சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்களாகின்றன. கோள்களின் சுற்று வட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதன்படி, 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடந்தது.

அதேபோல் இந்த ஆண்டும் 2 முறை ஒரே நேர்க்கோட்டில் சில கோள்கள் வரவுள்ளன. அதன்படி, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் பிப்.28-ம் தேதி தென்பட உள்ளன. இதில் வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களைப் பார்க்கலாம். நெப்டியூன் மற்றும் யுரேனஸை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும்.
இவற்றைக் காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, ‘‘கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும் போது இந்தக் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கிரகங்களை வீட்டின் மாடியில், மைதானங்கள் அல்லது கடற்கரையில் இருந்தே பார்க்கலாம்.

செவ்வாய் கிரகம் இரவு 9 மணியளவில்தான் உதயமாகும். கிரகங்களை தனித்தனியாகவும் பார்க்கலாம். அதேநேரம், யுரேனஸ் மற்றும் நெப்டியூனை சக்திவாய்ந்த தொலைநோக்கியால் மூலமே பார்க்க முடியும். எனினும், அவற்றைக் கண்டறிவது சற்று கடினம். இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதியும் நடைபெறும்’’ என்றனர்.
