“சிறந்த திருநங்கை” விருது பெற்ற சந்தியா தேவி..!
தமிழக முதல்வர் ஸ்டாலினின் கைகளில் இருந்து சிறந்த திருநங்கை விருது பெற்றுள்ளார் கன்னியாகுமரியை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி. ரூபாய் 1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரியைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டது. திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் தொடர் சேவை புரிந்ததற்காக சந்தியா தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் சிறந்த திருநங்கை விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளாக வில்லிசைக் கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவியின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியைச் சேர்ந்தவர் சந்தியாதேவி. திருநங்கையான இவர் தற்போது தோவாளையில் வசித்து வருகிறார். இவர் முதல் திருநங்கை வில்லிசை கலைஞர் என்ற பெருமை பெற்றவர்.
வில்லிசையின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோயில்கள், மற்றும் கலாச்சார விழாக்களில் சந்தியா தேவி வில்லிசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். சுமார் 25 ஆண்டுகளாக வில்லிசை கலையை பரப்பி வருகிறார் சந்தியா தேவி.
மேலும் அங்குள்ள கோயில்களில் சமூக இடைவெளியுடன் தனது வில்லிசை குழுவுடன் அமர்ந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி வந்தார். வில்லிசை கேட்க வருவோரையும் முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதித்தார். அரசு மேற்கொள்ளும் விழிப்புணர்வை, திருநங்கை கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி வருவதை அறிந்த சுகாதாரத்துறையினர், மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் சந்தியா தேவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2023 – 2024ம் ஆண்டிற்கான ‘சிறந்த திருநங்கை விருது’ திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.