“சின்ன கலைவாணர் விவேக்”
கருத்துள்ள நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சின்னக் கலைவாணர் பத்மஸ்ரீ விவேக். 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விவேக். இவருடைய முழுப் பெயர் விவேகானந்தன். இவரது தந்தை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.
மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம், தொலைபேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சுஹாசினியின் சகோதரராக சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.
அதன் பிறகு ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90களில் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறுவதற்கு முன்பு ’மேல் மாடி காலி’ என்கிற சின்னத்திரை தொடரிலும் நடித்தார்.
தொடர்ந்து தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்தார். ’காதல் மன்னன்’, ’நினைவிருக்கும் வரை’, ’வாலி’, ’ஆசையில் ஓர் கடிதம்’, ’திருநெல்வேலி’, ’முகவரி’ உள்ளிட்ட பல படங்களில் விவேக்கின் நகைச்சுவை, இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. இன்று தமிழின் முதன்மை நட்சத்திரங்களாக அறியப்படும் விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகாலப் படங்களில் விவேக்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் விவேக் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு முக்கிய நாயகர்களின் அத்தனை படங்களிலும் விவேக் இடம் பெற்றார். ’அள்ளித் தந்த வானம்’, ’ஷாஜகான்’, ’யூத்’, ’ரன்’, ’பெண்ணின் மனதை தொட்டு’, ’சாமி’ என பல படங்களில் விவேக்குக்கென தனியாக ஒரு நகைச்சுவைப் பகுதியே ஒதுக்கப்பட்டது. அது படங்களின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
தனது நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைப்பதே விவேக்கின் நோக்கமாக இருந்தது. இதனால் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியைப் பெற்றார்.
லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை, சுய ஒழுக்கம் இல்லாமை உள்ளிட்ட பல விஷயங்களின் விமர்சனத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன. அவை மக்கள் மனங்களில் தாக்கத்தையும் ஏற்படுத்தின.
தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துள்ள இவரை, ’பஞ்ச்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை. அதன் பிறகு ’சொல்லி அடிப்பேன்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
அதன் பின் பல வருடங்கள் நாயகனாக நடிக்காத இவர் கடந்த சில வருடங்களில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’, ’வெள்ளைப் பூக்கள்’ போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதில் ’வெள்ளைப் பூக்கள்’ முழுக்க முழுக்க அமெரிக்க வாழ் இளைஞர்களால், அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக விவேக்கின் நடிப்பு பேசப்பட்டது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிலம்பரசன், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, கவுதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் என சென்ற தலைமுறையிலிருந்து இந்தத் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரை நடித்து முத்திரை பதித்தவர் விவேக். கடந்த வருடம் வெளியான ’தாராளப் பிரபு’ திரைப்படத்தில் நாயகனுக்கு அடுத்து பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றிருந்தார் விவேக்.
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையைக் கோலோச்சி வந்த விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வந்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் ’க்ரீன் கலாம்’ என்கிற மரம் நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார். இதுவரை பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். ப்ளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிரான தமிழக அரசின் பிரச்சாரத்துக்குத் தூதராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் விவேக். இவை தவிர மக்களுக்கு விழிப்பு உணர்வு தரும் அரசின் பல விளம்பரங்களில் விவேக் இடம்பெற்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை கூட கரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்களில் பேசி தனது சமூக வலைதளப் பக்கத்திலும் விவேக் பகிர்ந்திருந்தார்.
அவரது சமூக ஊடகப் பகிர்வுகள் பெரும்பாலும் சக நடிகர்களைப் பாராட்டியோ அல்லது எதாவது விழிப்புணர்வோ செய்தியாகவோ, விவேகானந்தர், அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் கூற்றுகளாகவோ தான் இருக்கும். திரைத்துறையில் இருக்கும் கலைஞர்களைப் பாராட்ட விவேக் என்றுமே தயங்கியதில்லை. இசையிலும் பெரிய ஆர்வம் கொண்ட விவேக் பலருக்குப் பாடல் பாடி, பியானோ வாசித்து அதன் மூலம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2006ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைவாணர் விருதை வென்றார். 2009ஆம் ஆண்டு, நாட்டின் நான்காவது உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது, விவேக்குக்கு வழங்கி கௌரவித்தது இந்திய அரசாங்கம்.
‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ’அந்நியன்’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காகச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார்.
இவரது மனைவி பெயர் அருள்செல்வி. இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்கள். பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன். பிரசன்ன குமார் 2015ஆம் ஆண்டு காலமானார்.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் ’இந்தியன் 2’ தொடங்கப்பட்டது. ‘என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு ‘இந்தியன் 2’ வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்’ என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார் விவேக்.
ஏப்ரல் 16ம் தேதி 2021 திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக் 17 ஏப்ரல் 2021 அன்று அதிகாலை காலமானார். கலாமின் கனவை நிறைவேற்றிக் கொண்டிருந்த கமலுடன் நடிக்க வேண்டும் எனும் விவேக்கின் இந்தக் கனவு முழுமை அடையாத நிலையிலேயே முற்றுப்பெற்றதுதான் பெரும்சோகம்