‘தட்கல் டிக்கெட்’ முன்பதிவு நேரத்தில் மாற்றம்..!
இந்திய ரயில்வே சாமானிய மக்களுக்கும் தங்களுடைய பயண தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. குறைந்த டிக்கெட் கட்டணம் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் அதற்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அவசரமாக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் பயணிகள் வசதியுடன் பயணம் செய்ய தட்கல் டிக்கெட்டை பெறலாம். தற்போது தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான நேரத்தை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
புதிய விதிகளின்படி, ஏசி கோச்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத கோச்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும். ஒரு நேரத்தில் 4 பேர் வரை தட்கல் டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம். 4 பயணிகளுக்கு மேல் முன்பதிவு செய்யும்போது பலர் சேர்ந்து முன்பதிவு செய்ய வேண்டும். தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற அடையாளச் சான்றுகள் தேவை.
தட்கல் டிக்கெட்டைப் பொருத்தவரையில் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் ரீபண்ட் கிடைக்காது. தட்கல் டிக்கெட்கள் மற்றும் ஜெனரல் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஐஆர்சிடிசி அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்களுக்கு முன்கூட்டிய உள்நுழைந்து யுபிஐ மூலம் பணம் செலுத்தி விவரங்களை முன்கூட்டியே நிரப்ப வேண்டும். ஏனெனில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டிருக்கையில் முன்பதிவு செய்ய முயலும் போது டிக்கெட் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தட்கல் திறக்கப்பட்டதும் உடனடியாக பதிவு செய்வது முக்கியம்.
இந்திய ரயில்வே தற்போது சூப்பர் ஆப் என்ற அப்ளிகேஷனை கொண்டு வந்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது, ரயில் நிலையை சரி பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற முடியும். ஏனெனில் இதற்கு முன் ரயில்வே பயணிகள் டிக்கெட் பதிவு செய்வதற்கு IRCTC ரயில் கனெக்ட், உணவு டெலிவரிக்கு IRCTC eCatering, புகார்களுக்கு ரயில் மதத், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு UTS மற்றும் ரயில் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம் போன்ற பல ஆப்ஸ் மற்றும் வலைத்தளங்களை நம்பியுள்ளனர். புதிய சூப்பர் ஆப் இந்த சேவைகளை ஒரே இடத்தில் இணைக்கும் என்று கூறப்படுகிறது.