தமிழ்நாடு மீனவர்கள் 20 பேர் விடுதலை – மூவருக்கு தண்டனை..!
தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவ.9-ல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் காவல் செவ்வாய்கிழைமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 20 மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்கள் மூவருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.