கோவில் வழிபாடுகளில் தமிழ் மொழியே முதன்மை பெற வேண்டும்” –முதலமைச்சர் வேண்டுகோள்..!
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வந்த நிலையில், பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய இடங்கள் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அதன்படி, பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்” என்று பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும் அவர், “பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த போது அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்த பட்டியலை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டிருந்தேன். அதுகுறித்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர் சிறுவாபுரி, காந்தன் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனுக்காக கோயில் வளர்ச்சி பணிகளை தொடங்கியிருக்கிறோம். இதற்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
69 முருகன் கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயில் சார்பாக நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு மதிய உணவும் வழங்கப்படுகிறது. பழனி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் திருவிழாகளுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இது 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுதவிர 54 ஓய்வூதியதாரர்களுக்கு 2000 ரூபாய் உயர்த்தி வழங்குகிறோம். 2014 முதல் தற்போது வரை 813 நபர்கள் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்காக கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது” என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளை பட்டியலிட்டார்.
மேலும் அவர், “ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.