செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதனை தொடர்ந்து குகேஷூக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷூக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது குகேஷ் உடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன் அழகான வாட்ச் ஒன்றையும் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
அப்போது குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.