பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 14 ) காலை 9.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியானது. இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3, 89, 736 மாணவர்கள், 4,3, 471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இந்நிலையில் இன்று (மே 14) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் http://www.tnresult.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.