புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) நினைவு நாள்
அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில் குடியேறியது. 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். பள்ளி ஆசிரியையான தாய், இவரை அப்போதே ஒரு கவிஞராகப் பார்க்கத் தொடங்கினார். தந்தையோ தன் குட்டிப் பெண் எழுதவும் படிக்கவும் ஏதுவாக, மேஜை, நாற்காலி, அலமாரி நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார்.
இவரது முதல் கவிதை 13-வது வயதில் குழந்தைகள் இதழ் ஒன்றில் வெளியானது. 16 வயதுக்குள் 75 கவிதைகள் எழுதி வெளியிட்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் வில்சன் ஜூனியர் கல்லூரியில் பயின்றார். ஆனால் இனப் பாகுபாடு காரணமாக பள்ளிகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால், மேற்கொண்டு படிப்பதில்லை என்று முடிவெடுத்து, படிப்பை நிறுத்திக்கொண்டார். எழுத்தாளராக வேண்டும் என்று தீர்மானித்தார். அலுவலக உதவியாளர், செயலாளர் போன்ற வேலைகளும் பார்த்து வந்தார்.
வெள்ளையினப் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட கவிதைப் பயிலரங்குகளில் பங்கேற்றார். இவரது கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது முதல் கவிதை நூலான ‘எ ஸ்ட்ரீட் இன் ப்ரான்ஸ்வில்’ 1945-ல் வெளிவந்து, பரவலாக பாராட்டு பெற்றது. சமூகத்தின் செயல்பாடுகளுக்கு கடுமையாக பதில் அளிக்கும் விதமாக இவரது கவிதைகள் அமைந்தன. கவிதை வடிவம், பாணி குறித்து இவர் அலட்டிக்கொள்வதில்லை. அதன் கருவில் மட்டுமே கவனம் செலுத்துவார். சாதாரண ஆப்பிரிக்க அமெரிக்கரின் வேதனை மிகுந்த வாழ்க்கை, ஏழ்மை மற்றும் இனப்பாகுபாடு கொடுமைகளுக்கு எதிரான அவனது போராட்டம் ஆகியவையே இவரது கருப்பொருட்களாக அமைந்தன.
‘ஆனி ஆலன்’ கவிதை நூல் இவருக்கு ‘புலிட்சர்’ விருதை பெற்றுத் தந்தது. இவரது ‘மூட் மார்த்தா’ நாவல் சுயசரிதை வடிவில் அமைந்தது. 1962-ல் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ கவிதை விழாவில் தனது கவிதையை வாசிக்குமாறு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி இவருக்கு அழைப்பு விடுத்தார்.
சிகாகோ, கொலம்பியா கல்லூரி, இலினாய்ஸ் பல்கலைக்கழகம், சிகாகோ மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படைப்புத் திறன் குறித்து கற்பித்தார். குழந்தைகள், குடும்பச் சுமை எதுவும் தன் எழுத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொண்டார். ஏராளமான கவிதைகளை எழுதி, பல தொகுதிகளாக வெளியிட்டார்.
அமெரிக்கன் கலை அகாடமி விருது, கவிதை இதழ் விருது, ராபர்ட் பெர்கூசன் நினைவு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 75 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.
மிகவும் சாதாரண, ஏழ்மையான கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, தனது விடாமுயற்சியாலும் எழுத்தாற்றலாலும் ஆங்கில இலக்கியக் களத்தில் தனி முத்திரை பதித்த குவெண்ட்லின் ப்ரூக்ஸ் 83-வது வயதில் இதே டிசம்பர் 3 (2000)ல் மறைந்தார்.