கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!
முத்தரப்பு டி20 போட்டி:
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.
கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் நைட், 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ராஜேஸ்வரி கெயக்வாட், ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஷஃபாலி வர்மா, 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்திய வீராங்கனைகள் பந்துகளை வீணடிக்காமல் விளையாடியதால் இலக்கை அடைய வழி ஏற்பட்டது.
எனினும் கடைசி 3 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்கிறபோது லேசாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். தீப்தி சர்மாவும் அவருக்கு நல்ல இணையாக விளங்கினார். 19-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கவனமாக கெளர் – சர்மா ஜோடி விளையாடியதால் பதற்றம் தவிர்க்கப்பட்டது. 4 பந்துகளில் 4 ரன்கள் என்கிற நிலையில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித் தந்தார் ஹர்மன்ப்ரீத் கெளர்.
இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் ஞாயிறன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இப்போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ளது.