இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் ‘நான் முதல்வன்’ – முதலமைச்சர் நெகிழ்ச்சி..!

 இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் ‘நான் முதல்வன்’ – முதலமைச்சர் நெகிழ்ச்சி..!

‘நான் முதல்வன்’  நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன.  இதில் முதல்நிலை தேர்வு,  மெயின் தேர்வு,  நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களிலும் தேர்வு நடைபெறும்.  இதில் தேர்ச்சி பெற்று, தேர்வு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், 2023 யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் கடந்த ஆண்டு மே 28-ம் தேதி அன்று நடத்தப்பட்டு,  அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.  மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.  நேற்று (ஏப். 16) யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் இந்த தேர்வு முடிவுகளை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டது.  இதில், 1143 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் லக்னோவை சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் பிடித்து உள்ளார்.

சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் பிரஷாந்த் என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.  இந்தியா அளவில் 78வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குடிமை பணிகள் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2022 ஜூன் மாதம் MBBS  படிப்பை முடித்தார்.  2022 ஆகஸ்ட் முதல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில்,  2022 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

‘நான் முதல்வன்’ திட்டம், என் கனவுத்திட்டம் மட்டுமல்ல;  நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! நேற்று வெளியான UPSC முடிவுகளே அதற்கு சாட்சி!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...