சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்..!
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தனது 38-வது வயதில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் இடம்பெற்ற ஷிகர் தவான். இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக விளையாடினார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான், 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தொடக்க வீரராக, ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்க தொடங்கினார்.
அந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் இதுவரை விளையாடிய சிறப்பான தொடக்க வீரர்கள் பட்டியலில் அவரும் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டி20 தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகுத் தனது வயது முதிர்வாலும், ஃபார்ம் அவுட்டாலும் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்த ஷிகர் தவான் தற்போது அவரது 38-வது வயத்தில் சர்வேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஷிகர் தவானுக்கு பல ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் வீடியோ வெளியிட்டு அதில் மனம் உருகி அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இன்று நான் இந்திய அணியைத் திரும்பிப் பார்க்கும் போது எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு என் வாழ்க்கையில் ஒரே ஒரு கனவு மட்டுமே இருந்தது. அது என்னவென்றால் இந்தியாவுக்காக நான் விளையாட வேண்டும் என்பது தான்.
அதை நான் நிறைவு செய்து விட்டேன். இந்த பயணத்தில் எனக்கு உதவி செய்த பலருக்கும் நான் இந்த தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன். முதலில் எனது குடும்பத்தினருக்கு, அதன் பிறகு எனது பழைய கால பயிற்சியாளரான தாரக் சின்கா அவர்களுக்கும் நன்றி. மேலும், எனக்கு இந்த கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படையைச் சொல்லிக் கொடுத்த மதன் ஷர்மாவுக்கும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். மேலும், என் இந்திய அணிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்களுடன் நான் நீண்ட காலம் விளையாடி இருக்கிறேன்.
எனக்கு மற்றொரு குடும்பமாகவும், எனக்குப் பெயரையும் புகழையும், இதெல்லாம் தாண்டி என் மேல் அன்பு வைத்த ரசிகர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதையை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப வேண்டும் என்று சொல்வார்கள். அதைத் தான் நான் இப்போது செய்யப் போகிறேன். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நான் ஓய்வை அறிவிக்கிறேன்”, என ஷிகர் தவான் அந்த வீடியோவில் பேசி இருந்தார்.