‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!

 ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!

பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மவுன்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் இன்று இரவு 9 மணி முதல் 27-ம் தேதி இரவு 9 மணி வரை 2 நாட்களுக்கு அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க் ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு பகுதிகள், அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகள், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகள், அடையார் மண்டலத்தில் ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...