உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
ஆழிப்பேரலை ஊழிக் கூத்தாடிய
அந்நாள் இந்நாள் தானே டிசம்பர் 26
ஆகுமோவென அடியெடுத்து வைப்பதற்குள்
அள்ளிச் சென்று அலறவைத்தாய்!
ஓடிப் போங்கள் என்பதற்குள்
ஓடி வந்தே உயிர் குடித்தாய்
ஓயவில்லை இன்னும் ஒப்பாரி
இன்றும் ஓயாத அலைகளாய்
உன் கோரத்தின் நினைவுகள்
தொண்டைக்குள் அடைக்கிறது!
உன் மடியில் பிடித்து வரும்
மீன்களை உண்டு வாழ்ந்திடும்
மக்களை நீயேன் தின்றாயோ
அடங்கியதோ உந்தன் அடங்காப்பசி
ஒடுங்கியதே எங்கள் நிம்மதி
ஆடிப்போன உன் ஆட்டங்கண்டு!
காதல் பேசி நின்ற கடலலையே
ஊடல் கொண்டு ஏன் வந்தாய்
கூடல் செய்து நின்றவனை
கூட்டிப்போக ஏன் நினைந்தாய்
பூட்டிப்போ உன் கதவுகளை
மாட்டிக் கொள்ள மனமில்லை!
ஏலேலோ பாடிப்பாடி உன்னை
மார்போடு அணைத்தவனை
ஏமாற்றி சென்றதென்ன
பார் போற்றும் அன்னையென
உன் மடிமீது விழுந்தவனை
அலைக் கரத்தாலே வளைத்ததென்ன!
மீண்டும் வருவதாய் எச்சரிக்கிறாய்
வருவதாய் இருந்தால் வந்துவிடு
இருக்கும் அனைவரையும் கொன்றுவிடு
எஞ்சியோர் இருப்பின் துன்பியலே
இனியொரு துன்பம் வேண்டாமே
இயல்பாய் நீ இருந்துவிடு!
இயற்கை உன் நியதிகளை
வகுத்தவன் இறைவன் தான்
செயற்கையாய் வாழும் மனிதன்
அதை மறந்து விடுகின்றான்
இதை உணர்த்தி செல்வதற்கோ
நீ இடையிடையே வருகிறாய்!
ஆழிப்பேரலையில் சுருட்டபட்ட
அனைத்தும் இனி இங்கே திரும்பாது
நினைவுகள் மட்டுமே திரும்புகிறது!