இன்று மாலை உருவாகிறது “ரிமல்” புயல்..!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ‘ரிமல் ’ புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 22 ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து நேற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை புயலாக வலுபெறும் என்று கூறப்பட்டிருந்தது . மேலும் இது, வடக்கு திசையில் நகா்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை புயல் உருவாகும் என அறிவித்த நிலையில், இன்று மாலைக்கு பிறகே புயல் உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிமல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை நள்ளிரவு வங்கதேசம் ஒட்டிய சாகர் தீவு அருகே மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.