விளையாட்டு செய்திகள்
கவாஸ்கர் பெரிய பேட்ஸ்மேனா இருக்கலாம்.. ஆனால் அவரு மிகப்பெரிய மேட்ச் வின்னர்..
வளர்த்துவிட்ட வீரரை விதந்தோதிய தாதா
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவரே கங்குலி தான். சூதாட்டப்புகாரால் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இந்திய அணியை, சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், கைஃப், ஜாகீர் கான் ஆகிய இளம் வீரர்களை கொண்டு கட்டமைத்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, லட்சுமணன் ஆகிய சீனியர் வீரர்களின் உதவியுடன் மிகச்சிறந்த அணியாக உருவாக்கியவர் கங்குலி.கங்குலி உருவாக்கிய வீரர்களான சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் ஆகியோர் பிற்காலத்தில் தலைசிறந்த வீரர்களாக ஜொலித்தனர். அவர்கள் அனைவருமே சிறந்த வீரர்கள் தான். எனினும் அந்த காலக்கட்டத்தில் சேவாக் தான் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று கங்குலி புகழ்ந்துள்ளார்.இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய கங்குலி, சேவாக் தான் அவர் ஆடிய காலத்தில் ஒரு தொடக்க வீரராக மிகப்பெரிய மேட்ச் வின்னர். ஆரம்பத்தில் சேவாக் மிடில் ஆர்டரில்தான் இறங்கினார். நான் அவரிடம் சென்று, “யாருமே அணிக்கு வரும்போது இதுதான் நமது பேட்டிங் ஆர்டர் என்று உறுதி செய்துவிட்டு வருவதில்லை. நீ எப்படி அட்ஜஸ்ட் செய்கிறாய் என்பதை பொறுத்ததுதான். மிகச்சிறந்த வீரர்கள் எல்லாருமே, அவர்களுக்கு வசதியாக இருக்கும் விஷயங்களை விட்டு வெளியேறிய பின்னர் தான், பெரிய வீரர்களாக ஜொலித்தனர். எனவே உனக்கு நல்ல வசதியாகவும் இன்பமாகவும் இருக்கக்கூடிய விஷயத்தில் இருந்து வெளியே வந்தால்தான் ஜொலிக்க முடியும் என்று சொல்லி அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டேன்.
சேவாக் மிகவும் ஸ்பெஷலான வீரர். மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் என்பார்கள்.
அது சரிதான். ஆனால் சேவாக் மிகப்பெரிய மேட்ச் வின்னர். இருவருமே வெவ்வேறு விதமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்கள். ஒருவர்(கவாஸ்கர்) பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அடிக்காமல் விட்டே பழையதாக்கக்கூடியவர். மற்றொருவர்(சேவாக்) பந்தை அடித்தே பழையதாக்கக்கூடியவர் என்று கங்குலி சேவாக்கை புகழ்ந்துள்ளார்.தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கிய சேவாக், மிடில் ஆர்டரில் சோபிக்காததால், அவரது திறமையை அறிந்து அவரை தொடக்க வீரராக களமிறக்கினார் முன்னாள் கேப்டன் கங்குலி. தொடக்கவீரராக இறக்கப்பட்ட பின்னர், மிரட்டலான அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சேவாக், இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரானார். இந்திய அணியின் மிகச்சிறந்த மற்றும் எதிரணிகளை அதிரடியால் தெறிக்கவிடக்கூடிய தொடக்க வீரராக திகழ்ந்தவர் சேவாக்.
1999ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சேவாக், 2013ம் ஆண்டு வரை இந்திய
அணிக்காக ஆடினார். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி எதிரணிகளை அச்சுறுத்தியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களும் அடித்தபெருமைக்குரியவர்.