சென்னை: சென்னை ஸ்ரீராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில், கால்பந்து வீரர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான சர்வதேச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தில் கால்பந்து வீரர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான சர்வதேச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கி நாளை (12-ம் தேதி) வரை நடைபெறுகிறது.
இதில், இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், மலேசியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, ஈரான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட ஆசிய கால்பந்து கூட்டமைப்பு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு மருத்துவர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, பயிற்சி வகுப்பை ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் மருத்துவக் குழு தலைவர் மருத்துவர் குர்சரண்சிங் தொடங்கி வைத்து பேசுகையில், “உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்வதே நோக்கம் ஆகும்.

விளையாட்டு தொழில்நுட்பம் சார்ந்த மைதான பயிற்சி மட்டுமல்லாமல். விளையாட்டு அறிவியல்சார் மருத்துவமும் இந்த இலக்கை அடைவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும். ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆசிய நாடுகள் கால்பந்து விளையாட்டில் உலகளாவிய இலக்கை எட்ட முடியும்” என்றார்.
அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சவுபே தனது உரையில், “இந்தியாவில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது.
இந்த பயிற்சியின் மூலம், விளையாட்டு மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு கால்பந்து வீரர்களை காயங்களிலிருந்து பாதுகாக்கவும், காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த செய்முறை பயிற்சியை அளிப்பார்கள்” என்றார்.
ஸ்ரீராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம், “பன்னாட்டு தர நிலைகளுக்கு ஏற்ப கால்பந்து விளையாட்டு மருத்துவத்தை மேம்படுத்துவதும், அவசர சிகிச்சை சார்ந்த மருத்துவப் பயிற்சி, ஊக்க மருந்து தடுப்பு விழிப்புணர்வை வழங்குவதுமே இந்த பயிற்சியின் நோக்கம்” என்றார்.
