அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியைச் சேர்ப்போம்!
உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது.
ஒருவன் பிறக்கும்போது அவனது பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பூர்வீகச் சொத்து அவனது தாய்மொழி. பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுதுதல் ஆகியவை மொழியின் செயல்பாடுகள். எந்த ஒரு மனிதனும் அவனது தாய்மொழியில் மட்டுமே இந்த மூன்று செயல்பாடுகளிலும் திறமை வாய்ந்தவனாக இருக்க முடியும். அதைக் கொண்டே அவனது வளர்ச்சி நிகழ்கிறது.
இந்நிலையில் மக்களிடையே பயன்பாடு குறைவதாலும், புலம் பெயர்தல், பிற மொழிகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பல மொழிகள் வழக்கிலிருந்து அருகி வருகின்றன. உதாரணமாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏசு கிறிஸ்து பேசியதாகக் கூறப்படும் அராமிக் மொழி தற்போது வழக்கொழிந்துவிட்டது. மூவாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட பாரதத்தின் அறிவுசார் மொழியான சம்ஸ்கிருதத்தைப் பேசுவோரின் எண்ணிக்கை இப்போது சில லட்சங்கள் மட்டுமே.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தாக்கத்தால் புதிய மொழிகள் ஏற்றம் பெறுவதும், சமூக மாறுபாடுகளால் பழைய மொழிகள் மாயமாவதும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆயினும் மக்களின் அறிவுச் சொத்தான மொழிகளைப் பேண வேண்டியதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவே 2000 ஆம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உலக தாய்மொழி தினம் உருவானதற்குப் பின்னணி உண்டு. 1947இல் தேசப் பிரிவினையின்போது பாரதத்திலிருந்து பிரிந்த கிழக்கு வங்கப் பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாகவும், மேற்கு பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு பாகிஸ்தானாகவும் உருப்பெற்றன. இவ்விரு பகுதிகளும் சேர்ந்ததே பாகிஸ்தானாக இருந்தது. ஆனால், மேற்கு பாகிஸ்தானில் அதிக மக்களால் பேசப்பட்ட உருதுவை அரசு மொழியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதற்கு கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த வங்க மொழி பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்; 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசு நடவடிக்கை எடுத்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பின்னாளில் மொழி அடிப்படையில் பாகிஸ்தான் பிளவுபட்டு வங்கதேசம் உருவாக இந்த நிகழ்வே அடிப்படையானது.
இந்த சரித்திர நிகழ்வைக் கருத்தில் கொண்டே, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1999, பிப்ரவரி 21ஆம் நாள் உலக தாய்மொழி தினம் அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இந்நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழியின் அவசியம், அதைப் புதுப்பிக்கும் வழிமுறைகள் குறித்து சிந்திக்கும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மையைப் பாதுகாப்பதுடன், அவற்றுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதே இந்நாளின் பிரதான நோக்கமாகும்.
உலகில் தற்போது 6,000 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் 43 சதவீத மொழிகள் அழியும் தறுவாயில் இருப்பதாக யுனெஸ்கோ கூறுகிறது. கூடிய வரை தாய்மொழிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக மொழிகளின் அழிவைத் தடுக்க முடியும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக தாய்மொழி தினம் உதவுகிறது.
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 22 அலுவல் சார் மொழிகளும், பல்வேறு தரப்பினரால் தாய்மொழியாகப் பேசப்படும் 1,635 மொழிகளும், அடையாளம் கண்டுணர இயலாத நிலையில் 234 மொழிகளும் உள்ளன. இந்தக் கணக்கெடுப்பில் வட்டார வழக்குகள் தனி மொழிகளாக சில பகுதிகளில் கணக்கிடப்பட்டுள்ளன. எப்படியிருப்பினும் சுமார் 1,600 மொழிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.
நமது அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணைப்படி, நாட்டில் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ள 22 மொழிகளும், கூடுதலாக ஆங்கிலமும் அரசின் அலுவல்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மொழிகளில் சுமார் 70 கோடி பேர் பேசும் ஹிந்தி பிரதான அலுவல் மொழியாக உள்ளது. தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை சுமார் 7 கோடி.
