரவதைக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி சம்பவம் நம் முகத்தில் காரி துப்புகிறது. மகளிர் நலனில் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைத்து ரீல்ஸ் போட்டு மகளிர் தினத்தை முடித்துக் கொள்ளாமல் சக உயிருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மரியாதையை எப்போதும் வழங்க வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!