ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டி கடந்த 2017-ம் ஆண்டுடன் நின்று போனது. இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு ஹாக்கி இந்தியா லீக் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. அதன்படி, 6வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் உள்ள ரூர்கேலா நகரில் இன்று (டிச.28) தொடங்குகிறது.
இந்த போட்டி இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ், ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், சூர்மா ஆக்கி கிளப், வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ், கோனசிகா, ஹைதராபாத் டூபான்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், உ.பி. ருத்ராஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டி 2 கட்டமாக நடத்தப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதை தொடர்ந்து நடைபெறும் 2-வது கட்ட ஆட்டங்களில், அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் பலபரீட்சை நடத்த வேண்டும்.
இந்த போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் – கோனசிகா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8.15 மணியளவில் தொடங்குகிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.