சமூகத் தொடர்பு, ஆட்சி நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் மொழியின் செயல்பாடு கவனம் பெறுகிறது. இந்த மூன்றிலும் தாய்மொழிப் பயன்பாடு குறையும்போது அந்த மொழி செல்வாக்கை இழக்கத் துவங்குகிறது. எனவேதான் மொழியியல் ஆய்வாளர்கள் தாய்மொழியில் பேசுவதையும் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவதையும் முதன்மையாக வலியுறுத்துகின்றனர். அரசு நிர்வாகத்தில் தாய்மொழியின் பயன்பாடு குறையும்போது அதன் தேவை குறைகிறது. இதனைத் தவிர்க்குமாறும் மொழியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த இரண்டையும்விட கல்வியில் தாய்மொழியின் பயன்பாடு முக்கியமானதாகும். ஏனெனில் அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியை பத்திரமாகக் கொண்டு செல்வதில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. தாய்மொழியின் எழுத்துகளைக் காப்பதிலும், சிந்தனைகளைப் பதிவு செய்வதிலும் கல்வி ஆணிவேராக உள்ளது. எனவேதான் தாய்மொழி வழிக் கல்வியின் தேவை சமூகநலம் நாடுவோரால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
“குழந்தைகளுக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும், பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அறிந்திராத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பது குழந்தையின் எண்ணங்களிடையே இணக்கத்தைப் பாதிக்கும். எனவே தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்” என்பார் மகாத்மா காந்தி.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று பாடிய மகாகவி பாரதியும் தாய்மொழி வழிக்கல்வியே நாட்டுக்கு நல்லது என்று கூறி இருக்கிறார். ஆனால் நமது தொலைக்காட்சிகளில் வெளியாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பகுதி மொழிக் கலப்படத்துடனும், சரியான உச்சரிப்பின்றியும் இருப்பதைக் காணும்போது வேதனை மிகுகிறது. ஆங்கிலம் கலந்த தமிங்கில நடையில் எழுதுவதும் பேசுவதும் பரவலாகி வருகின்றன. இது நமது தாய்மொழியாம் தமிழுக்கு நல்லதல்ல.
ஒவ்வொருவருக்கும் அவரது தாய்மொழி குறித்த பெருமிதம் இருப்பதும் இயல்பே. அதுவே அவரது பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை அறிந்திருந்த மகாகவி பாரதி “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பெருமிதத்துடன் முழங்கியது அதனால்தான்.
அதேசமயம், தாய்மொழிப் பற்று பிறமொழிகள் மீதான வெறுப்பாக மாறிவிடக் கூடாது. சமூக, அரசியல் காரணங்களுக்காக பிற மொழிகளை வெறுக்கும் மனப்பாங்கை பல இடங்களில் காண முடிகிறது. இது தேசியநலனுக்கு ஊறு விளைவிப்பதாகும். இதற்காகவே, “செப்புமொழி பதினெட்டுடையாள்- எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரத அன்னையைப் போற்றுகிறார் மகாகவி பாரதி.
நாம் பல மொழிகளை அறிந்திருப்பதும்கூட நமக்கு கூடுதல் வலிமையை அளிக்கும் என்பதற்கு மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் கதை காட்டுகிறது. புயலில் சிக்கிய கப்பல் உடைந்ததில் நாகர்களின் தீவில் கரையொதுங்கிய சாதுவன் அவர்களது நாக மொழியை அறிந்திருந்ததால் உயிர் பிழைத்ததுடன் பல்வகை செல்வ வளமும் பெற்றதை சீத்தலைச் சாத்தனார் இலக்கியமாக்கி இருக்கிறார்.
மனித மூளை அளவற்ற திறன் உடையது. எனவே பல மொழிகளை நமது தேவைக்கேற்பக் கற்பதில் தவறில்லை. அது கற்பவரின் மேம்பாட்டுக்கு உதவும். அதேசமயம், தாய்மொழிப் பயன்பாட்டை எப்போதும் கைவிடாது காக்க வேண்டும். தமிழகத்தில் காணப்படும், தமிழே அறியாமல் பட்டப்படிப்பு முடிக்கும் துர்பாக்கிய நிலை விரைவில் மாற வேண்டும்.
தமிழகத்தில் மொழி அரசியல் செயல்படும் அளவுக்கு முழுமையான தாய்மொழிப் பயன்பாடு இல்லை என்பதையும் சுட்டிகாட்ட வேண்டி இருக்கிறது. கல்லூரி மாணவர்கூட தமிழில் பிழையில்லாமல் எழுத முடிவதில்லை என்பது நமது பலவீனத்தை அம்பலப்படுத்துகிறது. தமிழ் நூல் வாசிப்பு குறைவதும், ஆங்கில மோகம் பெருகுவதும் நமது தாய்மொழியை அரித்து வருகின்றன. இவற்றைச் சரிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த உலக தாய்மொழி தினம் நினைவுபடுத்துகிறது.
“தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது” என்று கூறுவார் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி. எனவே ‘என்றுமுள தென்தமிழ்’ என்று கவிச் சக்கரவர்த்தி கம்பரால் பாடப்பட்ட நமது தாய்மொழியின் தொடர்ச்சியை அடுத்த தலைமுறைக்கு பத்திரமாகக் கொண்டுசேர்ப்பது நமது கடமை.