குவைத் தீ விபத்தில் 43 பேர் பலி..!

 குவைத் தீ விபத்தில் 43 பேர் பலி..!

குவைத் தீ விபத்தில் 43 பேர் பலியானதற்கு ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களே காரணம் என அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா தெரிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்த 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; எஞ்சிய 3 பேர் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மேலும் தீ விபத்தில் சிக்கிய 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர்கள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து நிகழ்ந்த கடிட்டம், கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமானது. தீ விபத்து சம்பவ இடத்தை அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் ஷேக் ஃபகத் யூசுப் சவுத் அல் ஷாபா, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விதிகளை மீறுவதுதான் இத்தகைய விபத்துகளுக்கு அடிப்படையான காரணம். தற்போது தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

இதனிடையே குவைத்தில் உள்ள இந்திய தூதரகமானது தீ விபத்து தொடர்பான தகவல்களை அறிய 965-65505246 என்ற உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.

இத்துயர சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில், குவைத் தீ விபத்து தகவலால் அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் அதிகமானோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...