சென்னையில் 15 இடங்களில் வருகிறது புதிய மேம்பாலங்கள்: எங்கெங்கு தெரியுமா?
சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ரூ.1,500 கோடிச் செலவில், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் 15 இடங்களில் புதிய மேம்பாலங்களைக் கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி பரிந்துரையை முன்வைத்துள்ளது.
தற்போது திமுக தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போதுதான், சென்னையின் பல்வேறு இடங்களில் சென்னை மாநகராட்சி தரப்பில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்றது. அதன் பிறகு சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் பாலம் கட்டுவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால், சென்னை மாநராட்சியின் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சென்னையில் ஐசிஎஃப் சந்திப்பு, ஜி.பி. ஹாஸ்பிடல் சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, கீழ்ப்பாக்கம், கெல்லிஸ் சந்திப்பு, அயனாவரம் சந்திப்பு, ஓட்டேரி சந்திப்பு, பாசின்பாலம் சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, ஆர்.ஏ. புரம், க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு, எஸ்ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, குரு நானக் கல்லூரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பரிந்துரை சென்னை மாநகராட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த 15 இடங்களில், கீழ்ப்பாக்கம், பாசின் பாலம், வேளச்சேரி, ஆர்ஏ புரம், தேனாம்பேட்டை, அயனாவரம் பகுதிகள் பாலம் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.