சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு…
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு:
புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இரா. முத்தாண்டி யும் ஆய்வாளர் பி. லோகநாதனும் உடனிருந்து உதவினர்.
உள்ளூர் மக்களால் ஆனையடிக்கல் என்றழைக்கப்படும் இத்தூண்களை மடைத்தூண்களாக அடையாளப்படுத்தும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், இவை பற்றிய விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளார். குறுங்குளம் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பெறும் திம்மயம்பட்டிக் குளத்தின் கிழக்குக் கரையருகே குளத்திற்குள் இருக்குமாறு இவ்விருதூண்களும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடைப்பட்டு அமையும் மடை எனும் கட்டுமானமே குளத்து நீரைப் பாசனத்திற்கேற்ப திறக்கவும் திசைமாற்றவும் பயன்படுகிறது.