கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:

 கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:

வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!!

  பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

   சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

   கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

   அந்த வைரஸ் மனிதா்களிடையே பரவுவதாக சீன அதிகாரிகள் அறிவித்தனா். அதையடுத்து, அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

    மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

   சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. 

    சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைத்து  சிகிச்சையளித்து வருகின்றனர். 

   இந்நிலையில், சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியாவைச் சேர்ந்த  ஒரு மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தார். அவருக்கு  கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். 

  இந்த நிலையில் எந்த முன் அனுமதியின்றி பொது குளியலறைக்கு அதிகாரி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து  உடனடியாக அவரை கைது செய்து வடகொரிய அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

  அதேபோல், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் பணிபுரிந்து மற்றொரு அதிகாரி, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்ததை மறைத்துள்ளார். இதைக் கண்டறிந்த வடொரிய அதிகாரிகள், அவரை உடனடியாக பதவியிறக்கம் செய்து, தோட்ட வேலைக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

  இதுவரை தங்கள் நாட்டின் எல்லைக்குள் கரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ள வடகொரியா அரசு, இதுபோன்ற தகவல் குறித்து எங்களுக்கு சந்தேகம் உள்ளதாக  கூறியுள்ளது.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...