அன்புடன் அனாமிகா (சிறுகதை) | Dr. மோகன் குமார்

 அன்புடன் அனாமிகா (சிறுகதை)  | Dr. மோகன் குமார்

 

மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய்  படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள்.

‘அனாமிகா, நேரம் என்ன? ‘ என்றான் இன்னும் கண்திறக்காமல்.

‘நேரம் ஞாயிறு எட்டு பனிரெண்டு.  நவம்பர் 27, 2027. குட்மார்னிங் நீரவ்’ என்றாள் அனாமிகா. ‘என்ன பாட்டு வேணும்’

‘பூங்கதவே தாள் திறவாய்’ என்றான்

ராஜாவின் கம்பீர ஆர்கஸ்ட்ரேஷன் காதுக்குள் ஜிகர்தண்டா.

போர்வையை உதறி  ஜிம் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்து எழுந்து நின்றான்.

‘அனாமிகா, நிலா எங்கே?’

‘குளித்துவிட்டு சமையலறையில்’

‘தாங்க்ஸ். நான் எழுந்துவிட்டேன்னு சொல்லாதே ப்ளீஸ்’

அந்த மரூன் சிலின்டர் மேசை மீது பச்சைப்புள்ளியால் கண்சிமிட்டி ‘ ஓகே நீரவ்’ என்றது.

சத்தமிடாமல் மெல்ல படுக்கையறையில் இருந்து விலகியவன் மீண்டும் உள்ளே திரும்பி,

‘அனாமிகா, வாட் இஸ் ஹெர் மூட்’ என்றான்.

‘ இதயத்துடிப்பு நிதானமான 72, எனர்ஜி லெவல் ஹை, சின்னதா பாட்டு முணுமுணு.. கண்கள் பிரகாசம் .. ஹாப்பி தான் நீரவ்’

மெல்லிதாய் புன்னகை படர அவன் பாத்ரூமில் நுழைந்து கண்ணாடியில் முகம் ஆராய்ந்து சில்லென்று தண்ணீர் தெளித்து பல் விளக்கி முடியை திருத்தி தாடியை வருடி தன்னைப்பார்த்தே சிரித்து கண்ணடித்தான்.

‘நீரவ் மார்னிங் விட்டமின்ஸ் மறக்காதே’ என, அனாமிகா அலர்ட் அவன் சல்யூட் அடித்து அலமாரியில் இருந்த விட்டமின் பாட்டிலில் ஒன்றெடுத்து முழுங்கினான்.

பின்பு மெதுவாக ஹால் தாண்டி சமையலறை நுழைந்து இன்டக்‌ஷன் முன் ஒயிலாக நின்ற நிலாவின் உருவத்தை ரசித்துக் கொண்டே பூனைக்குட்டி போல் சத்தமிடாமல் அணுகி சட்டென்று இடுப்பை வாகாய் பிடித்து அணைத்தான். டவல் இராப்பில் முடிந்த ஈரக்கூந்தலின் கீழே தப்பி கழுத்தில் ஒட்டிய ஒரு சில முடிகளை மூக்கால் உரசி முகர்ந்தான்.

‘அனாமிகா , பெண்களின் கழுத்துக்கு இயற்கையிலேயே மணம் உண்டு .. மேக் எ நோட்’ என்றான்

பிடிக்குள் தப்புவது போல நெளிந்த நிலா, சலிப்பாய் உச்சுக்கொட்டுவது போல சத்தமிட்டாலும் கண்மூடி அணைப்பின் கதகதப்பை ரசித்துக்கொண்டே ‘ அனாமிகா, எழுந்தவுடன் சொல்லச்சொன்னேனே’ என்றாள்.

‘சாரி. நீரவ் அதற்கு முன் சொல்லவேண்டாம் என்றான். இன்ஸ்டரக்‌ஷன் சூபர்சீட்ட்’

‘ம்கும்’  அவள் அவன் பிடியில் இருந்து திணறி .. ‘அனாமிகா ஆஸ்க் ஹிம் டு லெட் மீ கோ .. விடச்சொல்லு’ என்றாள்.

‘நீரவ் .. நிலாவை விடு .. சமைக்கும்போது தொந்தரவு வேண்டாம்’

‘என்ன ப்ரேக்பாஸ்ட்க்கு‘

‘ அரிசி உப்புமா கூட சுட்ட கத்திரிக்கா கொத்சு.. மசாலா டீ ரெடி’ அனாமிகா கிச்சனில் மஞ்சள் சிலின்டராய் கண்சிமிட்டி விளம்பரம் செய்தாள்.

‘யம்’ என்ற நீரவ் ‘ டக்குன்னு குளிச்சிட்டு வரேன். அனாமிகா ப்ரிபேர் பவர் ஷவர். ‘

குளிக்கும்போது பாத்ரூமில் ஊதா அனாமிகா ‘ இன்னைக்கு ஹேர் ரெஸ்டோர்ர் ட்ரீட்மென்ட். மொராக்கன் அர்கான் ஆயில் ஷாம்பூ & கன்டிஷனர்.’  என்று ஞாபகப்படுத்தி தண்ணீரை நீரவ்வுக்கு சரியான வெப்ப நிலையில் வைத்தாள்.

