சென்னையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு..!
சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் உயர் நீதிமன்ற வளாகத்தில் 1891-ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது மெட்ராஸ் சட்டக் கல்லூரி . பின்னர் 1990-ல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு இக்கல்லூரியில் வெடித்த திடீர் வன்முறை குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம், ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இக்கல்லூரியின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு 2-ஆகப் பிரிக்கப்பட்டு அதே பெயரில், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சட்டக்கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சென்னை சட்டக் கல்லூரி 1891ம் ஆண்டில் கட்டப்பட்டது. கல்லூரியை மூடக்கூடாது. அதை புதுப்பித்து, கல்லூரியை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்று கோரினர்.
அப்போது நீதிபதிகள், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் வைத்துவிட்டு, அதை இரண்டாக பிரித்து இரு மாவட்டங்களில் வைத்துள்ளதால் சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்வதும், மூத்த வழக்கறிஞர்களின் விரிவுரைகளையும் கேட்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.