செந்தமிழ் தேன்மொழியாள்
செந்தமிழ் தேன்மொழியாள் – பாடல்
செந்தமிழ் தேன்மொழியாள் – பாடல்
மைக் இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி கேட்கும் செழிப்பான குரல் வளம் உடையவர் டி.ஆர்.மகாலிங்கம் ஸ்ரீ வள்ளி, நாம் இருவர் நாடகத்துறையில் தன் குரல் வளத்தால் உச்சத்தில் இருந்தவர் சினிமாத்துறையிலும் அந்தக் குரலே வாய்ப்பை நல்கியது. 8வயதில் கலைத்துறைக்குள் நுழைந்தவர். காயாத காணகத்தே என்று உச்சஸ்ஸாதியில் பாடும் போது முருகரே குறும்பு தோய்ந்த முகத்தோடு எதிரில் நிற்பதைப் போல இருக்கும் என்று சிலாகிப்பார்கள் அன்றைய ரசிகர்கள்.
சினிமாவிலேயே சம்பாதித்து சினிமாவிலேயே தொலைத்தவர்களில் இவரும் ஒருவர்.தன் மகனின் பெயரில் தொடங்கிய சினிமா நிறுவனத்தின் மூலம் அவர் எடுத்த மச்சரேகை, மோனசுந்தரம், சின்னதுரை இந்த மூன்று படங்களும் பலத்த தோல்வியைத் தழுவியது. வெற்றி என்றதும் இனிப்பை சுற்றும் எறும்புகளை போல ஒட்டிக்கொண்டதைப் போல இருந்த கூட்டம். அதன்பிறகும் தொடர்ந்து கடன்களை கேட்டு, ஒரு காலத்தில் இணையாய் இருந்த எஸ்.வரலட்சுமி கூட அதற்கு விதிவிலக்கில்லை என்பதே கசப்பான விஷயம்.
பொம்மை தொலைத்த கைப்பிள்ளையாய் அவர் சோழவந்தானில் தங்கிய போது வானின் மின்னல் போல் வந்த வாய்ப்புதான் மாலையிட்ட மங்கை.
சரிந்து போன தன்னுடைய மார்கெட்டை நிலைப்படுத்திக் கொள்ள அந்தப்படம் உதவியது. கண்ணதாசன் அவர்கள் சொந்தமாக தயாரித்த படம் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா புதிய அறிமுகம் என்று தெரிவித்தப் படம். 1958 ல் டி.ஆர். மகாலிங்கம் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் தன் புகழை நிலைநிறுத்திக்கொண்டார்.
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே….என்று தொடங்கும் பாடல்
அந்த சில்லென்ற காற்று மகாலிங்கம் அவர்களின் குரலின் மூலம் நம்மை நோக்கி தென்றலாய் வீசத் தொடங்கும். பாஸ்ட் பீட்டில் படிக்கெட்டில் இருந்து இறங்குவதைப் போன்ற நடன அசைவு, இறுக்கமான உடலைப் பிடிக்கும் உடையில் மைனாவதியின் அழகு பளீரிடும். சகோதரிகள் இணைந்துநடித்த படம் என்ற பெருமைக்கும் உரியது.
பாடல் முடிவுற்றதும் கூட ஆடிய தோழிகளைக் குறித்த மகாலிங்கம் அவர்களின் கேலி ரசிக்கும் படியாக இருக்கும். ஒரு கூர் கத்தியின் உரசலைப் போல மகாலிங்கத்தின் குரல் காற்றைக் கிழித்துக் கொண்டு கண்ணதாசனின் வரிகளில் செந்தமிழ் தேன்மொழியாள் இன்றும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறாள் காட்சிப்படுத்தியவர்கள் இல்லாதபோதும்.