தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள்
தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துகள்
எண்சீர் விருத்தம்
1.சித்திரைத் திங்களில்
சீரெலாம் சேரவே
செந்தமிழின் இன்பங்கள்
சேர வேண்டும்
நித்திரை மட்டுமே
நேமமாய் இல்லாமல்
நேர்மையும் நீதியும்
பொங்க வேண்டும்
முத்திரை குத்திவாழ்
மூடர்கள் செய்கையின்
மூர்க்கங்கள் முற்றிலும்
மாற வேண்டும்
எத்திகள் மாறவும்
ஏய்ப்புகள் ஓடவும்
ஏகனின் காவலாய்
வருக நீயே!
2.நல்லோர்கள் வாழ்விலே
நன்மைகள் நாள்தோறும்
நன்றாக ஒன்றாகச்
சேர்ந்து கூட
கல்லாரும் கற்றாரும்
காலத்தால் ஒன்றாகும்
காட்சியால் வேற்றுமை
நீங்கி ஓட
பொல்லார்கள் கொள்ளாத
போகங்கள் எந்நாளும்
போற்றுதல் ஏற்கவே
போகர் பாட
இல்லார்கள் ஏக்கங்கள்
என்றென்றும் போக்கவே
ஏடுகள் போற்றவா
இன்று நீயே!
3.வல்லார்கள் மட்டுமே
வாழ்கின்ற நிலைமாற
வார்த்தைகள் சொல்லிவா
வானைப் போல
அல்லார்கள் யாரேனும்
ஆபத்தைச் செய்கையில்
ஆழியைத் தாங்கிவா
அரியைப் போல
ஒல்லார்கள் மாறவும்
ஓட்டங்கள் காணவும்
ஓங்காரம் ஓதிவா
காற்றைப் போல
சொல்லாதார் நாவிலும்
சோபிக்கும் தமிழாகச்
சோர்வுகள் மாற்றவா
இன்று நீயே!
4.வெற்றிகள் காட்டவா
வேதனை வீழ்த்திவா
வேற்றுமை நீக்கவா
மதியைப் போல
ஒற்றிகள் வைக்காத
ஒழுக்கமாய் உலவவா
ஒளிர்வாக மிளிர்கின்ற
கதிரைப் போல
குற்றிகள் மட்டுமே
குளிராக முடியுமா?
கூடலைக் காட்டவா
குரிசில் போல
தெற்றிகள் தேயவும்
தேசங்கள் மீளவும்
தேயமாய்த் தேடிவா
இன்று நீயே!
5.முற்றிய கதிராக
முழுமையாம் பெண்ணாக
மூர்த்தங்கள் ஏற்கவா
முந்தி நீயே!
பற்றிய கரத்தோடு
பவமான வினைமாற
பாரிலே நீடுவா
பாயம் நீயே!
சுற்றிய ஆண்டுகள்
சுலபங்கள் அல்லவே
சோர்வுகள் மாறவா
சோகு நீயே!
தொற்றிய உறவாகத்
தொன்மைகள் உனதாகத்
தோதாக நீயும்வா
இன்று நீயே!
எத்திகள்..ஏமாற்றுவோர்
போகர்.. தேவர்கள்
ஆழி..சக்கரம்
அரி..திருமால்
ஒல்லார்..பகைவர்
ஒற்றி…அடமானம்
குற்றி..மரக்கட்டை
குரிசல்..தலைவன்
தெற்றிகள்..பாவம் செய்பவர்
தேயம்..பொருள்
பாயம்..மனத்துக்கு உகந்தது
சோகு..பிரகாசம்
….. முனைவர்
ச.பொன்மணி சடகோபன்
கவிதை, குரல் & ஒளி வடிவம் முனைவர் ச.பொன்மணி