விசிலடித்து … புசுபுசு உடம்பில் நுறையோடு ஷவர் ரசித்த நீரவ்விடம்..

‘நாளைக்கு உன்னோட டர்ன் சமைக்க.. நான் ரெசிபி சூஸ் பண்ணி ஆர்டர் பண்ணவா இல்ல நீ சூஸ் பண்றியா’  அனாமிகாவின் இனிய குரல்.

‘ நீயே சூஸ் பண்ணு. நிலாக்கு பிடிச்ச டாப் டென் ரெசிபி ல இருந்து ப்ளீஸ்’

‘ஓகே.. பேன்கேக் வித் மேபிள் சிரப் . கொஞ்சம் ப்ரூட் சாலட். டவுன்லோட் பண்ணி தேவையான பொருள் ஆர்டர்ட். நாளைக்கு கிச்சன் டிஸ்ப்ளேல சமையல் முறை ப்ளே ஆகும் நீரவ்’

‘தேங்க்ஸ்’

குளித்து துடைத்து , க்ரீம் , டியோ வாசனையாய். லினன் டாப் கேசுவல் ஷார்ட்ஸ் அணிந்து தலையை விரலாலேயே வாரிக்கொண்டு டைனிங்டேபிள் வந்தவுடன்.. ‘நிலா, நீரவ் இஸ் ரெடி ‘ என்று மஞ்சள் அனாமிகா சொன்னாள். நிலா உப்புமா பரிமாற அணுகும்போது அவள் கிராப் டீ ஷர்ட் உயர, நீரவ்  முகத்தருகே நடமாடிய அவள் ஸீஸா இடுப்பை கன்னத்தால் தொந்தரவு செய்தான். ‘ அனாமிகா, நீரவ் தாடி ட்ரிம்மிங் எப்போ ‘ என்று சிணுங்கினாள்.

‘இன்னும் மூணு நாள் இருக்கு’ அனாமிகா.

‘ உப்புமா சூப்பர் ‘ என்று நீரவ் விரல்காளால் லவ் இமோஜி வரைந்தான். அனாமிகா ‘ நோட்டட். என்ன ஸ்கோர்?’ என்றாள்.

‘ 5/5.. கத்திரிக்காய் கொத்சு ரொம்ப நல்ல மாட்ச். அருமை’

அனாமிகா ‘ ஹை ஃபை’ என்ற சொல்ல நீரவ் நிலாவின் கையில் தட்டி புன்னகைக்க அவள் சிரித்து பிரகாசமானாள்.

புன்னகைத்தவளை இழுத்து மடியில் வைத்து ஆக்டபஸ் விரல்களால்..

‘ இன்டிமசி அலர்ட். ஸ்லீப் மோட்.. ‘ என்று சொல்லி ‘ஒய்ங் ‘ என்று அனாமிகா ஸடான்ட் பை ஆனாள்.

நீரவ் நிலாவிடம் சேட்டை செய்வதை ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு ஜன்னல் திரை பின்னே voyeur ஆக எட்டிப்பார்க்க சட்டென்று மின்சாரத்தடை ஆகி கிச்சன் இருண்டது.

பிணைந்த நீரவ்வும் நிலாவும் சட்டென்று ‘ அனாமிகா என்னாச்சு’ என்றலறி கோரசாய் கேட்க –

‘ கேபிள் பிரச்சனை. பேக்கப் ஜெனரேட்டர் இன்னும் சார்ஜ் ஆகல. நானும் ஸ்லீப் மோட் போகிறேன்.. தேவையான போது மட்டும் ஆக்டிவ் ஆகிறேன்’ என்று சொல்லி ஒய்ங் ஆனாள் அனாமிகா.

நிலாவும் நீரவும் நேரெதிர் டைனிங் டேபிளில் உட்கார்ந்து அமைதியாக இருந்தார்கள். இருட்டில் மெல்லியதாய் backup பல்புகளின் ஊதா வெளிச்சத்தில் அவர்களிருவரின் கண்கள் ஒளிர்ந்தன.

இருவரின் மூச்சும் இளையராஜா ஹார்மனியாய் உஷ் உஷ் என்று ஒலித்தது.

சற்று நேரம் வெளியில் பறவைகள் சத்தமும், ஒரு மோட்டர் பைக் உருமலும் உள்ளே குளிர்பெட்டியின் மெல்லிய கிர்ரும் மட்டும் கேட்க கத்திரிக்கா கொத்சு வாசனை ஏர் ப்ரஷனரின் மல்லிப்பூ சென்டோட இழைந்து மூக்கைக் குழப்பியது.

நிலா கண்ணுயர்த்தி தொண்டையை கனைத்து ‘ நீரவ்..’ என்றாள் முகம் சிவந்து.

நேராக அவள் தன் பெயர் சொன்னதைக் கேட்ட நீரவின் மனதில் குளிர் அருவி போல் ஏதோ வருட…..

‘ஹாய் நிலா ‘ என்றான்.

கிச்சன் ஓரத்தில் மஞ்சள் அனாமிகா கண்மூடி இருந்தாலும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...